தலையணை பூக்கள் - இரவின் நீளம் சொல்லும் இரகசியங்கள்


நீ கேளா ரகசியம் பல நான் சொல்வேன் - கொஞ்சம்
கூட பொய்கள் இல்லா இரவில் கரைந்த மெய்கள்
சொல்வேன் - நான் யாரென்று கேட்பாயா நீ ?
சொல்கிறேன் கேள் என் ஞாபகங்களை !!
கொஞ்சம் கொஞ்சமாய் அவனை கொல்கிறாய் - தூக்கம்
கேட்டு அவன் விழி மூடும் நேரத்திலும் நீயே
அங்கு ஆட்சி புரிகிறாய் - காலை முதல் மாலை
வரை அவன் நினைவில் கலவரம் செய்கிறாய் !!

உன் சிரிப்பெல்லாம் கவிதை என்பான் - அவன்
என்னிடம் நீ சொல்லும் பொய்கள் எல்லாம் அழகான
அவஸ்தை என்பான் - கதைகளில் படித்த தேவதை எல்லாம்
நீ தானோ என ஆயிரம் முறை கேட்டிருப்பான் என்னிடம் !!

வானவில் வண்ணங்கள் எல்லாம் உனக்காக பிறந்ததோ
என்று நீ உடுத்தும் ஆடை நிறம் பார்த்து தினமும் இரவில்
அவன் சொல்லும் கவிதைகளில் நானும் அவன் வசமாகி
போனேன் விடியும் வரை  !!

அவன் பேசா நேரமெல்லாம் மௌனமாகி போகும்
ஊமை நிலை - காரணம் நீயின்றி யாருமில்லை நான் அறிவேன்
அவன் கண்கள் பேசும் போது என்னிடம் வார்த்தை
இல்லை ஆறுதல் சொல்ல - நானும்
ஈரமாகி போகிறேன் அவன் கண்ணீரில்!!

இன்னொரு ரகசியம் சொல்லவா - உன்னிடம் அவன்
காதலை சொல்லும் முன்னே முதலில் சொன்னது என்னிடம்
நாணினேன், குறுகினேன் - என்ன செய்வேன் ஒத்திகை தானே
என்று நானும் ரசித்தேன் அவன் உன் மேல் கொண்ட காதலை

என்றாவது நீ கொஞ்சம் சிணுங்கி பேசினால் போதும் - என்னை
கெஞ்சும் வரை கொஞ்சிடுவான் - 'நீயும் அவனும்'
'நானும் தூக்கமும்' போல - யோசிக்கிறாயா நான் யாரென்று ?
இன்னும் கொஞ்சம் கேள் என்னை பற்றி !

நீயும் இல்லா அவன் தனிமையில் நான் இருப்பேன் எப்பொழுதும்
வீட்டில் என்னை போல் பல இருக்க - நான் அவன் வசம் ஆனது
உன்னால் - ஒரு நாள் அவன் வீட்டில் என் மீது உன் விரலும்
முகமும் பதிய அன்று முதல் இன்று வரை நான் அவனோடு !!

சில நேரம் போர்வைக்கு உள்ளே உன் குரல் கேக்கும் - நானும்
கண்ணியமாய் காதடைத்துக் கொள்வேன் ஆனாலும் சில நேரம்
நானும் ரகசியமாய் உங்கள் காதலில் - நீ அவன் நான்
என்னுளே வைத்துக் கொள்வேன் ரகசியங்களை !!

தினம் நூறு முறை கேட்டிருப்பேன் உன் பெயரை அவன்
சொல்லி - ஏக்கத்தில் அவன் விடும் பெருமூச்சில்  பல முறை
பறந்திருக்கிருக்கேன் - தானாய் இருந்த இடம் வந்து விடுவேன்
என்னில் அவன் முகம் புதைத்து தூங்க !!

உன் கோபங்கள் என் மீது அவன் கண்ணீராய் - உன்
புன்னகைகள் என் மீது முத்தங்களாய் - இன்னும் நான்
யாரென்று  குழம்பி போனாயோ ? அவன் துக்கங்களில் ஆறுதலாய்- அவன் சந்தோஷத்தில் செல்லமாய் !!

அவன் நினைவுகளை தாங்கி நிற்கும்  - தலையணை நான் !!
 -அஜய் ரிஹான்

கருத்துகள்