நெய் மணக்கும் பொங்கச்சோறும்,நிலக்கடலையோடு கலந்த புளியோதரையும்,கும்பல் கும்பலாய் வரிசையில் நின்று வாங்கி தின்று கொண்டிருந்த மனிதர்களும்,வீசி எறிந்த இலையில் மீந்து கிடந்த மிச்சத்தை
தரையில் கிடக்கும் புழுக்களும்,எறும்புகளும் "முத்தாலம்மன் " பிரசாதத்தை
ரசித்து சப்பிட்டுக்கொண்டிருந்தது - வரம் ஏதும் கேக்காமல் !!
முத்தையனும் பேச்சியும்
ஜவ்வு மிட்டாய்க்காரனிடம் கையில் கடிகாரம் போலவும்,தோடு போலவும்
மிட்டாய் வாங்கி மகிழ்ந்திருக்க,அருகே வீரென்று சுற்றிக்கொண்டிருக்கும் ராட்டினமும்,தேர் கடைகளும்,விளையாட்டு பொம்மைகளும் அவர்களை சந்தோஷத்தின் உச்சத்தில் வைத்திருந்தது !!
கோவிலினுள்ளே
தக தகக்கும் நெருப்பில் மஞ்சள் புடவை கட்டிய பொன்னுத்தாயும், கருவாச்சியும் "பூ மிதித்து" தம் மக்களுக்காக வேண்டி மனமுருகி விட்ட
கண்ணீர் பரந்து கிடந்த நெருப்புக்கட்டியில் மாயமாய் போனது !!
வீடு திரும்புகையில்
அடர்ந்த காட்டுப்பகுதியும் சலசலக்கும் தென்னை மரமும் சலனமாய் ஓடும்
காவேரி ஆற்றுச் சத்தமும் சற்றே பயமுறுத்தச் செய்தது பேச்சியை!!
மண் தரையில் வளைந்து நெளிந்து சென்ற கட்டுவிரியன் ஓவியம் பார்த்து
உள்ளுற பயந்தே போனாள் பொன்னுத்தாயி!!
காலையில்
மல்லிச் சுக்குக் காப்பியோடு பேச்சியை எழுப்ப அவளோ நேற்றைய பயத்தின் உச்சத்தில் உறைந்திருந்தாள்!
காவி வேட்டியும்,வேப்பிலை கொத்தோடு,ஊதுவத்தி புகையில்,எரியும் அகல்
விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாய் தெரிந்தான் சிங்காரம் காத்து ,கருப்பு , பில்லி ,சூனியம், ஏவல்இவையே அவன் தொழில் - ஈ ஒட்டிக் கொண்டிருந்தவனிடம் மந்திரிக்க வந்து சேர்ந்தனர் பேச்சியும் அவ
ஆத்தாளும் !!
ஏலே கருப்பா இறங்கி வாடா! உன் கூட்டாளி காத்து கருப்ப கூட்டி போடா !
வேப்பலை கொத்தால் தலையில் விசிறி விட்டு துண்ணூறு போட்டு மந்திரிச்சு புள்ளைய பாத்து "போ கண்ணு,நீ வூட்டுக்கு போறதுக்குள கருப்பன் ஓடிருவான் " ன்னு தெம்பு சொன்னான்.
வீட்டுக்கு வந்தவுடனே கம்பு தோசையும்,கொள்ளுத் தொவையலும் செஞ்சு குடுத்தாள் பொன்னுத்தாயி!!
கேணியில் உற்றெடுத்து ஓடும் தண்ணியை வாளியில் சேந்திக் கொண்டு குடிசையை பார்த்து வந்து கொண்டிருந்தாள்.
முத்தையன் பள்ளிக்கூடம் கெளம்பும் போது கருவாச்சியிடம்
"ஆத்தா முக்கரூவா குடு,கெழங்கும்,மாங்காயும் வாங்க" ன்னு ஒட்டாரம் புடிச்சுக்கிட்டிருக்க.கருவாச்சி தூக்குச்சட்டியில் பழைய சோறும்,கொஞ்சம் வறுத்த கருவாடும் வெச்சு கால்ரூவா துட்டு குடுத்து தலை வருடி சமாதானப் படுத்தி அனுப்பினாள்.
மொக்கையன் வயக்காட்ட கடக்குற அப்போ
கொலுசு சத்தம் சினு சினுக்க பேச்சி வந்து சேர்ந்தாள்,முத்தையன் அவள் முன்னே நடக்க இவன் அவள் நிழலை தொடர்ந்து நடந்தான்.இரட்டை ஜடையை இணைத்தது கனகாம்பரம் !!
சட்டென்று அவள் ஜடையை வெடுக்கென்று பிடித்து இழுத்தான்! என்னடா முத்து லொள்ளு பண்ற,ஆத்தா கிட்ட சொல்லிபுடுவேன் பத்துக்கோ என கோவமில்லாமல் சொன்னாள், அவன் செல்லக் குறும்புகளை ரசிக்கும் முதல் ரசிகை அவள் தானே!!
தென்னை ஓலையில் கீத்து பின்னி அதில் மாங்காய் பத்தை,வேக வைத்த கெடலக்காய்,இலந்தை பழம்,இஞ்சி முட்டாய்,தேன் மிட்டாய்,சுட முட்டாய்,எல்லாம் பரப்பி வெச்சு உக்காந்திருந்தாள் குப்பாயி கெழவி !!
குப்பாயியின் தின முதல் போணி முத்தையன் தான்,அவளுக்கு அவன் செல்ல பேரன் போலாவான்!! அவனும் அவளை என்றும் செல்லமாய் "அப்பத்தா " குப்பிட்டு வந்தான்!!யாருமில்லாத அவளுக்கு அது ஒரு இன்பத்தை தந்தது !!
ஸ்டெல்லா டீச்சர் எல்லா பசங்களையும் ஏற்றத்தாழ்வின்றி,ஜாதி பாரது அன்பையும் ,ஒழுக்கத்தையும் சமமாய் சொல்லித்தந்தார்!! முத்தையன் அளவற்ற அன்பை வைத்திருந்தான் ஸ்டெல்லா டீச்சர் மீது!!
நாட்கள் கடக்க உருவமும் பருவமும் மாற
மழலை குணம் மட்டும் மாறாமல் பேச்சியும் முத்தையனும் நல்ல நண்பார்களாய் - இரட்டை ஜடையெல்லாம் ஒற்றை ஜடையாய் மாறி இருந்தது பேச்சியிடம் !!
மழை பெய்யும் வேளை - சூரியன் மறைய காத்திருக்கும் பொழுது
மொட்டு விட்டிருந்த மல்லிகை தன் முதல் இதழை விரித்தது - மலர்ந்தது மல்லிகை மட்டும் அல்ல பேச்சியும் தான்!!
வசந்தம் வீசும்...!!
கருத்துகள்
கருத்துரையிடுக