இரும்புக்குதிரை - 04




கோடி அணுக்கள் முட்டிக்கொள்ள ஒட்டிக்கொண்டு
உலோகத் துகள்கள் தட்டி நிமிர்த்தி வடிவெடுத்து
நான் தொட நீ துடிக்க அளவெடுத்து இருதயம்
பொருத்தி என் கையில் உன் உயிர் தொடும் சாவி !

தொட்டவுடன் பற்றிக்கொள்ளும் மின்னல் துளி
உயிர் நீர் முத்தமிட்டு  உறுமும் சப்தம் கேட்டு
விலகிச் செல்லும் உன் நுண்ணுயிர் பிறப்புக்கள்
துடித்தெழும்பும் முள்ளோ விரைந்து உச்சம் தொட !

நெடுந்தூரம் சுமந்தென்னை காற்றில் இறக்கை
வீசி கருங்கல் படுக்கையில் சுழன்று கரும் புகை
கக்கி பறக்கும் குதிரையோ ? - சாலை கடக்கும்
புயலோ உன்னூடே பரவிக் கிடக்கும் நரம்புகள் !

உள்ளங்கை ரேகை வழியே உன்னுள்ளே  என்
ஆசை பாய உன் வேகம் கூட உனக்குள்ளேயும்
நாணம் உண்டென்று அறிந்தேன் தொட்டவுடன்
நின்று விட்டாய் - நான் மட்டும் தொடுவதாலா ?

விம்மி விம்மி அழுகிறாய் தாகமென்று உன்
வாய் திறந்து நானும் ஊற்றி வைக்கிறேன் நீயும்
ஆசை தீர பருகி மகிழ்வாயென - உனக்கும் சேர்த்து
சுற்றிப் போட சொல்கிறேன் கன்னிகள் அலை மோதுவதால் !

நிற்கச் சொல்லும் வண்ணம் கண்டு சாலையோரம்
நீயும் நானும் - என் எண்ணம் நீயறிந்து கடந்து
செல்லும் வண்ணத்து பூச்சி பார்த்து நீ கண் சிமிட்ட
அவள் கண்கள் என்னை தீண்ட லீலை செய்வாயோ ?

பெயரொன்று வைக்க ஆசைப்பட்டேன் அனுமதி
தந்திருப்பார்கள் நீயும் மனிதனாய் பிறந்திருந்தால்
படைத்தவன் உன்னை விற்க ஏதோ பெயர் சொல்லி
என்னையும் உன்னையும் எண்களால் இணைத்து வைக்க !

மறவேன் நீ என்னை அடைந்த நாளையும்
புது வண்ண ஒளியூட்டி ஊர் சுற்றி வருவோம்
பண்டிகை நாளன்று பவ்வியமாய் பொட்டு
வைத்து நின்றிருப்போம் - உன் ஓய்வு நாளன்றோ !

தூரம் பல ஆயிரம் கடந்திருப்போம் ஒன்றாய்
சாலை பல விதம் கண்டிருப்பாய் தவறுதலாய்
கல்லென்று பாராது சென்றிருப்பேன் எனக்காக
வலியென்று நிற்காது ஓடிடுவாய் நீயும் !!

குறும்புகள் பல செய்திருப்போம் இரவுகள்
பல இருந்திருப்போம் தனிமையில் - கவலை
யென்று வாடிப் போனால் வா என்று வந்து
நிற்பாய் காற்றில் கலந்து வருவோம் புன்னகையுடன் !

உன் செல்ல காதுகள் திருகி என் முகம் பார்த்து
மகிழ்வேன் எனக்காக என் நண்பனையும் தாங்கித்
திரிவாய் வழியில் உயிர் வேதனையில் நீயும்
துடித்தால் உன்னுள் என்னை ஊற்றி உயிர் தருவேன் !

தவறொன்று செய்து விட்டு பதுங்கி திருட்டுத்தனமாய்
வீடு நுழைந்த பொழுதுகள் - மழையில் வீறிட்டு
பாய்ந்தும், காய்ச்சல் வருமோ என உன்னை
நான் போர்த்தி வைத்த தருணங்கள் மறவாயோ ?

விடுமுறை நாளன்று நீயும் நானும் ஒன்றாய் குளியல்
கொள்வோம் - துவட்டி முடித்து ஒருவரை ஒருவர்
கண்ணடித்து நடித்துக் காட்டுவோம் நல்ல பிள்ளையென்று
இதை ஒருபோதும் நம்பியதில்லை நம் தாய் !

காயங்கள் அங்கங்கு உண்டு உனக்கு என்னால் - நானே
உனக்கு மருந்தாவேன் எனக்கும் நீ அப்படியே !
தினமும் நெற்றியில் முத்தமொன்று வைப்பேன்
பதிலுக்கு என்னை பார்த்து கண் சிமிட்டும் அழகியே !!

எனக்காக பிறந்தவளோ தவமிருந்து எனைச் சேர்ந்தாயோ
பிரிவேனோ ஒரு நாளும் உனை உயிரில்லா என் உயிரே !
தேய்ந்து போகாதே வாடிப் போவேனே - என்னவள் நீயென்று
உனை -தொட்ட மறுநொடி உணர்ந்தேனே என் கருப்பு இரும்புக்குதிரையே!

- அஜய் ரிஹான்



கருத்துகள்