புத்தாண்டு வரங்கள்



நின்னை சில வரங்கள் கேட்பேன்!!
எம் மக்கள் நலமுடன் வாழ வழிவகை செய்திடுவாய்!
வெள்ளத்தில் நாங்கள் தொலைத்த மகிழ்ச்சியையும் இதழ் மறந்த சிரிப்பையும் தேடி பரிசளிப்பாய்!!



விதியற்று
எவரும் எமக்கில்லை என்று எம் மன தைரியமொன்றே கதியென்று கிடக்கும் தெருவொர மானுட மக்கள்
இன்றேனும்
யாசிக்காது உணவு உண்ண வரம் அளிப்பாய்!!




பெற்ற கடன் தீர்த்து தன் உயிர் உதிர்த்த உதிரத்தை-வாடகைக்கு
வீதியெங்கும் யாசகம் பெற்றிட அனுப்பிய தாய்-இன்றேனும்
மார் தடவி பால் தந்து அதன் சுகம் அறிவாளோ ?


விலை போகும் மாதரெல்லாம் இன்று ஒரு நாளேனும்-தானும்
கண்ணகி குலத்தோன்றலென ஒரு கணம் எண்ணி வெட்கித் தலை குனிவாரோ?
இவர்களைத் தேடிச் செல்லும் விலைமகன்-யாவரையும்
உன் விழிப் பார்வையால் பஸ்பமாக்கும் வரம் கேட்பேன் !!

இந்நாளில் பிறக்கும் சிசுவணைத்தும் மாற்றுத்திறன் கொண்டு பிறவாமல்-மாற்றம் படைக்கும் ஒருவனாய் ஜனனிக்க வரம் தருவாய்!!


உதிரத்தில் தெரியாத இன,மொழி,ஜாதியை மனிதன் மனதிலும்-வேர்
அறுத்து சமத்துவம் விதைத்திட வரம் தருவாய்!!

பல நூறு ஆண்டுகள் வாழும் வரம் வேண்டாம்-இன்றய
இரவு உறக்கம் நிம்மதியாய் அமைய வரம் தருவாய் !!

நாளை என்ற கற்பனையில் நாட்டமில்லை-இன்று என்ற
நிஐத்தை உணரும் வரம் தருவாய் !!

சொர்க்கம் செல்லும் வரம் தேவையில்லை-சாலையில்
இரத்தம் சிந்தி,சதை தெறித்து,எம் சொந்தங்கள் காணா வண்ணம்
முகம் சிதைந்து மரணம் எம்மை தழுவா வரம் அருள்வாய்

நியாயம் சொல்லா நீதி தன்னை சிரம் கொய்து -சம்ஹாரம்
செய்யும் ஆணை தன்னை வரமாய் நான் கேட்டிடுவேன் !!

எம் தமிழ் இன மக்கள் தம் நாட்டில் நிம்மதியாய் வாழ-இன்றேனும்
விழி திறந்து மனமுவந்து வரமருள்வாய்!!

என் உயிருக்குள் புதைந்திருக்கும் இதயத்தில்-உறைந்திருக்கும்
நண்பர்கள் என்னோடு நெருங்கிப் பிணைந்திடவே வரம் தருவாய்!!

இவ்வரங்கள் தந்த பின்னே உன் கைவசம் வரங்கள் இருப்பின்-என்
மனம் கொண்ட உறுதி சற்றும் குறையாதிருக்க வரம் அருள்வாய் "பராசக்தி"

"வறுமைகள் நீங்கி வளம் செழிக்க
ஏற்றத் தாழ்வுகளின்றி வாழ்க்கை மலர
எம் மக்கள் யாவருக்கும் 2016 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! "
 -அஜய் ரிஹான்

கருத்துகள்