ரதிகள் பலர் சுற்றித் திரியும் பாலைவனமோ பூமி - பேரழகி நீ
தேசங்கள் பல உன்னழகில் மயங்கிக் கிடக்குமோ - பார்த்தவுடன்
மயக்கும் வரம் வாங்கிப் பிறந்தவளோ - உத்தமி கண்ணகியென்று
பறைசாற்ற அவள் குலத்தில் உதித்தவளோ - பெயரென்னவோ ?
தேவர்கள் கூட்டம் அமைத்து சங்கத் தமிழின் ஆதி தேடி உனக்கொரு
பெயர்சொல்ல - ரதியின் அழகும் பார்வையில் கொல்லும் ஆயுதமும்
கொண்டவளென்பதால் உலகம் உன் வசம் ஆகட்டும் - ஆண்மகன்களின்
விதியெல்லாம் உன் இதழ் சொல்லட்டும் என்று பெயர் வைத்தானோ - "பார்வதி" என்று !
ஜீவனுக்குள் ஜீவன் ஜனனித்து கண்டதில்லை மனிதர்கள் !
நானோ ஜனனமே நானென்று உதித்தவன் - நாதத்தின் ஒலியில்
நாதனானேன் - மீண்டும் நானே சலங்கையின் ஒலியில்
சங்கமமாவேன் - இவன் என்று யாரும் சொல்லாதிருக்க எனக்கு நானே
வைத்துக்கொண்டேன் ஷிவன் என்று !
சதியோ விதியோ கால சுழற்சியின் பிழையோ !
முறையோ தவறோ நீயென்னை பார்த்தது
மரணம் சுவைத்த இதயம் மீண்டும் இயங்க - துறவு
கொண்டிருந்த எனை காண வரம் கேட்டு வாழ்ந்தாயோ - தக்க்ஷன் மகளே !
அபாயம் என வந்த தேவனுக்கெல்லாம் வரமென்று வந்தாய்
சடையுடன் கைலையில் சதி எண்ணி தவமிருந்த என்னை
தேவி பார் விதி என்று வந்தாயோ - வந்த நேரம் காலனை
உறங்க சொல்லி வந்தாயோ - நான் அவனை ஏசாதிருக்க !
சடையன் என் தவம் கலைத்திடவே - ரதி
உடையோன் அவனை துணை சேர்த்து வந்தாயோ ?
அவன் மோக அம்புகள் துளைத்திடுமோ வஜ்ரம் நெய்த என்
இதயத்தை - தோல்வி பரிசளிப்பேன் மன்மதனுக்கு முத்தமாய் !
போற்றி போற்றி சொல்லியே சரண் புகுந்தாய் - என்னுள் நீயும் சதி
விலக அவள் உடலில் நீ நுழைந்தாய் என்னையும்ஆட்கொண்டாய் - சுவீகரித்தேன் உன்னையும், மரண
உறக்கத்திலிருந்து உயிர்த்தெழுந்த இதயத்தையும் !!
முதன் முதலாய் ஆனந்த தாண்டவம் ஆடினேன் நான் - மலரும்
வண்டும் கூடக் காண்கிறேன் - மலைகள் நில்லாது பாய்தலும்
நிலங்கள் நான்கிலும் செழுமையும், வளங்கள் முழுமையும், உயிர்கள்
இன்பமமுமாய் மகிழக் காண்கிறேன் - சர்வமும் நாமானோம் !
என்னில் சரி பாதி உனக்களித்து உமையொரு பாகனானேன்
நீயின்றி நானுமில்லை - சக்தியை உனக்களித்து ஜடா
முடியில் கங்கை தாங்கி மாய நிலையில் நானிருந்தேன் !
(தி)யாகம் எனக் கூறி எனை பிரிய வரமொன்று கேட்டாய்
போகாதே நீயும் எனை பிரிந்து என்றுரைத்தேன் - நீயோ
என் நெற்றிக்கண் தரிசனம் கேட்டு தவமிருந்தாயோ ? - இதய
படி தாண்டி செல்லவும் துணிந்தாயே என் சகியே!
ஆலகால விஷமோ உன் பிரிவு - ருசி பார்க்க தந்தாயோ எனக்கு!
உடலில் பாயும் முன்னே உள்ளத்திலேயே நிறுத்தியவன் நான் மறந்தாயோ நீ !
ருத்ரமும் ரௌத்திரமும் புதிதல்ல எனக்கு - புதியதோர் உலகை படைக்க பூமியில் கடவுள் கைவசமில்லை - கண்டிருப்பாய்
நீயுமொரு தாண்டவத்தை என் உருவில்!
சக்தி இல்லாது இவ்வுலகம் இயங்காது எனினும் நீயில்லாது என்னுலகம்
இயங்கும் - உலகம் நீயென்றேன், இன்று நானே உலகமாய் உயிர்த்தெழுந்து நிற்கின்றேன் என்னுள் சர்வமுமாய் !
பூமியில் கடவுளானாலும் சதிகளில் விதி விலக்கில்லை !
மீண்டுமொரு பிறப்பில் கடவுளாய் சந்திப்போம் சென்று வா
தக்க்ஷன் மகளே !!
-அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக