இன்று!!
எல்லோருக்கும் விடிந்த பொழுது முத்தையன் வீட்டில் மட்டும் இருளாகி போனது! எப்பொழுதும் முதல் ஆளாய் எழுந்து வாசல் தெளித்து, கோலம் போட்டு, தொழுவம் கூட்டிப் பெருக்கி, பால் கறந்து காப்பி வாசம் மணக்க தினமும் முத்தையனை எழுப்பும் கருவாச்சி மீளா துயில் கொண்டாள்.
ஆத்தா எந்திரி, ஆத்தா எந்திரி
என தன் மவனின் அழுகுரல் கேட்டும் அவன் கண்ணீரை துடைக்க முடியாமல் சர்வமும் அடங்கிப் போய் படுத்துக்கிடந்தாள் கருவாச்சி. என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் அவளருகே படுத்துக்கொண்டு கதறி அழுது கொண்டிருந்தான் முத்தையன்.
அந்நேரம் பாத்து அந்தவழியாக போன சுப்பன் முத்தையனிடம், "ஏன்டா காலங்காத்தால அழுதுகிட்டு கெடக்குறவ ?" என்ன விஷயம் எனக் கேட்டான்.
ஆத்தா எந்திரிக்கல, உடம்பெல்லாம் வெறச்சு கெடக்குன்னு அழுதுகிட்டே சொன்னான்.பதறிப்போன சுப்பன் ஓடிப்போய் கருவாச்சியின் நாடிய புடிச்சு பாத்து புட்டு முத்தையனிடம் "அடேய் முத்து உங்காத்தா சாமிகிட்ட போயிருச்சுடா , சொந்த பந்தம், வேண்டியவங்களுக்கெல்லாம் தாக்கல் சொல்லோணும்டா.என்னடா பண்ண போற ?" பாவமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு சுப்பன் கிளம்பினான்.
தவித்துப் போய் நின்றான் முத்தையன்..!!
நேராய் பொன்னுத்தாயி வீட்டை நோக்கி பறந்தான்.
பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த அவளிடம் என்னவென்று சொல்வது தெரியாமல் கேள்விக்குறியாய் நின்றான்."என்ன மருமவனே காலங்காத்தால இம்புட்டு வேகமா வந்து இருக்கீங்க ஆத்தா எதுனா வாங்கியார சொல்லுச்சா ?" என கேட்டவளிடம் "ஆத்தா ஆத்தா.....சாமிகிட்ட போயிருச்சு, சுப்பன் பாத்துப்புட்டு சொன்னான். எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல அதான் இங்க ஓடியாந்தேன்"ன்னு அவன் சொல்லி முடிக்கும் போது தூக்கி வாரி போட்டது பொன்னுத்தாயிக்கு...!!
அங்கே ஊர் தோட்டிக்காரனிடம் தகவல் சொல்லி தண்டோரா போட சொல்லிப்புட்டு கருவாச்சியின் வீடு நோக்கி விரைந்தாள்.இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பேச்சி தண்டோரா சத்தத்தில் மயக்கம் போட்டிருந்தாள்.
வீட்டில் கருவாச்சி உணர்வற்று,உயிரற்று கிடந்த நிலையைக் கண்டு ஒரு கணம் முத்தாலம்மனை திட்டித் தீர்த்தாள் பொன்னுத்தாயி.சுவரோரம் உட்காந்து உலகம் கடந்து உறக்கம் கொண்ட தன் ஆத்தாளை பார்த்துக்கொண்டிருந்தான் முத்தையன்.
வீட்டு வாசலில் ஒரு கால் உடைந்து ஆடிக்கொண்டிருந்த மர பெஞ்சில் வெள்ளைத் துணி விரித்து பலகை ஒன்றை வைத்து,நல்ல புடவை ஒன்றை மாற்றி, நெற்றியில் குங்குமம் வைத்து, கை நிறைய கண்ணாடி வளையல்களோடும், கால் கட்டை விரல்கள் கட்டப்பட்டும், தலைமாட்டில் அகல் விளக்கும், ஊதுவத்தியும் மணக்க ஊரார் வருகைக்காக காத்திருந்தாள் கருவாச்சி!!
