குருதிப் புனல் - அத்தியாயம் 2


அந்த கடிதத்தின் வரிகள் காற்றில் மெல்ல வருடும் இசையாய் மெல்ல கல்லறை தோட்டத்தில் பரவ....

என்றென்றும் உன்னை நினைக்கிறேன், நீ என்னருகில் இல்லாது தவிக்கிறேன்
உன் ஸ்வாசக்காற்று என்னை சுற்றி பரந்திருக்க ஏங்கித் திரிகிறேன் - உன்னால் தானடி நானும், உனக்காக தானே காத்திருக்கிறேன் வாரம் தோறும் நீ என் மீது வைத்துச் செல்லும் ஒற்றை ரோஜாவிற்காகவும், என்  கல்லறை மீது நீ சிந்தித் செல்லும் இரு துளி கண்ணீரும் - என் ஜீவன் பருகும் அமுதல்லவா!! உன் கைவிரல்கள் கோர்த்து உன்னை ஆறுதல் சொல்லவே துடிக்கிறேன் ஆனால் ஆறடியில் உறங்கிப் போனேனே - என்ன செய்வேனடி!!

என் கண் முன் உன் துகிலுரித்த கயவன் உயிர் பருகி, உன் மானம் தன்னை என் உயிரால் கவசமாளித்து இன்று உன்னக்காக உறங்கிக்கிடக்கிறேன்! - அமைதியாய் ! நான் போன பின்னே நீ வாழ வேண்டும் - அதை தானே என் இதயம் வேண்டும்! உன் கண்ணில் நான் கண்ட கனவெல்லாம் இன்னும் கனவாகவே கரைகிறது,  நீ தினம் உடுத்தும் ஆடைகளில் என் உயிர் ஒளிந்திருக்கும்,  இன்னொரு கயவன் உன்னை தீண்டாது காத்து நிற்கும்.

உறக்கமில்லா என் இரவுகள் இப்பொழுதும் உன்னை சுற்றி, என் நினைவுகள் எப்பொழுதும் உன்னோடு!!
இப்படிக்கு அன்புள்ள ,
மரணத்தை முத்தமிட்ட உன் காதலன்!!

இந்த வரிகள் காற்றில் கரைந்து முடிந்த போது சூரியன் துயிலுரித்திருந்தான்!!

காலையில் தின நாளிதழ் ஒன்றை புரட்டிப்  பார்த்துக்கொண்டிருந்தாள் அனன்யா, நாளிதழ் எங்கும் கொள்ளை, கொலை, விபத்துக்கள், இவையெல்லாம்அவள்  அவள் மனதை ஏதோ செய்தது.அதில் ஒரு செய்தி அவள் இதயத்தை மின்னலென்ன தாக்கியது.

அவள் வசிக்கும் அண்ணா நகரிலிருந்து இருபது மைல் தொலைவில் குரோம்பேட்டையில் ஹரிணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பதினான்கு வயது பள்ளி செல்லும் சிறுமியை அதே பகுதியில் தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்த தினேஷ் (வயது : 20) என்கின்றவன் கடத்திச் சென்று அவளை கற்பழித்து கொலை செய்துள்ளான். இந்த செய்தியை படித்தவள் ஒரு நிமிடம் பெண்களுக்கு இந்த நாட்டிலுள்ள பாதுகாப்பை நினைத்து சிரித்தாள்.

அவள் தன் அம்மாவிடம் "ஏம்மா, இந்த பாவிகள் எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? இவங்கள எல்லாம் கடுமையா தண்டிக்கிற மாதிரி சட்டமெல்லாம் இல்லையா ? மத்த நாட்டுல இருக்க மாதிரி சட்டமெல்லாம் நம்ம நாட்டுல ஏன் இல்லம்மா?  என கேக்க உடனே வசந்தி "அதெல்லாம் நம்ம நாட்டுல அப்படி தான், தப்பு பண்ணவன் காசு வெச்சு இருக்குறவனா இருந்தா அவன் தப்பே பண்ணலன்னு சொல்லுற சட்டமும் இருக்கு, அதே மாதிரி நம்மள போல நடுத்தர குடும்பம், இல்லாதவங்கல்லாம் தப்பே செய்யலானாலும் கோர்ட், கேஸுன்னு பாடா படுத்துற சட்டமும் இருக்கு" சட்டமெல்லாம் பொதுவா இருந்தது அப்போ, இப்போ அப்படி இல்ல அம்மு நாம தான் புரிஞ்சு நம்ம வாழ்க்கை வாழனும். இன்றைய சூழ்நிலையை தெள்ளத் தெளிவாக விவரித்தாள் வசந்தி.

இதையெல்லாம் கேட்ட அனன்யா சற்று தீவிரமான யோசனைக்குள் மூழ்கினாள். அவளை அந்த ஹரிணி பற்றிய செய்தி ரொம்பவே பாதித்திருந்தது.அவள் எண்ணத்தில் எப்போதோ படித்த பாரதியார் கவிதை வரிகள் அவள் மனதில் பாய்ந்தது "நல்லதோர் வீணை செய்தே- அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி!" இன்னும் நினைக்க நினைக்க அவளுக்குள் இருந்த ரௌத்திரம் வெடிக்கத் தயாராய் இருந்தது.

