குருதிப் புனல் - அத்தியாயம் 8



மௌனம், இதை மட்டுமே அவள் அவனுக்கு பதிலாய் தந்தாள் ப்ரியா. இருவரும் பேசிக் கொண்டே நடக்க அனன்யா மணலில் தெரியும் அவளின் நிழலை பார்த்தவாறே நடந்தாள். அவர்கள் இருவரும் தனித்து போகவே ஸ்ரேயாவும், அனன்யாவும் அலைகளோடு விளையாடிக் கொண்டே நடந்தனர். 

என்னடி ஒண்ணுமே பேசாம வர? என்ன யோசனை சொல்லுடி என்று அனன்யாவின் யோசனையை  கலைத்தாள் ஸ்ரேயா. ஒன்னுமில்லடி இந்த ராம் பாரேன் திடீர்னு இப்படி வந்து சொல்றான் பாவம் ப்ரியா என்னவெல்லாம் யோசிக்கிறாளோ அதை தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

இதுல என்னடி இருக்கு புடிச்சு இருந்தா ஏத்துக்க போறா இல்லாட்டி புடிக்கலைங்கிறத அவன் மனசு கஷ்டப்படுற மாதிரி சொல்லாம இருந்தா சரி. தெளிவாய் சொன்னாள் ஸ்ரேயா. என்னடி அவ்ளோ லவ்'ல அவ்ளோ அனுபவமா உனக்கு என்ன ஸ்ரேயாவை பார்த்து கண் அடித்தாள் அனன்யா.

ஏண்டி உனக்கெல்லாம் இந்த லவ்'ல இஷ்டம் இல்லையா? என ஸ்ரேயா அனன்யாவிடம் கேக்க அப்படின்னு சொன்னேனா ? இந்த காதலை பொறுத்த வரைக்கும் என்னோட கருத்து கொஞ்சம் வேறுபடும் அவ்ளோ தான். நான் காதல் இல்லைன்னு சொல்லலையே இருந்தா நல்லார்க்கும்ன்னு தானே சொல்றேன் என்றாள் அனன்யா கமல்ஹாசன் பாணியில் .

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே!!

ராம் : என்ன எதுவுமே சொல்ல மாட்டேங்கிற? நீ என்ன நினைக்கிறையோ அத சொல்லு, எதுவா இருந்தாலும் பரவால்ல.

ப்ரியா : எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, ஒரு நல்ல நண்பனா உன்னை எனக்கு புடிக்கும், ஆனா அடுத்த கட்டத்துக்கு அப்படிங்கிற அப்போ இன்னும் கொஞ்சம் நமக்குள்ள ஒரு புரிதல் வேணும்ன்னு நினைக்கிறேன்.

ராம் : கண்டிப்பா !! நான் உன்கிட்ட என்னோட காதலை சொல்லிட்டேன், அதே மாதிரி நீயும் அதை ஏத்துக்கணுமுன்னு சொல்லல, ஆனா உனக்கு புடிச்சிருந்தா அதை பத்தி யோசிக்கலாமேன்னு தான் சொல்றேன்.

ப்ரியா : நீ என்கிட்டே நடந்துக்குற விதம், காதலை கூட காயப்படுத்தாம சொல்லுற நிதானமான பேச்சு, எல்லாம் புடிச்சிருக்கு. எனக்கு இப்போ சம்மதம் சொல்லிட்டு நாளைக்கு எதோ ஒரு சூழ்நிலைனால விட்டு போகணும் அப்படிங்கிற விஷயங்கள் எல்லாம் புடிக்காது.

ராம் : நான் உன்கிட்ட என்னோட காதலை சொல்றதுக்கு முன்னாடியே ஓராயிரம் விஷயங்கள் எல்லாமே யோசிச்சேன், சொல்லலாமா வேண்டாமாங்கிற ஒரு பெரிய போராட்டத்துக்கு அப்புறம் தான் உன்கிட்டயே சொன்னேன். அதுனால உன்ன எந்த ஒரு காரணத்துக்காகவும் விட்டு போக மாட்டேன். இன்னொரு விஷயம், நீ என்ன புடிச்சிருக்குன்னு சொன்னாலும், நம்ம கல்யாணம் கண்டிப்பா உங்க வீட்டுல இருக்க எல்லாத்தோட சம்மதத்தோட தான் நடக்கும். எனக்கு உனக்கு பிடிச்ச எல்லாமுமே எனக்கு வேணும்.

ப்ரியா : சரி, நாம நல்லா பேசி இன்னும் புரிஞ்சுக்குவோம்.
ராம் : அப்போ என்ன சொல்ல வர?