மயக்கம் தெளிந்த பேச்சி ஊரே கேக்க அழுது கொண்டும், காலில் முள் குத்தியது கூட தெரியாமல் புழுதி பறக்க நடந்து வந்தாள்.மூச்சிரைக்க விம்மி விம்மி அழுதுக்கொண்டே வந்து பெஞ்சில் கிடந்தவளை பார்த்து மீண்டும் மூர்ச்சையானாள்!!
ஊர் கிழவிகள் எல்லாம் ஒப்பாரி வைக்க,ஊர் சனமெல்லாம் கூடியது கருவாச்சியின் வீட்டில்.பண்ணையார் தன் இறுதி மரியாதையை கருவாச்சிக்கு செலுத்தி விட்டு மரத்தடியில் உட்காந்தார். என்ன நடக்குதுன்னு தெரியாம சித்தம் கலங்கியவனாய் உட்காந்திருந்த முத்தையனிடம் பண்ணையார் "ஏலே முத்து மனச தேத்திக்க, உங்காத்தா கடுமையான உழைப்பாளி, உண எப்படியாது மேல படிக்க வெச்சு பாத்துப்புடனுமுன்னு கொள்ள ஆசை அதுக்கு...!! பாவம் அதுக்குள்ள போய் சேந்துருச்சு. ஆண்டவனுக்கு நல்லவங்கள கூட வெச்சுக்கோணுமுன்னு ஆசை அதான் சீக்கிரமா கூட்டிகிட்டான். இந்த இந்த காச உன் ஆத்தாவோட கடைசி சடங்குகளுக்கு வெச்சுக்கோன்னு சொல்லிவிட்டு சொல்லிக்காமல் கிளம்பினார் பண்ணையார்..!!
அந்நேரம் அங்கு ஸ்டெல்லா டீச்சர் முத்தையனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் வாடிய முகத்தோடும், கையில் ஒரு மாலையோடும் வந்து சேர்ந்தாள்.
வெறும் பெயருக்கென்று வந்த சொந்தமும், அன்புக்காக வந்த சில நல்ல உயிர்களும், மந்தையில் கருவாச்சிக்காக அழுது கொண்டிருந்த ஆடு,மாடு, கோழிகளும், வானம் இவளுக்காக கண்ணீரை தூறிக்கொண்டிருந்தது..!!
முத்தையன் பண்ணையார் குடுத்த காசை பொன்னுத்தாயிடம் குடுத்து ஆக வேண்டியதை பாத்துக்க கொள்ள சொல்லி விட்டு மீண்டும் சன்னல் அருகே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான். சன்னல் அருகே ஒரு காகிதம் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது....அது !!!!!!
அந்தக் காகிதம் நேற்று அவன் ஆத்தாளிடம் "கண் தானம் " செய்றதுக்கு பள்ளிக்கூடத்தில் கொடுத்த விண்ணப்பம் தான் அது !! அதில் கருவாச்சி சாவதற்கு முன் முத்தையன் சொல்லிய இடத்தில் கைநாட்டு வைத்திருந்தாள்.
இதை பார்த்த முத்தையன் அந்த காகிதத்தை கட்டியணைத்து அழுதான் !!
தெளிந்த முடிவெடுத்தவனாய் அந்த காகிதத்தோடு வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த ஸ்டெல்லா டீச்சரிடம் " டீச்சர், எங்காத்தா தான் இந்த உலகத்தை விட்டு போயிருச்சு, அதோட கண்ணாவது இங்க வாழட்டுமே, இந்த விண்ணப்பத்துல அது கைநாட்டு வெச்சுருக்கு,இதுல அதோட பெயரை எழுதிருங்க " என சொல்லியவனை உச்சி முகர்ந்து கட்டியணைத்தாள் ஸ்டெல்லா டீச்சர்..!!
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் முத்தைய்யனின் இச்செயலை கேட்டு பெருமை கொண்டனர்.
போகும் வழியெல்லாம் பூக்கள் சிந்த, சூரியனும் அவளுக்காக சற்றே மேகத்துக்குள் ஒளிந்து கொள்ள, ஆடிஅடங்கிய மனிதனெல்லாம் உறங்கும் இடத்திற்கு கருவாச்சியும் வந்து சேர்ந்தாள். அவள் கண்கள் மட்டும் இவ்வுலகிலேயே தங்கியது!!
பெண் என்பதால் அவளோ பூமி பாத்து படுத்திருந்தாள், கூட வந்த பெண்கள் எல்லாம் பாதி வழியில் நின்று போக, ஆண்கள் மட்டும் வந்து சுடுகாட்டில் நிற்க, பூமியில் தன் இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தாள் கருவாச்சி.
