ஒரு சாமானியனின் ஆசைகள்


சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை பார்த்து தனக்குள் பிறக்கும் ரௌத்திரத்தை கருவிலிலேயே கொடிஅறுத்து - சுயநலமாய் என் குடும்பம், குழந்தைகள் என எண்ணி அடுத்த நொடி என் வேலைகளை நோக்கி நடக்கும் உங்களுள் நானும் ஒரு சாமானியன் !!

குடிசையில் படுத்து இரவெல்லாம் நட்சத்திரங்களை மட்டுமே எண்ணி கொண்டிருக்கும் எனக்கும் எண்ணிலடங்கா ஆசைகள் பல உண்டு!

தினமும் காலை காலி  குடங்களோடு தண்ணீர் வண்டி பின் ஓடுவதும், 
தண்ணீர் குழாயில் குடங்களோடு குடங்களாய் வரிசை கட்டி நிற்பதும்,
அங்கு வசதி படைத்தவன் காசு குடுத்து வாங்கி அடுக்கி வைத்திருக்கும் மினரல் தண்ணி கேன்'களை பார்த்து தண்ணீர் குடம் வழிவதை மறந்து நிற்கும் சாமானியன் நான்!!

விரும்பும் பில்டர் காபி முதல், இரவு கொசுக் கடிகள் இல்லா தூக்கம் வரை தினமும் இது போல் ஆசைகளின் உயரம் வளர, அன்றாட செலவுகளில் எனது ஆசைகளும், ஏக்கங்களும் முட்டி மோதி நிலவோடு மறைந்து பின் மறுநாள் காலையில் மறுபடியும் சூரியனோடு உதிக்கிறது இந்த சாமானியனின் ஆசைகள்!!

தெருவில் நடந்து போகையில் எனது அலைந்து ஓய்ந்த கால்களில் கிடக்கும் தேய்ந்த காலணிகள்  புதியது கேட்டு கெஞ்சும், ஆனால் இந்த சாமானியனின் கொஞ்சும் செல்ல மகளின் ஆசை பொம்மை நினைத்து இது மறந்தே போகும்!!

என்னிடம் அதிக விலை சொல்லி விற்பவனிடம், அவன் சட்டை பிடித்து நியாய விலை போக மீதி சில்லறை வாங்கி மகிழ ஆசை தான் இந்த சாமானியனுக்கு!


கட்டாந்தரையில் படுத்து உறங்கும் எனக்கும் பஞ்சு மெத்தையில் உருண்டு உருள ஆசை தான், வேகமாய் என்னை சுற்றி வேகமாய் வீசும் விசிறிகளும், குளு குளு காற்றும் வீச நிம்மதியாய் தூங்கவும் ஆசைதான் இந்த சாமானியனுக்கு!!

வானில் நிலவை பார்த்து தினமும் உறங்கும் எனக்கு என்றாவது ஒரு நாள் விண்ணில் வெண் மேகங்களோடு காற்றை கிழித்துக் கொண்டு பறவையாய் பிறந்து திரிந்திட கொள்ளை ஆசை தான் !!


கள்ளமில்லா  என் காதலியின் விரல் கோர்த்து பூமியை ஒரு முறை சுற்றி வர ஆசை தான் - அதற்கு முன் விழிகள் தைத்து, இதயம் தாக்கும் என்னவள் என் முன் தோன்றிட அளவில்லா ஆசை தான்!!

நொடி நேரம் கூட அவளை பிரியாது, கட்டியணைத்து அந்தச் சூட்டில் கதகதப்பாய் ஜென்மம் வாழ பேராசை தான்!!

ஒரு நாளேனும் ஆதிக்கம் செலுத்தும் இந்த 'ஆண்' என்ற பதவியை ராஜினாமா செய்து என் மனைவி மகிழ பணிவிடைகள் பல செய்து அவள் புன்னகைள்  பல பரிசாய் வாங்கிட இந்த சாமானியனுக்கும் வாழ்நாளில் சில நாள் அமைந்திட ஆசை தான்!!

தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் தாயின் மடியில் படுத்து அவள் என் தலை கோத, என் தலைகனம், கோவம் எல்லாம் அதில் காற்றோடு காற்றாய் கரைத்திட ஆசைதான் !

இரவில் தூக்கம் வந்து இமை மூடும் வரை தந்தையின் பாதங்களில் என் கைகள் சேவை செய்து, எல்லையற்ற அன்பினை யாசித்து நிற்க ஆசை தான்!