ப்ரியா : எனக்கு பிடிச்ச எல்லாமே உனக்கு தர சம்மதம், ஆனா இந்த காதல்ங்கிற ஒரு விஷயத்துனால நம்ம படிப்பு தடைப்பட கூடாது. நமக்கு புடிச்ச விஷயங்களை அழகா நமதாகிக்கணும். புரியுதா நான் என்ன சொல்றேன்னு? எல்லாரும் சொல்ற மாதிரி சொல்லனும்னா "I too love you "

சந்தோஷத்தில் ராம் வானத்தை பார்த்து குதூகலித்து குதிக்க, ஸ்ரேயா அனன்யாவிடம் "என்னடி, இவ ஓகே சொல்லிட்டா போலேயே"  என சொல்ல, விடுடி, அவ ஓகே சொல்லி இருக்கான்னா அவ எவ்ளோ யோசிச்சு அந்த பதிலை சொல்லி இருப்பான்னு எனக்கு தெரியும். அவளை எனக்கு சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும், அதுனால அவ முடிவு தப்பா இருக்காது என்றாள் அன்னயா.

சரி, உனக்குன்னு வரவன் இப்படியெல்லாம்  இருக்கணும்ன்னு ஒரு கனவு இருக்குமுல்ல அத சொல்லு என்றாள் ஸ்ரேயா அனன்யாவிடம். ஏண்டி நாம இங்க அத பேச தான் வந்தோமா? மணி என்னாச்சுன்னு பாரு போலாம் பசிக்குது, நாளைக்கு நைட் ஊருக்கு கிளம்பறோம். போற அப்போ பேசலாம். இப்ப வா போய் சாப்பிடலாம், எல்லாரும் வராங்க பாரு.

ராமும், ப்ரியாவும் சிரித்துக்கொண்டே வர. என்னடி ஓகே சொல்லிட்ட போல ? என்றாள் அனன்யா. ப்ரியா வெட்கத்துடன், ஆமாம், அவன் என்கிட்டே அவன் சொன்ன விதம், அவனோட பேசுன இந்த அரை மணி நேரத்துல இது சரியாய் வருமுன்னு ஒரு நம்பிக்கை அவன் தந்தான். இப்படி ஒரு நபரை மிஸ் பண்ணிட்டு நாளைக்கு நாம பீல் பண்ண கூடாதுல..அதான் சொல்லிட்டேன் என்று சொல்லி முடித்தாள் புன்னைகையுடன்.

மணி சரியாக  இரண்டு காட்ட, சுற்றிக்கொண்டிருந்த அனைவரும் வந்து சேர்ந்தனர். ஜெஸ்ஸி'யும், அர்ஜுனும் மாணவர்களிடம் மதிய உணவிற்கு எங்க போலாம் என கேட்டுக் கொண்டிருக்க, சாரே, நியான் கூட்டிக் கொண்டு போவான், வரூ சாரே! என பின்னால் இருந்து ஒரு குரல் கேக்க அங்கு வந்து நின்றார் அஜீஷ் மேனன், சேட்டா, கேரளா சாப்பாடு வேண்டாம் நல்ல தமிழ் சாப்பாடு கிடைக்கிற இடத்துக்கு கூட்டி போங்க என்றான் வழக்கம் போல் நம் ஜீவா கூட்டத்திலிருந்து.

ஆலப்புழா கடற்கரையிலிருந்து வண்டி நல்ல சாப்பாடுக் கடையை தேடி அலைந்து கொண்டிருக்க, வழியில் ஹோட்டல் ஆரிய பவன் தென்படவே, படையெடுத்து வரும் வீரர்கள் போல ஹோட்டலுக்குள் பாய்ந்தனர். சாப்பிட்டு முடித்து வண்டி திரும்ப Eden Valley resort க்கு விரைந்தது. அனைவரும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு மாலை கடைத்தெருவுக்கு ஷாப்பிங் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அறைக்குள் நுழைந்த அனன்யாவும் ஸ்ரேயாவும் யார் முதலில் கட்டிலில் போய் விழுவது என போட்டி வைத்துக்கொண்டனர். கதவை திறந்ததும் அனன்யா தனது கைப்பையை தூக்கி வீசி விட்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல கட்டிலை பார்த்து ஓடினாள்.

சூரியன் மறைய தயாராகிக்கொண்டிருந்த நேரம், ஒரு குட்டி தூக்கம் போட்டிருந்தனர் அனைவரும். ஜெஸ்ஸி'யும், அர்ஜுனும் அரை கதவுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தனர். கடைத் தெருவிற்கு வராதவர்கள் ரிசார்ட்டில் உள்ள பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தனர். அவரவர் நண்பர்களுடன் குழுக்களாய் சேர்ந்து அருகில் இருக்கும் ஷோபா சிட்டி மாலுக்குச் சென்றனர்.

அனன்யா அவள் அம்மா வசந்திக்கு ஒரு காட்டன் சாரீ ஒன்று வாங்கிக் கொண்டிருக்க, ஸ்ரேயாவும், ப்ரியாவும் டிசைனர் சுடி பார்த்துக்கொண்டிருந்தனர். ஜீவாவும், ராமும் ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்தவாறு திரிந்தனர். அலைந்து திரிந்த பிறகு, ரிசார்ட் வந்தடைந்தனர்.

