ராவணன்



அசுர பிராமண குல கலவையின் பேரொளியோ
ரிஷி முனி - கைகசி கூடலின் சதை உருவமோ
தசகிரிவா நாமம் தாங்கி உயிர்த்தெழுந்த தவசீலா
உலகங்கள் ஆள பேராசை வேள்வியில் உதித்த மாவீரா!!

உடன் பிறந்தோன் ஒருவன் இந்திராசனம் கேக்கச்
சென்று நித்ராசனத்தில் தூங்கிக் கிடக்க நித்தமும்
உறங்கி கிடக்கும் நிகரில்லா வீரமும் - அண்ணனவன்
சொல் கேட்டு இறைவனையும் எதிர்த்து நிற்கும் கும்பகர்ணன்

ஞான ஒளியின் சுடராய் நல்லது தீயது பிரித்துணரும்
ஒழுக்கம் உயிரளித்த உத்தமன் அசுர குலத்திலும்
விதிவிலக்காய் அன்னப்பறவை ஒன்று நல்லெண்ணம்
விதையூன்றி பிறந்திட்ட விபீஷணன்

மூத்தோன் நகலொன்று எடுத்து வைத்து அசுரகுலத்தில் 
பிறப்பெடுத்து ராக்ஷச பேரழகி அவளும் ராமன் மேல்
மோகக் கடலில் மூழ்கி மாய உருவெடுத்து ஏகவிரதன்
தமையானால் அழகிழந்த ராவணனின் செல்ல தங்கை சூர்ப்பனகை

வீரம் செழித்து தினவெடுத்த திடந்தோளும் வெற்றி
வாகை சூடித் திரியும் விரிந்த மார்பும் - கர்வம் சுமக்கும்
புன்னகையும் எண்ணிலடங்கா வரங்களும் அதை சமன்
செய்யும் சாபங்களும் தாங்கி சுற்றித் திரியும் இலங்கேசன்!

சிவ நாமம் சொல்லியே சுவாசிக்கும் அவன்
மூச்சுக் காற்றும் எந்நேரமும் திருநீறு தாங்கி
நிற்கும் நெற்றியும் வேள்வியில் தன் சிரம்
கொய்து ஆஹுதி செய்யும் மகா சிவபக்தன்!

எதுகை மோனை சூடியே தாள ராகம் கூட்டியே
ருத்ரனவன் தாண்டவமாடி மெய்சிலிர்த்த
கைலையில் வரம் வாங்கிக் குவித்த இலங்கா
அதிபதி சிவ தாள் பணிந்த சிவநேசா !

ஜோதிட வேத கலைகளில் சாணக்கியனோ !
துவம்சம் செய்யும் போர் குணம் கொண்ட  சத்ரியனோ
கலைவாணி மகிந்திசையும் வீணை மீட்டி
யாழிசையில் மனதை ஆட்டிவைக்கும் இசை மேதையோ!

மயன் மகளாம் மண்டோதரி பேரழகி மெல்
இடையாள் சிவ நாம பெயருடையாள் கானம்
இசைத்து கவர்ந்திழுத்து மணமுடித்த ராவணே
ஸ்வரன்
- அவள் எண்ணம் போல் அழகு தூய்மையாய் !!

மன்மதன் அம்போ காமனவன் லீலையோ
முனிப் புதல்வி தேவதை வேதவதி மீது
மையல் பாய்ந்ததோ - அரக்கன் உன் கரம் அவள்
கூந்தல் தீண்ட உயிர் நீத்து அயோனிஜை பிறப்பெடுத்தாள் !

ராமனைச் சேர கடல் கடந்து நிலம் பிளந்து தாமரை
மலர் போலே உதித்து ஜனகனின் தவப் பலனாகி சிவ
வில்லுடைத்து மணாளான தன்னவன் தாள் சரண்
புகுந்து - விதியால் ராஜபோகம் நீத்து கானகம் நுழைந்தாளோ சீதை!

மாய உருவெடுத்து யாசகம் கேட்டவளை கவர்ந்திழுத்து
ஆகாய மார்க்கம் தன்னில் உயிர் நிலை பொய்யுரைத்து
நெறியுரைத்த பட்சி ராஜன் உயிர் பறித்து சோக உருவான
சீதையை அசோக வனத்தில் சிறை வைத்து தொடங்கி வைத்தான் அழிவை!

அனுமனும் தன் தாயவளை தேடி கடல் கடந்து
கணையாழி அவள் கண் காட்டி  சரணம் சொல்லி
அண்ணலவன் படும் துயர் போக்க வழி கேட்டு,
மெலிந்த அவள் தேகம் கண்டு உருகிப் போனது மாமலை !

வாலியும் போன பின்னே போர்க்களம் போன
வீரன் எவனும் உயிர் தாங்கி வந்ததில்லை - ராவணன்
அவனும் சளைத்தவனில்லை உடன்பிறந்தவனை இழந்தும்
தன்னால் பிறந்தவனை இழந்தும் மாறவில்லை அவன் தலைக்கனம்!

சரண் புகுவாய் நீயும் - வாழ வழி தருவான் ராமனும்
என நன்நெறி மொழிந்த உறவையும் உதறித் தள்ளி
கவசம் பூண்டு களம் புகுந்து மந்திர தந்திர ஜாலம்
காட்டிய வீரமும் - லக்குவனும் நடுங்கிய பராக்கிரமம்!!

விட்டான் அம்பை - கொய்தது தலையை சாய்ந்தாயோ
நான் வியந்த மாவீரனே - அழிந்தது இலங்கை
உன் கர்வத்தால், மோகத்தால் - தர்மம் வென்றது
அக்னிப்ரவேசம் துணிந்து பூமா தேவி துணை புகுந்தாள் பூமகள்.

நீயின்றி புராணம் முடியாது உன்னை சொல்லாது
கம்பனவன் ராம அயனமும் முற்றுப் புள்ளி பெறாது
கலையறிந்து இருந்தாலும் ஒழுக்க நெறி அழிந்து
திரியும் உயிரெல்லாம் பூவுலகில் ஒற்றை தலை
கொண்டு வாழும் ராவணனே !!

"ராமனாய் வாழ்வதும், ராவணனாய் வீழ்வதும் 
நம் எண்ணங்களால் மட்டுமே
தூய்மையாய் வைத்துக் கொள்வோம் 
நம் எண்ணங்களையும், செயல்களையும் "
 
- அஜய் ரிஹான்

கருத்துகள்