சொந்த, பந்தங்கள் எல்லாம் ஏதோ ஒரு விழாவில் மட்டும் இன்-முகம் காட்டி, இதழில் பூட்டி வைத்த சிரிப்பை எல்லாம் கள்ளச் சாவி போட்டு என் முகம் நோக்கி வீசும் முகமூடி மனிதர்களை பார்த்து எனக்கும் கள்ளத்தனமாய் பொய்யாக சிரிக்கத் தெரியாத இந்த சாமானியனை யாரும் ஏசாதிருக்க ஆசை தான்!!

அவசரமாய் கடந்து செல்லும் பாதையில் ஒரு நாளாவது என்னிடம் யாசித்து நிற்பவனிடம் ஏதேனும் குடுத்துச்செல்ல ஆசை தான்!!


பயணங்களில் அண்ணா, அப்பா என்று என்னிடம் யாசித்து நிற்கும் மகளை / மகனை தத்தெடுத்துக் கொள்ளும் பெருந்தன்மை இல்லாமல் போனாலும் ஏதேனும் காப்பகத்தில் சேர்த்து விடும் வல்லமை இறைவன் தந்து விட ஆசை தான்!!

நடந்து செல்லும் போது மிதி வண்டிக்கும், மிதி வண்டியில் செல்லும் போது காருக்கும், இப்படி குரங்கை போலே தாவித் திரியும் என் மனதை நிலையாய் ஒரே மரத்தில் அமர்த்தி வைக்க ஆசை தான்!! 

ஒரே ஒரு நாள் கடவுளாய் உரு மாற ஆசை தான், விலை மகளை தேடிச் செல்பவனையும், திருநங்கையை ஏசிச் செல்பவனையும் நொடிப் பொழுதில் சாம்பலாக்கி கடலோடு கரைத்து விட ரௌத்திரமான ஆசை தான் !!

ஜாதிகள் சொல்லி கொலைகள் செய்பவனையும், பெண்கள் உடல் தீண்டி புசித்து வீதியில் திரியும் காம-மிருகங்களை வேட்டையாடும் வல்லமை பெற்று அவர்களை கொன்று குவிக்க குருதி பொங்கும் ஆசை தான்!!

நம் நாட்டில் பணம் தின்று கொழுத்த முதலைகள் எல்லாம் பதுக்கிய கருப்பு கோடிகள் எல்லாம் சிறகு முளைத்து நம் நாடு வந்து சேராதோ? என தினமும் ஆவலில் ஆசை கொள்கிறேன் - வரி செலுத்தும் சாமானியன் என்ற முறையில்!

இலவசங்களை சொல்லி என்னுடைய உரிமையை யாசித்து நிற்கும் எவருக்கும் விலை போகாமல் என் உரிமையை பதிவு செய்யவே இந்த சாமானிய இந்தியனுக்கு ஆசை!!


இன்னும் என் நாட்டில் மட்டும் நிர்பாயா,ஸ்வாதி,ஜிஷா போன்ற பெண்கள் வெட்டி சாய்க்கப்படும் போது சுற்றி வேடிக்கை பார்க்கும் மக்கள் வாழ்கின்றனர் என்று எண்ணி பார்க்கும் போது என் ஆசைகள் எல்லாம் மாயமாய் மறைந்து போகிறது!! - பாவம் அவனும் என்னை போலே சாமானியனாய் போனதாலோ என்னவோ?!!

தனி மனிதனாய் பார்த்து திருந்தா விட்டால் - 'எதையும் ' திருத்த முடியாது!!

சாகா வரம் வாங்கி வந்து வாழ பேராசை தான் எனக்கும், எல்லா ஆசைகளும் வெறும் ஆசைகளாகவும், கனவுகளாகவும் கரைந்து போவதும்,பிறர் கனவுகள் நம் ஆசைகளை களவாடி போவதும் இந்த சாமானிய மனிதனுக்கு சாதாரணமே!

ஆசைக்கும் ,கனவுக்கும் பஞ்சமில்லை, கனவுகளுக்கு உயிர் கொடுக்கத் தெரிந்தவன் மட்டுமே ஆசைப்பட தகுதியானவன்!! 

ஆசைக்கும் -பொறாமைக்கும் உள்ள இடைவெளி பேராசை தான்!!

சாமானியனுக்குள்ளும் கோப-தாபங்கள் உண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்பவன் தவறானவன் ஆகிறான், அமைதியாய் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழ்பவன் சமூகத்தில் கோழை என்ற பெயரில் சாமானியனாகவே வாழ்கிறான் !!


-அஜய் ரிஹான்

கருத்துகள்