அந்நேரம் அவள் வீட்டிற்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது, காஷ்மீர் எல்லையோர சிறப்பு படையை தலைமை தாங்கி நடத்திய அவள் தந்தை இன்று அதிகாலை இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போரில் இந்நாட்டிற்கு தன்  உயிரை தியாகம் செய்து, நம் நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டியதாகவும் அவருடன் எல்லையில் இருந்த வீரர்கள் ஆறு பேர் வீர மரணம் அடைந்ததாகவும், எதிர் தரப்பில் இருபதிற்க்கும் மேற்பட்ட வீரர்களும் உயிர் தியாகம் செய்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை கேட்ட வசந்தியும்,அனன்யாவும் அழுகை வராத நிலையில் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மறுநாள் காலையில் ராணுவ மரியாதையுடன் பிரிகேடியர் மித்ரன் உடல் வந்து சேர்ந்தது. உறவினர் அனைவரும் தகவலறிந்து வந்து சேர்ந்திருந்தனர்.
அன்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் "காஷ்மீர் எல்லையோரம் இரு ராணுவனித்தார் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரிகேடியர் மித்ரன் வீர மரணம் அடைந்தார்" என்ற தலையங்கம் தாங்கியிருந்தது . தனது கணவரின் உடலின் அருகே வசந்தி சிலை போல உட்காந்திருந்தாள், ஆனால் அனன்யாவோ உடலில் உள்ள கண்ணீர் அனைத்தும் வற்றிப் போகும் படி அழுது கொண்டிருக்க அவளது தோழிகள் அவளுக்கு சமாதானம் சொல்லி தேற்றிக் கொண்டிருந்தனர்.


ராணுவ தலைமை அதிகாரிகள் முதல் அந்த தெருவில் வாழும் சாமானிய மக்கள் வரை அனைவரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அந்த நாள் தான் அனன்யா தன்  வாழ்நாளில் அதிகமாக அழுதது.அவள் தன் சிறு வயது முதல் தன் அப்பாவோடு கழித்த நாட்களை நினைத்து நினைத்து அழ, அங்கு வந்திருந்த ராணுவ உயர் அதிகாரிகள் அனன்யாவிடம் "உன் தந்தை இந்த நாட்டிற்காக வாழ்ந்தவர், நாட்டிற்காக வாழும் வீரர்களின் குடும்ப நிலை இவ்வாறு தான் இருக்கும், உன் தந்தை போலே நீயும் தைரியத்தை மனதில் வைத்துக்கொள். உன்னை மீண்டும் சில நாட்கள் கழித்து சென்னை ராணுவ அலுவலகத்தில் சந்திக்கிறேன் என சொல்லி அங்கிருந்து சென்றார்.

 மாலை வேளையில் இறுதி சடங்கிற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, 
கல்லறை தோட்டத்தில் மணியன் அனன்யாவின் அப்பாவிற்கான கல்லறை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் - குடி போதையில் அல்ல, நிதானமாய்! 

மதங்கள் கடந்து மணம் கொண்டவர்கள் வசந்தியும், மித்ரனும். இறுதி சடங்கின் பொழுது வசந்தி "இந்நாட்டு மண்ணிற்காக வாழ்ந்தவர், இம்மண்ணிலேயே உறங்கட்டும் என்றாள் தன் மதத்தின் கோட்பாடுகளையும் மறந்து!! 

 இம்மண்ணிற்காக உதிரம் சிந்தி, இன்று விண்ணுலகம் சென்றாய்! தூக்கம் தொலைத்து, சொந்த பந்தம் எல்லாம் விட்டு எம் நாட்டிற்காக எல்லையில் நின்றாய்! மீளா உறக்கம் கொண்டு எம் மண்ணிலேயே புதையுண்டாய்!! - உன்னோடு சேர்த்து எம் வீரர்களுக்கும் வீர வணக்கங்கள் என யாரோ தம் அப்பாவிற்காக நாளிதழில் எழுதி இருந்த வரிகள் அனன்யாவிடம் ஒரு புது விதமான வீரத்தையும், பொங்கி கொதித்துக் கொண்டிருந்த ரௌத்திரத்திற்கு புத்துணர்வு அளித்தது.

மித்ரன் கல்லறையில் சகல ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அன்று இரவு கல்லறை தோட்டத்தில்....
இன்னும் என் கடமைகள் முடியவில்லை, என் மரணம் முடிவல்ல, நான் புதைக்கப்படவில்லை என் வீரமும், எண்ணமும் விதைக்கப்பட்டிருக்கிறது!!
விரைவில் என் உயிர் விதைத்த சதையில் ரௌத்திரம் வெடிக்கும்...இந்த வரிகள் காற்றில் கம்பீரமாய் ஒலித்தது!! - மித்ரனின் குரலில் !!!!
https://ajayryhan.blogspot.in/2016/08/kuruthi-punal-3.html

கருத்துகள்