ஆவாரம் பூ [பாகம் 1]


பனி விலகாத அதிகாலை - அழகான முத்துமலை கிராமம் !!


ஆத்தங்கரையோர குடிசையில்

சேவல் கூவும் முன்னே தூங்கும் முகங்களை எழுப்பியது
பொன்னுதாயின் அழுகுரல்
பனிக்குடம் உடைந்து பூவொன்று உதித்தது ! சூரியன் முகம்
பார்த்து சிரிக்கும் மலர் போலே

வயக்காட்டின் நடுவே

உறவொன்றும் இல்லாமல் தன் உதிரத்தின் உயிரை உந்தித் தள்ளி
சுவாசத்தில் புயல் வீசி
வீறிட்டு அழுகையோடு வந்தவனை கதிர் அறுக்கும் வாளால் பந்தக்கொடி அறுத்து வீர மகன் நெற்றியிலே முத்தமிட்டாள் கருப்பாயி

முத்தாலம்மன் கோவிலிலே

ஜோசியக்கிழவாடி தாடியை தடவிக்கொண்டு வானம் பார்த்து,
காற்றில் மிதக்கும் தெய்வத்திடம் அருள் வாங்கி
பொன்னுதாயின் மவளுக்கு பேச்சி என்றும்,
கருப்பாயின் மவனுக்கு முத்தையன் எனவும்
தன் பொக்கை வாயால் பெயர் வைத்தான் !

கடவுள் உண்ட பொங்கல் போக மீதியெல்லாம்
பூவரச இலையிலே படுத்து மக்கள் தொண்டை நோக்கி பயணம் போனது !

ஆலமரத்தடியில்

காற்றில் ஆடும் தூளியில் ஒய்யாரமாய் பேச்சி தூங்க, முத்தையனோ
குடித்த பால் வாசனை மாறாது இன்னும் பால் குடித்துக்கொண்டிருப்பது போலே கற்பனையில் உறக்கம் கொள்ள!!

பெத்தவளோ பாவம் வயக்காட்டில் முதுகெலும்பு வளைய நாத்து நட !!

ஆண்டு சில கழித்து

முத்தையன் வீட்டில் காய வைத்த கோதுமையை கொத்தித் தின்னும் காக்கையை விரட்டும் சிறுதேர் பருவத்தை எய்திருக்க,
பேச்சியோ அம்புலியை கூப்பிட்டு விளையாடும் வயதை தொட்டிருக்க!

அவனோ
தத்தித்தாவி நடந்து,விழுந்து,தவழ்ந்து குடிசையின் முற்றத்தில் கட்டியிருக்கும் பசுவின் மடியில் பால் பீய்ச்சி குடித்தும்,சேவலை துரத்தி அது பயந்து ஓடுவதை கண்டு மகிந்தும் சிறுசிறு சேஷ்டைகள்
செய்தான் !!

அவளோ
வீட்டு வாசற்படியில் கிடக்கும் கோலப்போடியில் உருவமில்லா கோலம் போட்டும்,
சொப்புச் சொப்பாய் குட்டி பாத்திரங்கள் வைத்து மண்ணை குழைத்து உணவு சமைத்து பெண்மையின் முதற்படியில் கால் பதித்தாள் பேச்சி !!


காட்டில் உழைத்தாலும் ஏட்டுப் பாடம் வேணும் என்று மகனை பள்ளிக்கூடம் சேர்த்து விட்டாள்
முதல் நாள் முந்தானை பிடித்து ரயில் பயணம் போவது போலே பள்ளிக்கூடம் வரை போனான்.
கண்டிராத முகங்கள் - தானாய் கண்களில் சாரல் மழை!

வேப்பண்ணை வாசம் வீச தலையில் செம்பருத்தி வைத்து, காலில் கொலுசுகள் கொஞ்ச
பேச்சி இவன் பின்னே - பள்ளிகூடத்தில் !!





மழலை பேசும் பிஞ்சுகள் அழுதும்,சிரித்தும்,மௌனமாய்,ஆத்தா என கதறியும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாவனை காட்ட !

அடிக்கும் வெய்யிலும் வண்ணக்குடையில் பட்டுத்தெறிக்க - சேலை மடிப்பை போலே அழகாய் குடை மடக்கி வகுப்புக்குள்  வரும் ஸ்டெல்லா டீச்சர் - முத்தையன் மட்டும் அன்பால் ஒரு பார்வை
வீசினான்

அந்த பார்வைக்குள் சில எதிர் கால நிகழ்வு ஒளிந்துள்ளதை அவன் அறியவில்லை !!

சான்றோன் ஆவதும், மூடன் ஆவதும் , திருடன் ஆவதும் நிர்ணயிப்பது கரும்பலகையில் அவன் முதன் முதலாய் எழுதும் 'அ,ஆ '- மழலைக்
குரல்கள் பள்ளி முழுவதும் ஆக்கிரமித்தன !

மாலையில் பள்ளி முடிந்து ,விண்ணில் பாய்ந்த ஏவுகணை போல பள்ளிவாசக் கதவோரம் நிற்கும் கருப்பாயியை நோக்கி பாய்ந்தது முத்தையன் கால்கள் !!

முதல் பார்வை
வயதோடு வகுப்புகள் முன்னேற ,காலையில் ஆடுகுட்டிகளை மந்தையில் இருந்து ஓட்டிச்சென்று ஆத்தோரம் மேயவிட்டு ,வீடு நோக்கி வந்த வேளை!




வெண்கல சொம்போடு கலப்படம் இல்லா புன்னகையோடு முத்தையன் வீட்டு வாசலில் பேச்சி !!

ஆத்தா பால் வாங்கியார சொல்லுச்சு....முத்தையன் கேட்ட முதல் ஒருவரிக் கவிதை !!

சிற்பி கைப்பட காத்திருக்கும் சிலை போல நின்றான் முத்தையன் !!

-தொடரும் !!


கருத்துகள்