மீண்டும் ஒருமுறை ஜனனம் வேண்டுமடி - எனக்கு!
இப்பிறவி தாரா நிகழ்வெல்லாம் ஒரு முறை காண
நினைவேதும் தப்பாமல் மீண்டும் ஒருமுறை பிறப்பேனோ !
இதழ்விரிந்து மலரும் பாரிஜாத பூ போலே நீ
பிறக்கும் ஒரு நொடி முன்னே நானும் ஜனனிக்க மாட்டேனோ!!
பிறந்ததும் தாமதம் ஏதும் இல்லாது மறுநொடி தவழ்ந்தேனும்
உன்னருகே வந்து சேரேனோ!
உலகில் நான் காணும் முதல் முகம் உனதாகாதோ !!
மாதங்கள் சில கடந்து நீ தத்தித் தவழ்ந்து சிரிக்கும் போது
நானும் உன் நினைவில் தவழ்ந்து கிடவேனோ ?!
முதல் முறை நீ நடக்க உன் பாதம் என் மார்பில் பதிய
அதை ஓவியமென என்னுளே மறைத்து வைப்பேன் !!
நீ கட்டியணைத்து உறங்கும் பொம்மை தொடங்கி நீ
முத்தமிட்டு கொஞ்சும் பொம்மை வரை மொத்தமும்
நானாக மாட்டேனோ !!
உன் பிஞ்சு விரல்கள் கோர்த்து தினமும் உன்னோடு
நானும் - என்னோடு நீயும் பள்ளி செல்ல மாட்டோமோ ?!!
நீயில்லா நேரத்தில் உன் ஆடை உடுத்தி கண்ணாடியில்
உன்னுள் நான் இருப்பதை வெட்கமாய்
ரசிப்பேனோ !!
தலையணைகள் எல்லாம் வலியால் கதறும் வரை
சண்டையிட்டுக் கொள்வோமா ?!
உன் கண்ணில் கண்ணீர் வந்தால் காரணமின்றி தானாய்
நானும் அழ - அதை பார்த்து நீ சிரிக்க, கண்ணீர் மறக்க !!
நளினங்கள் உன்னில் மாற சலனமில்லா நதியொன்று
என்னில் பாய - வளைவுகளோடு வருடங்களும் கூடிப் போக
நாணமென்று நீயும் நெழிந்தென்னை வெட்கிப் பார்க்கும்
முதல் பார்வை இதயம் தீண்டி செல்லாதோ?
முதல் முறை உன்னை சுற்றிக் கொள்ளும் நூலாடை
மேல் எந்தன் மையல் சுற்றிக் கொள்ளாதோ!!
நட்சத்திரங்கள் கோடி ஒன்றென கூடி தேயா நிலவென
என் கண் முன்னே ஒளிரும் பாவை நீயன்றோ "என் கண்மணி "
சொல்லா என் காதல் மேகம் ஒரு நாள் என் உயிர்
மழைத் துளியாய் தூவும் - என் உயிர் நீயன்றோ ?
சூரியனை சுற்றி வலமொன்று வந்து சாட்சிகள் பல
வைத்து என்னில் சரி பாதி என்று சொல்லும் நாள்
ஒன்றுக்காக காத்திருக்கும் என் கை விரல்கள்!
என் உயிர் தாங்கி உன்னில் கருவாகி நம்மின்
சான்று ஒன்று வந்த பின்னும் உந்தன் மீது
எந்தன் காதல் என்றும் குறையாதடி!!
வயதான பின்னும் என் தள்ளாடும் நடையும்
தொலைந்து போன இளமையின் நினைவுகளும் !!
எந்தன் குழந்தையான நீயும் - உந்தன் குழந்தையான நானும்!!
நினைத்து சிரித்து திரிவோம் நம் காதல் நினைவுகளில் !
உனக்கு முன்னே சென்றிடுவேன் மண்ணை விட்டு
உனக்காக காத்திருப்பேன் அங்கும் விண்ணில் நீ பிறக்கும்
அந்த நொடியை காண !!
உலகில் நான் காணும் கடைசி முகம் உனதாகாதோ !!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக