உறவுகள்



 
 பனிக்குடம் முதல் நீர்க்குடம் வரை என்னை தாங்கும் உறவுகளே !!

அன்பாய் அள்ளி அணைக்க ஆயிரம் கைகள் நீட்டி முத்த மழை பொழிவாள் !
கொடி உறவால் உருவான உறவல்லவோ - அவள் உறவல்ல என் உணர்வானாள்  !!

கரு சுமந்தென்னை வளர்த்தவள் அவளென்றால் - தோளில் என்  
உரு சுமந்தென்னை வடிவமைத்தவன் என் தாயுமானவன் அல்லவோ ?

என் உயிரை நகலெடுத்து எனக்கு பின்னே உருவெடுத்து
அண்ணன் என்ற உறவை எனக்களித்த பெருமை உனதன்றோ ?

உணவை பகிர்ந்தோம் - உணர்வை பகிர்ந்தோம் - உதிரம் தாரா
உறவை உள்ளம் இணைந்து கலந்தோம் - நட்பின் இலக்கணங்களை
கற்பிக்காமல் பயின்றோம் !!

என் விரல் பிடித்து முதல் எழுத்து நீ எழுத அங்கே - றமும் ரம்பம் ஆனது - சாட்டையும்,
பிரம்பும் என்னை வெளுத்தாலும் - குருவாகி நீயும் என் உறவனாய் !!

மீசை பிடித்து விளையாட வளர்த்து வைப்பாய் நீ - ஆசையாய்
என் கன்னத்தில் உன் முத்தம் வைப்பாய் ! - நானோ எச்சி என துடைக்க !
நீயோ புன்னகை செய்வாய் - மீண்டும் ஒரு வரம் கிடைத்திடுமோ
உன் முதுகில் யானை சவாரி செய்திடவே !!

பக்குவங்கள் சொல்லித் தர - பண்டங்கள் பல செய்து தர
சாமியெல்லாம் இதுவென நீ அடையாளம் காட்ட - நீயோ
அதுவோ நான் எதுவென்று குழம்பி போக !!

முறை சொல்ல இன்னும் எத்தனையோ உறவுகள் என்னை சுற்றி !
முகமூடி இல்லா முகங்கள் போதும் உறவென்று சொல்ல !!

இன்பம், துன்பம் பகிர்ந்துறவாடி தினமும் எல்லையில்லா வானத்தில்
எனக்கும் பறந்து திரிய ஆசை தான் - " உறவுகளோடு "

- அஜய் ரிஹான்

கருத்துகள்