அங்கோர் வாட் - தொலைந்து போன மாபெரும் பொக்கிஷமும் - மறைக்கப்பட்ட மர்மமும்


 அங்கோர் வாட் - எங்கோ கேள்விப்பட்ட பெயர் போலத் தோன்றுகிறதா ? - ஆம் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷம். எங்குள்ளது இந்த அங்கோர் வாட்?  அப்படி என்ன இதில் உள்ளது, இதன் வரலாறு என்ன? ஏன், யாரால், எங்கு எப்படி என்ற என் எண்ணக் குவியலின் தேடலே இந்த கட்டுரையின் முன்னுரையாக இருக்கும்.


அங்கோர் வாட் :  தோற்றம் 

அங்கோர் வாட் 'கோவில்களின் தலைநகரம்' அல்லது கெமெர்  என்று  அழைக்கப்பட்டது , இது தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் கம்போடியா [பழைய பெயர்: கம்பூச்சியா] நாட்டில் உள்ளது. இந்த கோவிலானது உலகின்  இந்து மதம் சார்ந்த ஒரு நினைவுச்சின்னமாகவே இருந்தது என்றும் சொல்லலாம். இந்த கோவிலின் பரப்பளவானது சுமார் 162.6 ஹெக்டர் (ஏறத்தாழ 400 ஏக்கர்) கொண்டது.

முதன்முதலில் இது கோவில் பகவான் விஷ்ணுவிற்காக கெமெர் பேரரசால் கட்டப்பட்ட ஒன்றாகவே இருந்து, ஆனால் பின்னாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் இது பௌத / புத்த மதத்தை தழுவலானது. ஆய்வுகளின் படி இந்த புனித கோவிலானது கெமெர் பேரரசன் இரண்டாம் சூரியவர்மன்னால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு கெமெர் பேரரசு யசோதராபுரா என்னும் இடத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தாக தெரிகிறது.
இந்த கோவிலின் கலைநயமும், சிற்பங்களும், கட்டிட கலைகளும் எவ்வுளவு நுட்பமாகவும், வியக்கும் தன்மையும் கொண்டிருந்தால் அது கம்போடியா நாட்டின் கொடியில் இடம் பெற்றிருக்கிறது என்றால் அதன் சிறப்பை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

கோவிலின் சிற்பங்கள், கோபுரங்கள், அணைத்து வேலைப்பாடுகளும் கெமெர் கலைக்கட்டமைப்பினால் ஆனது. கெமெர் பேரரசின் ஆட்சிக்காலமானது எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த வரலாற்றின் தொடக்கமாய் இரண்டாம் ஜெயவர்மன் தன்னைத்தானே சக்கரவர்த்தியாய் மூடிசூடிக் கொண்டான், அவன் ஆட்சி புரிந்த நிலம் மலை சார்ந்ததாக குறிப்புகள் சான்றளிக்கிறது.

இந்த ஆட்சியின் முதல் நகரமாய் அடையாளப்படுத்தப்பட்டது 'யசோதராபுரா', ஆனால் முதன் முதலாய் இதன் தலைநகரம் 'இந்திரபுரா' என்றும், மேலும்
இந்த மாபெரும் வரலாற்றில் கம்புஜடேசா என்னும் ஒரு பகுதியும் இதன் ஒரு அங்கமாய் விளங்கியதாகவும், இதற்கான ஏடுகள் எதுவும் காணப்படவில்லை என்னினும் சில கல்வெட்டுகள் இதன் வரலாற்றை தாங்கி நிற்கின்றது.

இரண்டாம் ஜெயவர்மன் பற்றிய தகவல்கள் ஸ்டொக் கோக் தோம் கோவிலின் கல்வெட்டுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முதலாம் இந்திரவர்மனின் மகன் முதலாம் யஷோவர்மன் தான் யசோதராபுரா எனும் தலைநகரை நிர்மாணித்தான். இவனது ஆட்சிக்காலத்தில்  நகரில் பினோம் பைகஹீங் என்னும் இடத்தில் தரைமட்டத்திலிருந்து 60 அடி உயரமுள்ள மலையின் மீது கோவில் அமைத்தான் என்றும், மாபெரும் நீர்த்தேக்கம் அமைத்தான் என்றும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் மன்னர்கள் பலர், ஐந்தாம் ஜெயவர்மன் [இரண்டாம் ராஜேந்திரவர்மனின் மகன்] வரை,ஆட்சிகள்  மாறி அங்கோர் வாட் நில பரப்பிலும், சமயங்களிலும் மாற்றங்கள் பல காணப்பட்டன. ஐந்தாம் ஜெயவர்மன் அமைதியான ஆட்சி புரிந்து வந்தான், தனது ஆட்சியில் மேற்கே தனது புதிய தலைநகரை 'ஜெயேந்திரநகரி' அமைத்து, சிறந்த ஆலோசகர்களும், வல்லுனர்களும், கலை விற்பனர்களும், சாணக்கிய புத்தி கொண்டவர்களும் அவனது சபையில் இருந்தனர். மேலும் கொடையுள்ளம் கொண்டவனாகவும் விளங்கினான். இவனது செங்கோலின் கீழ் அங்கோர் - அழகிய உருவெடுத்தது.

