மனிதி வெளியே வா - திரௌபதி - 2



யுகங்கள் மாறி போனாலும் மனித குணம் மட்டும்
மிருகமாய் நிலை கொண்டு அரசாளும் விதியன்றோ !!

மிருக சதை புசித்துண்டு காலை கழிவுகளாய் உண்டது போக - மீதம்
கொழுப்பில் ஒட்டிய அதன் வெறி மட்டும் உன்னை
தொற்றிக் கொள்ள நீயும் அதுவாய் மாறும் நிலையன்றோ !!

வேசி மகனோ நீ - ஒரு தாய் வயிற்றில் பிறந்து பால் உண்ட
திடம் உன்னில் கொஞ்சமேனும் இருந்திருந்தால் பால் மனம்
மாறா எம் மகளை புசித்துண்ண துணிவாயோ நீ - மீண்டும் ஒரு முறை
சொல்வேன் வேசி மகன் நீ !!

கோழை நீ - மானம்  தீண்டி அவள் வீரம் சோதிக்க வந்தாயோ ?
சோறுண்டு வாழ்பவனுக்கு மட்டுமே தெரியும் எம் மகளின் வீரம் -
பாவம் நீ உண்பதை நான் சொல்லி ஏளனம் ஏற்கவோ ?

கண்ணை மறைக்கும் உன் காமம் என்றேனும் என்னையும்
தீண்டும் என உடன்பிறந்தவள் உன் வீரம் மெச்சி விலகிச் செல்லும்
பெருமை உன்னை மட்டுமே சாரும் !!

அவள் நூலாடை பிரித்தறியும் உன் விரல்கள் செய்யும் கொடுமைகள்
மண்ணில் அவள் நரகம் காண்பாள் - உந்தன் முகத்தில் அரக்கன்
ஆட்சி புரிய - மரணத்தை வரமாய் யாசித்துக் கிடப்பாள்!!

பகலாய் இருந்திருந்தால் நீ தொட்ட நொடியே மறுகணம்
தாமதமின்றி வேடிக்கை பார்க்கும் சூரியன் கூட உன்னை சட்டென்ன
சுட்டெரித்து பொசுக்கி இருக்கும் - பாவம் இருளென்னும்
போர்வையில் ஒளிந்திருக்கும் நிலவென்ன செய்து விடும் என்ற திமிரா உனக்கு 

"விதியொன்று எழுதிட மனிதி கொஞ்சம் வெளியே வா"

முடங்கியது போதும் வீரம் நீயென (தசா)அவதாரம் எடுத்து வா!
காரணங்கள் தேவையில்லை உன்னை தொட்டவனை வெட்டி எறி - இது வன்மம் இல்லை சம்ஹாரம் !!
ஏட்டில்  எழுதிய முண்டாசு கவிஞனும் இன்றில்லை !!
மீண்டுமொரு புதுமை பெண்ணை படைத்திட - இருந்திருந்தால்
அவனும் இன்று வெட்கித் தலை குனிவான் தேவை மாற்றம் ஏட்டில்  
இல்லை நாட்டில் என்று !!

பேருந்தில் உன்னை தவறாய் தீண்டும் விரல்கள் எல்லாம்
நசுங்கிட யுத்தம் செய் - இன்னொரு பெண்ணை தவறென
பார்க்கும் அவன் விழிகள் பிதுங்கிட யுத்தம் செய் - ஆண் மகனெல்லாம் 
உன் காவலனாகும் வரை தர்ம யுத்தம் செய் - பெண்மை காக்க!! 

 களையெடுக்க நித்தமும் யுத்தம் செய் - களவி தொடுக்கும்
மூடனெல்லாம் முர்ச்சையாகி மாயும் வரை !!

சிற்பமாகி நிற்கும் கடவுள் எல்லாம் உன் கொடுமை பார்த்து உயிர்த்தெழுந்து வீதியில் உலவும் வரை 
யுத்தம் செய் !!

நீளும் தவறெல்லாம் வெட்டி எறி - சாலையில் உன்னை காக்க
எவனும் இல்லையெனில் இனி பூமியில் மனிதனே தேவையில்லை
படைத்தலை நிறுத்தி ஒழி - சர்வமும் மனிதி வசமாகட்டும் !!

"நீயே படைப்பாய் - நீயே காப்பாய் - நீயே அழித்தலும் செய்வாய்

மனிதி வெளியே வா"

பச்சிளம் குழந்தையென்றும் பாராது வேட்டையாடும் மனித மிருகமெல்லாம்
கருணையின்றி விஸ்வரூபம் கொண்டு அவனை வதைத்து எறிவாயோ?

நானும் உன் துயரம் கேட்டும் வாய் மூடி கோழையாய் அதை இன்றைய
நிகழ்வு இதுவென்று கடந்து போகும் சக மனிதனாய் இப்பிறப்பெண்ணி
தினமும் என் முகக்கண்ணாடியில் உமிழ்ந்தென்னை இகழ்கிறேன் !!

தினச்  செய்தி சொல்லி வியாபாரம் செய்யும் நரிகளும் உன் செய்தி சொல்லாமல் மறைத்து செய்வது விலைபோன விபச்சாரம் - பாவம் 
அவனும் கூலிக்கு வாய் அசைக்கும் வேற்றுகிரகவாசியன்றோ ?

தவறொன்று நிகழ்ந்தேறும் போது கூடி நின்று வேடிக்கை பார்க்கும்
எம் குலத்து ஜடத்துக்கெல்லாம் இன்னொரு பிறப்பருள்வாய் - பிறக்கும்
போதே வேடிக்கை மனிதனுக்கு விழி எதற்கு பிடுங்கி எரிவாய்!!


உறங்கிக் கிடக்கும் மனிதி வெளியே வா - உன் உணர்வுக்கொரு
உயிர் கொடுப்போம் - வீதியில் ஆண் என்ற கர்வம் காட்டி திரியும்
ஆண்களெல்லாம் அதே வீதியில் ஆடையின்றி திரியட்டும் !!

இனியொரு நிர்பயா, ஜீஷா, நந்தினி, ஸ்வாதி, ஹாஷிணி  வரிசையில் எம்
இன்னொரு மகள் வரும் முன்னே புதியதொரு விதி செய்வோம்
"மனிதி வெளியே வா"
- அஜய் ரிஹான்

கருத்துகள்