மறுநாள் காலை அஜீஷ் மேனனுடன் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்றனர், பின்னர் அங்கிருந்து கிளம்பி வீகா லேண்ட் வந்தடைந்தனர். உள்ளே நுழைந்ததும் ஒரே குதூகலம் தான், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நேரம் போவது தெரியாமல் விளையாடிக் களித்தனர். மாலை ஐந்தரை மணிக்கு மீண்டும் ரிசார்ட் வந்தடைந்து ஊருக்கு கிளம்ப தயாரானார்கள்.
கிளம்பும் போது அஜீஷ் மேனன் அனைவரிடமும், "யாரும் என்னை மறந்துடாதீங்க"  என அவருக்கு தெரிந்த தமிழில் மலையாளம் கலந்து சொல்ல, அனைவரும் ஒரு அன்பான புன்னகை கொடுத்து கிளம்ப, ராஜிவ் மட்டும் அவரிடம் சென்று அவர் குழந்தைகளுக்காக படிப்பு செலவுக்கென கொஞ்சம் பணம் தந்து விட்டு வர, எப்பொழுதும் சேட்டை செய்யும் பையனாக தெரிந்த அனைவருக்கும் இன்று ஒரு மனிதனாய் தெரிந்தான். ஜீவாவும் , ராமும் அவனை நினைத்து பெருமையடைந்தனர்.

ரயில் கிளம்ப சரியாக அரைமணி நேரம் இருக்கவே ரயில்நிலையத்தை அடைந்திருந்தனர். பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த அனன்யா தான் டைரியில் இந்த சுற்றுலா பத்தி எழுத ஆரம்பித்தாள். கிளம்பியது முதல், ப்ரியா'வின் காதல் கதை வரை எழுத நினைத்தவளுக்கு அந்த கோவில் சந்திப்பு மட்டும் அவளுக்கு கொஞ்சம் புதிதாகவும், புதிராகவும் இருந்தது. அவன் கூறியதை நினைத்து பார்த்தாள். அவன் பெயர் என்னவாக இருக்கும்? என யோசித்துக்கொண்டிருக்கையில் ரயில் புறப்பட தயாரானது.

ரயிலின் உள்ளே அமர்ந்த அனன்யாவுக்கு அந்த கண்கள் மீண்டும் தெரிகிறதா என ஜன்னலின் வழியே பார்த்தாள். இது நட்பா இல்லை புதிரா என்ற கேள்வியில் மூழ்கியிருந்த அவள் புருவங்கள் உயர அவளை வழியனுப்ப வந்திருந்தது அதே கண்கள். ஆனால் இம்முறை மறைந்திருந்து அல்ல.
தானாய் இவள் புன்னகைக்க, வெளியே நின்றிருந்த அவன் அவளிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து "என் பெயரை கண்டு பிடிச்சா மட்டும், உன்னையும் என்னையும் சம்மந்தப் படுத்துற அதை இந்த புத்தகத்துல தேடு" என சொல்லி விட்டு கிளம்பினான், ரயிலும் கிளம்பியது.

இதை பார்த்த ப்ரியா அவளிடம் 'யாரடி இவன்?" உனக்கு தெரியுமா முன்னாடியே? என கேக்க அவளிடம் அவனை சென்னை ரயில் நிலையத்தில் பார்த்தது முதல் அவன் சொன்ன புதிர் வரை சொல்லி முடித்தாள். இவளோ நடந்திருக்கு என்கிட்டே ஒண்ணுமே சொல்லல போடி, என அவளை உரிமையான கோபத்துடன் கடிந்து கொண்டாள். இதற்குள்ளே ஸ்ரேயாவும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள அமைதியாய் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து "என்னடி ஆச்சு ?" என கேக்க மீண்டும் கதை தொடங்கியது சென்னையிலிருந்து.
சரி இப்போ என்ன பண்ண போற ? அவன் பெயரை கண்டுபுடிச்சியா? என ஆர்வமாய் ப்ரியா கேக்க, அங்கு ராம் வந்து சேர்ந்தான். ப்ரியாவிடம் அவளுக்காக வாங்கிய teddy bear பொம்மையை அவளிடம் குடுத்து விட்டு சென்றான். ஸ்ரேயாவும், ப்ரியாவும் ஒரே குரலில் "ஓ..ஓ" என கத்த, உன் பேச்ச மத்தாத சொல்லுடி என்றாள் ப்ரியா. அனன்யா அவளிடம் இல்லடி இன்னும் கண்டு பிடிக்கல என்று சொல்லி மௌனமானாள்.

சரி நீ அவன் பெயரை கண்டுபிடிக்க அவன் சொன்ன புதிர் என்னனு சொல்லு என ஸ்ரேயா கேக்க, அதை வரிவரியாக அவர்களிடம் சொன்னாள் "என்னுடைய வெப்பத்தை எந்த கருவியாலும் அளக்க முடியாது, இரவில் நான் வருவதில்லை, மிகவும் தாகமடைவாய் என்னுடன் நீ அதிகமான நேரம் இருந்தால்"

பெயரை கண்டுபிடிடுத்து வைங்க அடுத்த மாசம் சிந்திப்போம் - தொடரும்!!

கருத்துகள்