அங்கோர் வாட் :  கட்டிட கலை

மதம் சார்ந்த கட்டிட கலைகள் முதலில் கற்கள் கொண்டு தான் கட்டப்பட்டன, பின்னர் அங்கோரிய கட்டிட நிபுணர்கள் செங்கல், செம்மமண், மணல் கற்கள், மற்றும் மரங்களால் கொண்டு அழகிய கட்டிடங்கள் கட்டினர். பழங்கால கோவில் கட்டிடங்கள் பெரும்பாலும் செங்கலால் கட்டப்பட்டிருந்தது. அதற்கு சான்றாக இருக்கும் சில கோவில்கள் 'ஹரிஹரலயா' 'பக்கோங்' . மேலும் பத்தாம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட த கியோ முழுக்க முழுக்க மணல் கற்களால் கட்டப்பட்டதே ஆகும்.
இங்கு ஆலயங்களில் மூலவர் வழிபாடும், அது தெய்வங்களின் வீடாக கருதப்பட்டது. மூலவர் சிவனாக இருப்பின் லிங்க வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. முதலில் சைவத்திலிருந்து பின்னர் வைஷ்ணவத்திற்கு மாறி பின்னர் இறுதி நூற்றாண்டுகளில் பௌத்த மதம் தழுவி இவ்விடம் மதங்களுக்கு அப்பாற்பட்டு நின்றது. இவ்வாலயங்களின் சிறப்பானது இதன் கோபுரங்கள் பறைசாற்றுகிறது.


மற்றும்  கூடுதல் தகவலாக, இவ்வாலயங்களில் உள்ள சுவர்களில் மதம் சார்ந்த அடையாளங்களையும், குறியீடுகளையும் காண முடிகிறது. மேலும் இது இந்து மதங்களின் கடவுள்களின் வீடாக கருதப்படும் மேரு மலையை இந்த புனித ஸ்தலமானது பிரதிபலிக்கிறது.

அங்கோர் வாட் - நுழைவாயிலில் கோபுரங்கள் கொண்ட வாசல்கள் நான்கு திசைகளிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த ஸ்தூபிகளும் அதனுள் நுணுக்கமான வேலைப்பாடுகளும்  காணும் இடமெல்லாம் குவியல் குவியலாய் சிற்பங்களும், அங்கங்கே துவாரபாலகர்களும் நின்ற வண்ணமாய் எண்ணத்திற்கும் எட்டாத வியப்பில் ஆழ்த்தும் கலைப் பெட்டகம்.

பின்னர் அங்கோர் வாட் கோவிலின் கிழக்கே, சதுரங்க வடிவிலான கட்டிடம் அமைக்கப்பெற்றிருக்கிறது. அங்கே தூண்கள் அழகுற காலை நயத்துடன் செதுக்கப்பட்டு, மேற்க்கூரைகள் எல்லாம் விலையுயர்ந்த கற்களாலும், பொருட்களை  கொண்டும் வடிவமைக்கப்பட்டிருந்தது, அத்தூண்களில் பெண் தேவதையான 'அப்சரஸ்' உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இந்த மண்டபம் ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாகவும் செயல் பட்டது.ஆனால் இப்பொழுது வெறும் சிதிலம் அடைந்த ஸ்தூபிகளும், சுவர்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.

எட்டாம் ஜெயவர்மன் ஆட்சியின் கீழ் 'தர்மசாலா', வழிப்போக்கர்கள் தங்கி செல்ல ஏதுவான இடமாக அமைக்கப்பட்டது.மேலும் இங்கு நீர்தேக்கங்களும், கிடங்குகளும் கட்டப்பட்டது.

மேரு மலையின் பிரதிபலிப்பாக இங்கே மலை கோவில்கள் கட்டப்பட்டது, இந்த கோவில்களின் கட்டமைப்பு இந்திய கோவில்களின் கட்டமைப்பை கொண்டு நிர்மாணிக்கப்பட்டது. இந்த கோவில்கள் பிரமிட் குவியல்கள் போல் தோற்றமளிக்கும், இது மேரு மலையும் அதனை சார்ந்த மலைகளையும் இணைத்தே கட்டமைக்கப்பட்டது. அங்கோரியர்கள் மேரு மலையானது இந்து கடவுள்களின் இருப்பிடமாகவே கருத்தினர், அதன் வெளிப்பாடே இந்த தொடர்ச்சியான கோவில்கள். இக்கோவில்களின் நடுவே இதன் பெருமையை பறை சாற்றும் அடையாளமாக வானுயர நிற்கும் கோபுரங்கள் சாட்சி.

கோவிலின் உள்ளே விஷ்ணு, சிவன், இந்திரன், நாகர், காலன், அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைய கயிறாய் இருந்த நாகர் அரசன் 'வாசுகி' போன்ற சிற்பங்கள் பல உள்ளடங்கி உள்ளது.

இங்குள்ள பெரும்பாலான கோவில்கள் எம்பெருமான் சிவனுக்கானது, மேலும் இராவணன் கயிலாயத்தை ஷிவா தாண்டவ மந்திரம் சொல்லி அசைத்திடும் பொழுது  அவர் கயிலாய மலையிலே நந்தி தேவனுடன் கம்பீரமாய் கையில் சூலாயுதத்தோடு வீற்றீருப்பது போலும் சிற்பங்கள் காணப்படுகிறது.

இங்கு விஷ்ணு கடவுளின் வழிபாடானது அவரது அவதாரங்களையும், அசுரர்களை எதிர்த்து போரிட்டதும், கிருஷ்ணா, ராமா அவதாரங்களும், அவர் தம் கரங்களின் வைத்துள்ள சங்கும், கருடனும், சின்னங்களாய் அங்கே தோற்றமளிக்கிறது.

இன்றைய அங்கோர் வாட் 
இன்றைய அங்கோர் வாட் மிகவும் சிதிலம் அடைந்து, அளவுக்கதிகமான செடி கொடிகளும், மரங்களும், கால சூழ்நிலைகளின் பருவ மாற்றத்தினாலும் பல்வேறு மாற்றங்கள் கண்டுள்ளது.

அதன் பிறகு நடந்த போர்களினாலும், திருபோனது சில பொக்கிஷங்கள். பின்னர் அரசாங்கத்தின் முயற்சியில் முடிந்த வரை புனரமைத்து அவ்விடத்தை சுற்றுலா தலமாக மாற்றி உள்ளது. 1990க்கு பிறகு அங்கு வந்து செல்லும் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.


என் பார்வையில் அங்கோர் வாட் 

மலைகளும், மரங்களும், வளைந்து நெளிந்த வேர்களும், திரும்பும் திசை எல்லாம் பௌத்த மூத்த முன்னோடிகளின் முகங்களுமாய், சிற்பக் குவியல்கள் திகைக்க வைக்க. அனுபவங்கள் தேடி திரியும் உயிர்களுக்கு இன்ப சாரலாய், விண்ணை முட்டும் கலைகலாகட்டும் , ஒரு விதமான உணர்வும் - தொலைந்து போன நம் பொக்கிஷம், தமிழன் கட்டிக்காதிருக்க வேண்டிய ஒன்றல்லவா? 
சைவ மதமாகட்டும், வைஷ்ணவ மதமாகட்டும் அல்லது பௌதிக மதமாகட்டும் - எந்த சமயமானாலும், மதமானாலும் தத்தம் கோவில்களையும், அதன் சிறப்புகளையும் அழகுற பாதுகாத்தும், தேவையான சமையத்தில் அதனை புனரமைத்தும் வர வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.

இன்னும் மண்ணுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் போலே இன்னும் நிறைய சொல்லலாம் அங்கோர் வாட் பற்றி, எனினும் தேடல் ஒரு இனிமையான அனுபவம், நீங்களும் தொலைந்து போன சில வரலாறுகளை கொஞ்சம் தேடி பாருங்கள், வியப்பும், ஆச்சரியங்களும், சில பொக்கிஷங்களும் நம்மை  வந்து பற்றிக்  கொள்ளும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.

மேற்குறிய அணைத்து தகவல்களும் எந்தன் தேடலில் உருவெடுத்த விடைகள், இதில் ஏதேனும் குழப்பங்களோ, மாற்று கருத்துக்களோ இருப்பின் வலைப்பக்கங்களில் தேடல் கொள்ளவும்.

பார்த்தேன் - தேடலில் மூழ்கினேன் - வியந்தேன் - எழுதினேன் - பகிர்ந்தேன் - என் தேடல் தொடரும்.

தேடலில் மூழ்கித் திளைக்க என் வாழ்த்துக்கள்!!

கருத்துகள்