சடங்குகள் எல்லாம் முடிய, பானையோடு பந்தம் முறிய, காற்றோடு கலந்த உயிரும், நெருப்போடு அவளும் - நினைவுகள் மட்டும் அவனோடு !!
முத்தையன் தன் ஆத்தாளின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தான். பண்ணையாரிடம் கருவாச்சி சிறுவாட்டு சேமிப்பாக கொடுத்து வைத்திருந்ததை வாங்கி கொண்டு ஸ்டெல்லா டீச்சரின் வழிகாட்டுதலில் நடக்கலானான்.
பேச்சியும் பெண்களுக்கும் கல்வி என்பது மிக முக்கியமானது என்பதை உணர்ந்து அவளும் பள்ளிக்கு செல்லலானாள்.
காலம் வினோதமானது, வித்தியாசமானது,இயற்கையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். மரணமும் இயற்கையோடு இணைந்தது தான் - எதிர்த்து நிற்க இயலாதே!!
இந்த கதை இப்படி தான் முடிய வேண்டும் என்று ஆரம்பிக்கவில்லை, சில பயணங்கள் சில அனுபவமாகும்.!! அது போல் தான் இந்த கதை பயணமும்!!
வாழ்க்கை அடுத்த நொடி என்னவென்று தெரியாத புதிரான ஒன்று.இந்த கதையின் முடிவை உங்களிடம் விடுகிறேன்.
முத்தையனும், பேச்சியும் உங்கள் கற்பனையில் வாழட்டும், அவர்களின் பயணத்தை அழகான கிராமத்திலேயே தொடரட்டும்.
-முற்றும்
பெண் என்பவள் சமையலறைக்கும், கட்டிலறைக்கும் என்பதல்லாது சமூகத்தில் பெண்ணின் பங்கீடு இன்றியமையாதது. பேச்சி போல பல கிராமத்து பெண்கள் அடிப்படைக் கல்வி கூட செல்ல முடியாமல் முடங்கி போன கதைகளும், திருமணம் என்னும் பெயரில் அடங்கிப் போன கதைகளும் பல உண்டு.
அறியாமையும், தீண்டாமையும், ஜாதிக் கொடுமைகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எத்துணை பெரியார்களும், அவர்களது கருத்துக்களும் வந்தாலும் இவை மனித இனத்தில் கலந்து விட்ட பிரிக்க முடியாத நஞ்சாகி போனது.
நாகரீகம் என்ற பெயரில் இன்று நாம் எதையெல்லாம் தொலைத்துள்ளோம் என்பதை சற்றே நினைத்து பார்த்தால் தெரியும். கிராமங்கள் எல்லாம் இன்று நவீன வளர்ச்சி என்ற பெயரில் எல்லா இயற்கையும் இன்று செயற்கையாய் மாறிக் கொண்டிருக்கிறது.
கிராமத்தின் அழகெல்லாம் இன்று காணாமல் போய் விட்டது
அழகான வயல்வரப்பு, தித்திக்கிற இனிப்பான கேணித் தண்ணி, அம்மிக்கல், ஆட்டங்கல், உரல், உலக்கை, வீட்டுத் திண்ணை, இரவு நேர பாட்டி கதைகள்,
சனிக்கிழமை எண்ணெய் குளியல், ஒன்றாய் அமர்ந்து உண்ணுவது, ஆற்றில் குளியல், சடங்குகள், மறந்து போன சம்பிரதாயங்கள், என இன்னும் இன்னும் நிறைய அழகுகளை தொலைத்து விட்டு அதை எங்கெங்கோ பணம் குடுத்து தேடிக் கொண்டிருக்கிறோம். சில நேரம் மகிழ்ச்சியையும் அப்படி தான் தேடுகிறோம்.
இது ரயில் பயணத்தில் சிறுது நேரம் சக-பயணியிடம் பேசிக்கொண்டு போவது போல! என் நிறுத்தம் வந்தது, சிறிது உங்கள் பயணத்தையும் நினைவு கூறுங்கள் - சுகமான அனுபவம் உங்களுக்கும் கிடைக்கட்டும்!!
கண்தானம் செய்வோம், பெண்களின் கல்விக்கும் முன் உரிமை அளிப்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக