காதல் அகதிகள்



சூரியனைக் கண்ட மேகம் போலே கரைகிறேன் உன்னை நான் கண்டவுடன்
வண்ண வண்ண பூக்கள் எல்லாம் உன்மேல் மோதி மோதி மாய்ந்து போகும் மாயம் என்னடி?

தீராத ஜீவ நதி உந்தன் கண்களில் பாயக் காண்கிறேன் - அதில் மீளா மயக்கம் கொண்டு தினமும் நீந்திச் செல்கிறேன் !

உன்னருகில் நான் கடக்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் என் இதயம் நொடிக்கு ஆயிரம் முறை துடிக்கும் அதிசயம் ஏனடி?

தினமும் இரவில் வியக்கிறேன் நேற்று பார்த்த நிலவா இதுவென்று ? - பகலில் உன்னைப் பார்த்த பின்பு அந்த கேள்வி எழுவது இயல்பு தானே !!

கவிதைகள் பல படிக்கிறேன், வியக்கிறேன் இன்று வரை உன்னை போல் ஏதும் என் உள்ளம் தொடவில்லை !! - இலக்கியத்திற்கு அப்பாற்பட்டவளோ ?

என்னை மயக்கும் பாடல்கள் பல கேட்டிருக்கிறேன், பார்த்தவுடன் மயக்கும் இசைமகளோ நீ?

பருவம் அறியா வயதில் ஈர்ப்பு விசை பயின்றேன், ஆசான் சொன்னதோ காந்தத்தில் ஆனால் நான் பயின்றதோ உன் கண்களில் !!

 உன் பெயரை சொல்லி மகிழவே தமிழ் எழுத்துக்களை காதலித்தேன்,  இன்று அந்த காதல் பருவமெய்தி கவிதையாகி நிற்கும் அழகை பாரடி !!

மெல்லின, வல்லின, இடையினம் உயிர்பெற்று நிற்குதடி உன் அழகில்!

உன் விழி மின்னல் தீண்டி என் காதல் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களெல்லாம் உன் கூந்தல் மழலைகள் சூடிக் கொள்ளவே  !

அளவெடுத்து தைத்த தேகக் கூட்டில் கோடி சிற்ப விற்ப்பனர் கூடி ஒன்றென்ன வடித்த தேவ கன்னிகையோ நீ ?

உன்னை பார்த்தவுடன், கருவுற்ற நிலவு பெற்றெடுத்த செல்ல மகள்கள் தான் நட்சத்திரங்களோ ? - இதிகாசங்களும்  தோற்றே போகுதடி!


இரவெல்லாம் ஏக்கங்கள், என் சுவாசத்தில் அடிக்கடி புயலடித்துச் செல்லும் உன் நினைவுகள், கனவுகளில் தொலைந்து போகும் என் கண்ணியம்!

அழகான சிறப்பமொன்று வண்ண பட்டு புடவை உடுத்தி என்னருகில் நிற்கையில் மொத்தமாய் தொலைந்தே போகிறேன் !!

தினமும் கனவுகள் பல காண்கிறேன், நீயும் நானும் கடல் நுரைகள் பாதம் தீண்ட, விரல்கள் இறுக்கமாய் கட்டியணைத்து, நெடுந்தூரம் ஒரு பயணம்!

மறுநாள் இரவில், என் மார்பின் மேல் உறங்கும் உன் முகம் பார்த்து மெல்லிய புன்னகை நான் புத்திட, உன் சிணுங்கல்கள் ஒரு அனுபவம் !

விடிந்ததும் உன் போர்வைக்குள்ளே என்னை தேடும் உன் விரல்கள், எழுந்தும்
எழாமல் அரங்கேறும் என் மாயக் கண்ணன் நாடகம்!

இன்னும் பல கனவுகள் - வார்தைகள் வெட்கம் கொள்ளும்!!

வார்த்தைகளால் வாழ்கிறாய் என்னுடன்,
வார்த்தைகளாய் என்னை முத்தமிடுகிறாய்,
கவிதைகளாய் என்னுடன் நீ!!

இன்னும் சொல்வேன் என்னிடம் நீ வந்த பின் !!
அதுவரை தேக்கி வைக்கிறேன் என் தமிழையும், கவிதைகளையும்!!

காதல் விற்கும் சாலையில் அகதியாய் கதியற்று நிற்கிறேன், காதல் சொல்ல மொழி தேடி அலைகிறேன், சொல்லி விட தயக்கமில்லை, சொன்ன பின்பு  இல்லையென்று நீ சொன்னால் இந்த உலகில் நானிருந்து பொருளில்லை!! 

உன் கடைக்ககண்ணால் என் நெஞ்சில் காதல் விதை தூவிப் போவாயோ? - இல்லை காதலில் தோற்றால் இவன் பித்தனாகி போவான் இல்லை சித்தனாகி போவானென்று என் நெஞ்சில் நஞ்சை அமுதாக்கி தருவாயோ?

இது காதலால் தொலைந்தவர்களுக்கும், காதலில் தொலைந்தவர்களுக்கும்!!

-அஜய் ரிஹான்

கருத்துகள்