ஆவாரம் பூ [பாகம் 5]



"ஆத்தா...!! என அலறினாள் பேச்சி,என்னமோ ஏதோ என அலறிக்கொண்டே உள்ளே பதறியடித்துக்கொண்டு வந்தாள்.என்னா கண்ணு என்னாச்சு,என்னா பண்ணுதுன்னு கேட்டா பொன்னுத்தாயி!!


ஒன்னும் சொல்லத்தெரியாம  விம்மி விம்மி அழுதா பேச்சி, பொன்னுத்தாயி பொறவு நாடிய புடிச்சு பாத்துட்டு தம் மவளுக்குள்  பெண்மைக்குரிய ஐவகை குணங்கள் துளிர் விட்டிருப்பதை கண்டு ஆனந்தம் அடைந்தாள்.

உயிர் எழுத்தாய் இருந்தவள் இன்று ஒரு அழகான கவிதையானாள், நாணம் எல்லாம் கன்னம் சிவக்க பரவி ,வெட்கம் எல்லாம் கருமையான வானவில்லாகி கண்ணை சுற்றி கிடக்க, நிலத்தை பார்த்து நின்ற பேச்சியை "தலையில் ஒரு குடம் தண்ணிய உத்தி, ஏட்டி !! கட்டியிருக்க துணிய பொடக்காலில வடக்கால போட்டுபுட்டு மாத்துத்துணி கட்டிக்கிட்டு வா !! நான் போயி  கருவாச்சியையும், உன் அத்தையையும் கூட் டியாறேன்னு சொல்லிபுட்டு கிளம்பினாள்.

சாதி சனமெல்லாம் வீட்டு முன்னாடி வந்து நிக்க, ஊர் கெழவி ஓன்னு "ஏம்பா ஆம்பலைங்களெல்லாம் போங்கப்பா, தாய்மாமன்  வீட்டுகாரங்க மட்டும் நில்லுங்க பொண்ணுக்கு ஓலை கட்டோணும்,சடங்கெல்லாம் மூணாம் நாள் வெச்சுக்கலாம் சொல்லிப்புட்டு உள்ளார போச்சு கெழவி !

 பச்சை ஓலையில் மறவு கட்டி பேச்சி குனிந்த தலை நிமிராது ஒரு மூலை பார்த்து குத்தவைத்து உட்காந்தாள்! அந்த நேரம் பார்த்து கெழவி உலக்கையை கொண்டந்து பேச்சிக்கு பக்கத்தால வெச்சுபுட்டு என்  கண்ணு, இத கூடவச்சுக்க காத்து, கருப்பு ஏதும் அண்டாது.ஆம்பளைங்க மொவத்த பாக்காத கண்ணு , அடக்க ஒடுக்கமா இருக்கோணும், இன்னும் சில பழமொழியும், நியாமெல்லாம் சொல்லிபுட்டு ஆடியசஞ்சு கெளம்புச்சு.

ஒன்னும் சொல்லத்தெரியாம பேந்தப்பேந்த முழிச்சுக்கிட்டு இருந்தா பேச்சி,
பயந்து கெடந்த தம் மவளுக்கு தெம்பூட்ட "ஏல பேச்சி, எதுக்கு பயந்து கெடக்கிரவ ? இது எல்லா பொம்பள புள்ளைங்களுக்கும் நடக்கிறது தான்.நல்லா ஆகரமான சோறு தண்ணி தின்னா எல்லாம் சரியா இருக்கும் கண்ணு எதையும் போட்டு ஒலட்டிகாம இந்த பால குடிச்சுபுட்டு தூங்கு புள்ள. அந்த முத்தாலம்மன் கூடவே இருப்பான்னு சொல்லிப்புட்டு கிளம்பினாள் பொன்னுத்தாயி - உள்ளம் நெறைய சந்தோஷத்தோடு!!

மூணாம் நாள்
குழந்தைத்தனம் மாறாமல் கனவுகளில் நட்சத்திரமும், தேவதைகளும், விளையாட்டு பொம்மைகளும், வாங்க முடியா தின்பண்டமும், வண்ண வண்ண துணிமணியும்,காதில் தினம்தினம் காணும் ஈக்குமாத்து குச்சி இல்லாமல் லொலாக்கும், ஜிமிக்கியும் போட்டு ,மேகங்களை துரத்தி மகிழ்ந்து சிரித்தவாறே உறங்கிக்கொண்டிருந்தாள் பேச்சி !

பன்னையக்காரரிடம் செலவுக்கு கொஞ்சம் காசு வாங்கிகிட்டு வர வழியில் கருவாச்சியையும் கூட்டிகிட்டு, புதுசா ஒரு பாவாட தாவணி வாங்கிகிட்டு, இளம் ஆட்டுக் கறியும்,வெடக்கோழி இரண்டும் வாங்கிக்கூடையில் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.முத்தையனோ இந்த சங்கதியெல்லாம் தெரியாமல் வழக்கம் போல் பள்ளிக்கூடம் போனான்!

பொன்னுத்தாயி வீட்டில் பத்து, பதினைந்து பேர் கூடி இருந்தனர், அவரவர் சொந்தக்கதை, சோகக்கதை பேசிக்கொண்டும், நாத்தனர், மாமியார் மருமகள் சண்டை கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் காத்தில் பரவிக்கொண்டிருந்தது.அதே சமயம் கருவாச்சி அடுப்பு மூட்டி சமையல் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.


அம்மியில் சோம்பு, பட்டை,சீரகமும், சீராய் கலந்து அரைத்து,சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு எண்ணெயில் வதக்க,கோழிகள் செய்த பாவத்துக்கெல்லாம் எண்ணெய்ச் சட்டியில் தண்டனை கிடைத்தது போல துள்ளிக் குதிக்க, மிளகாய் பொடியும், அரைத்த மசாலாவும் கலக்க அந்த வாசனை அங்கிருந்த சொந்த பந்தம் மூக்கில் நுழைந்து பசியை தூண்டியது!!

பேச்சி முதல் முதலாய் தாவணி போட்டு, இரவல் வாங்கி வந்த ஜிம்மிகியோடு ஒற்றை ஜடையில் மல்லிகையும்,இவளை போலே ஒரு ரோஜாவும் அலங்கரிக்க - கண்ணாடியில் தன்னை ரசித்துக்கொண்டிருந்தாள்!

அடுக்கி வெச்சிருக்கும் தட்டுக்களில் இருக்கும் தின்பண்டங்களை ஆவலோடு பாத்துக்கொண்டிருக்க, வந்த மக்கள் அனைவரும் சிவந்த அவள் கன்னங்களில் சந்தானம் பூசி, பூக்கள் தூவி, முடிந்த மொய்யை வைத்து விட்டு பந்தியை பார்த்து சென்றனர்.

அன்று மாலை
வந்த சனமெல்லாம் கிளம்பி இருக்க, கருவாச்சி பாத்திரபண்டமெல்லாம் கழுவி வைத்துவிட்டு மீந்து கிடந்த கோழிக் குழம்பை துக்குச்சட்டியில்   ஊத்திக் கொண்டு பொன்னுத்தாயிடம் சொல்லச் சென்றாள்.

ஒருகணம் கருவாச்சியை கண்ணீர் வழிய கட்டியணைத்து அழுதாள், அர்த்தமுள்ள ஒரு பார்வையால் அவள் கண்களை துடைத்து விட்டு, முத்தையன் வந்துருவான், நான் வாறன்,மருமவள பாத்துக்கோன்னு சொல்லிவிட்டு கிளம்பினாள் கருவாச்சி.

பள்ளிக்கூடம் விட்டு வந்த முத்தையன் "ஆத்தா எங்க போயிருந்த இம்புட்டு நேரம் காணல, பசிக்குது சோறு போடுன்னு சொல்லிவிட்டு பின்வாசலில் முகம் கழுவ போனான்.உள்ளிருந்து கருவாச்சி "முத்து,நம்ம பொன்னுத்தாயி அத்தை வூட்டுல விஷேசம்,அதான் நேரமாயிட்டது. உனக்கு புடிக்கும்னு கோழிக் கொழம்பு  கொண்டாந்தேன்" .கொஞ்ச நேரம் இரு உலை கொதிக்குது உனக்கு சுடு சோறு வைக்குறேன், அந்த சுள்ளிய கொண்டாந்து போடு அதுந்தன்டி இந்த அதிரசத்தையும், தினமாவையும் தின்னுன்னு கொடுத்துவிட்டு அடுப்பை கவனிக்கலானாள்.

"ஆத்தா அத்தை வீட்ல என்ன விசேஷம், என்கிட்ட சொல்வே இல்ல" என கேக்க, ஏலேய் அது உனக்கெல்லாம் சொன்னா  புரியாது, பேசாம தின்னுன்னு அதட்டினாள் செல்லமாக.

இனிக்கு எங்க பள்ளிகூடத்துல டாக்டருங்க எல்லாம் வந்தாங்க, நம்மூருல புதுசா ஆஸ்பத்திரி ஆரமிச்சு இருக்காங்கலாம், என்கூட படிக்குற எல்லாத்துக்கும் ஏலவசமா கண்ணு,மூக்கு காது எல்லாம் பாத்தாங்க.அவுங்க எப்படி பாத்தாங்கன்னு உனக்கு செஞ்சு காமிக்றேன்னு சொல்லிட்டு மூலையில கெடந்த சின்ன டப்பாவுல நூல சுத்தி அத காதுல மாட்டிகிட்டு "ஆத்தா நல்லா மூச்சு விடு" அப்படின்னு சொன்னது தான் தாமதம் அவனை கட்டிப்பிடித்து உச்சி மொகர்ந்து ஆனந்த கண்ணீர் விட்டாள் கருவாச்சி!!

