மாலை நேரத்து மயக்கம்




என் அருகில் நீ  இல்லாத பொழுதுகள்
சில தயக்கம் - கொஞ்சம் மயக்கம்

குளித்து ஈரம் சொட்டும் கூந்தலோடு கொஞ்சி
விளையாடிய துயில் கலையா வேளை

மீண்டும்  சிறு தூக்கம் கேட்டு கெஞ்சி
உன் கை விரல் பிடிக்க - நீயோ
வெட்கமாய் புன்னகை வீசி செல்வாய்

எதிர்பாரா நேரம் என் கன்னம் மீது
முத்தமொன்று பதித்துச் செல்வாய்
ஒரு கணம் மயங்கியே போவேன்

கண்ணாடியில் உன் விழிகள் மை
பூசிக்கொள்ளும் அழகு - ரவி வர்மன்
ஓவியமெல்லாம் கருப்பு வெள்ளை ஆனதடி

நீ என்னுடன் இல்லாத இரவுகள்
உன் போர்வைக்குள்ளே வீசும் உன் வாசம்
தலையணையில் பதிந்த உன் இதழ் சுவடுகள்
என்னோடு கதை பல பேசும்

மழையில் நனைந்த பின்னே உன்
அரவணைப்பில் கதகதப்பாய் நான் உணர்ந்த
தருணங்கள்

இரவெல்லாம் கதை பேசி - விடிய விடிய
நாம் வரைந்த காதல் கவிதைகள்

காலையும் மாலையும் உன்னை கட்டியணைக்கவே
தேடி பித்தனாய் அலைந்திடுவேன் - இதில்
காமம் இல்லை இதுவும் காதல் தானடி

செல்ல பார்வையால் என்னை மிரட்டி
உன் விழி செய்த குறும்புகள் - காதோரம்
கதை சொல்ல வந்து உன் இதழ் செய்த கிறக்கங்கள்

யாரும் அறியாமல் வெட்கம் கொள்வாய்
அதை நான் ரசிப்பதையும் நீயும் அறிவாய்

என் பாதம் மீது உன் பாதம் வைத்து
மீண்டும் நடை பயில - சிறு சிறு புன்னகைகள்

தானாய் என் கைகள் உன் கைகள் தேடும்  - உனக்கு
ஆறுதலாய் சாய என் தோளும் தாய்மடி ஆகும்

சமையல் அறையிலும் சாதனை செய்வேன்
சமையலும் - சில நேரம் உன் துணிகளும்
என் வசம் கைவண்ணம் காணும் பக்குவமாய்

வரிகள் இல்லாத பாடல் போலே தனிமையில்
நீயும் நானும் - வெறுமையை உணர்கிறேன்
காணும் கனவிலும் என்னை களவாடி போகிறாய்

மாலை நேரத்து மயக்கம் நீயடி - நானோ
காதல் என்னும் கானல் நீரில் மடியும் மீனடி

இன்னும் நிறைய,ஆனால் சில தயக்கம்!!

-அஜய் ரிஹான்
(ஆடி மாதம் is on the way)

கருத்துகள்