அடுத்த நாள் காலையில்
முத்தையன் பள்ளிக்கூடம் கிளம்புகையில் அவன் வீட்டை அடைந்தார் ஸ்டெல்லா டீச்சர்,கைகால் ஓடாதவளாய் வாங்க டீச்சரம்மா,நல்லா இருக்கீங்களா? முத்தையன் ஒழுங்கா படிக்கிறானா? என கேட்டுக்கொண்டே ஒரு குவளை மோரை கொண்டு வந்து குடுத்தாள் கருவாச்சி. "அவனுக்கென்ன நல்லா படிக்கிறான்,வாலு தான் கொஞ்சம்,இங்க கொஞ்சம் வேலையா வந்தேன் அதான் அப்படியே முத்தையன கூட்டிகிட்டு போலாமுன்னு " டீச்சர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள முத்தையன் பைய மாட்டிகிட்டு வந்து நின்னான்!!

டீச்சரும் முத்தையனும் பேசிக்கொண்டே பேச்சி வீட்டை கடக்க
அவளோ பள்ளிக்கூடம் போகணுமுங்குர நெனப்பே இல்லாம பல்லாங்குழி விளையாண்டுகிட்டு இருந்தா,இந்த முத்தையன் பய வாய வெச்சுகிட்டு கம்முனு இல்லாம "என்ன புள்ள பள்ளிக்கூடம் வரலியா? நேத்து வூட்டுல விஷேசமாமாம் சொல்வே இல்ல என கேட்டவுடன் பேச்சி "எங்காத்தா ஆம்பலைங்கலோடலாம் பேச கூடாதுன்னு சொல்லிச்சுன்னு சொல்லிபுட்டு முதல் முறையாக வெட்கமும்,சிரிப்பும்,நாணமும் கலந்து ஒரு பார்வையை வீசிவிட்டு வீட்டுக்குள் ஓடினாள்!!

 ஸ்டெல்லா டீச்சர் முத்தையனை பார்த்து ஒரு குறும்புப் பார்வை பார்த்தாள்.

அந்நேரம்  அங்கு வந்த பொன்னுதாயி "ஏலே உனக்கு வெவஸ்தையே கெடையாது மருவனே !! அவ பள்ளிக்கூடம் வரமாட்டா!! அவ பெரிய மனுஷி ஆயிட்டா,இதை கேட்ட பேச்சியின் முகம் சுருங்கிப் போனது!!

அவன் அடுத்த கேள்வி கேக்கறதுக்குள்ள ஸ்டெல்லா டீச்சர் பொன்னுத்தாயை பார்த்து சிரித்து விட்டு அவனை கூடிக்கொண்டு கிளம்பினாள்.

இதுவரை தன்னுடன் தினமும் விளையாடி,ஒன்றாய் பள்ளிக்கூடம் போய் வந்த முத்தையன் மட்டும் இன்று தனியாய் போவதை பார்த்த அவளுக்கு ஏதோ செய்ததது.

சாயங்காலம் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் முத்தையன், பேச்சி  அவனிடம் என்னடா கோவமா? ஆத்தா தான் போகக்கூடாதுன்னு சொல்லிச்சு!நான் என்ன பண்ணட்டும் சொல்லு.சரி வா விளையாடலாமான்னு கேட்ட பேச்சியை பார்த்து "நீதான் பெரியமனுஷியாமுல ஓங்குடலாம் வெளையாடக் கூடாதுன்னு டீச்சர் சொல்லியிருக்காங்கன்னு சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சிட்டாய் பறந்தான்.

எங்கிருந்து தான் வந்ததோ அவ்வுளவு கோவம் பேச்சிக்கு, கையில் வைத்திருந்த பல்லாங்குழியை வீசி விட்டு மௌனமாய் போய் வீட்டுக்குள் உக்கந்தாள்.

கருவாச்சியிடம் முத்தையன் ஒரு வெள்ளை காகிதத்தில் கைநாட்டு வைக்க சொல்லி அடம் பிடித்தான், அது என்னதுன்னு படிச்சு சொல்லு கண்ணு ஆத்தா கைநாட்டு வச்சுத்தாரேன்னா!!

கண்தானம் செய்யறதுக்கான விண்ணப்பம் ஆத்தான்னு சொன்னான், எங்கயோ பெய்யுற மழைக்கு இவ இதயத்தில் மின்னல் இறங்கியது!!!

அங்கே அவளோ
"ஆத்தா நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போவேன்னு" ஒத்தக்காலில் நின்றாள்!!

காகிதமும் பயணமும் தொடரும்!!

கருத்துகள்