விவசாயி - மனிதன் மிருகமாய் மாறாதிருக்க


 
சேவ கூவும் முன்ன வானம் பாத்து
சூரியனை வாச தெளிச்சு வர சொல்லுவோம்
நேத்து வெச்ச மிச்ச சோத்த சொர்கமா நெனச்சு
வெங்காயமும், மொளகாயும் சேத்து கடிச்சு 
குடிச்ச சொகம் தெளியும் மின்னே வயக்காட்ட பாத்து
ஏர் கலப்பை தூக்கிக்கிட்டு கோவணத்தை
கட்டிக்கிட்டு நெஞ்ச நிமித்தி நடந்து போவோம்

காளை மாட்ட கூட்டிகிட்டு சொந்த கதை பேசிக்கிட்டு
காலை காத்து மூஞ்சியில வீசியிலே ரத்தமெல்லாம்
குளுந்து போவும் - பொடி நடையா நடக்கையில
சுத்தி மொளச்சு கெடக்கும் சீமை கருவேல இலைய
பாத்து நெஞ்சு பூரா நெறிஞ்சி முள்ளு குத்தி எடுக்கும்
காய்ஞ்சு போன நெலத்த நெனச்சு உசுரும் மெல்ல
வத்தி போகும் வானம் கூட பொய்ச்சு ஈரம் சொட்ட

இரக்கம் எப்பவும் சூரியனும் காமிச்சதில்ல
இருந்தாலும் உழவு ஓட்ட தவறினதில்ல
உச்சியிலே சூரியன் நிக்கிற வர நிழலுக்கு
கூட ஒதுங்குனதில்ல - ஓடையில ஓடுற
தண்ணி அள்ளி குடிச்சுப்புட்டு - வரப்புல
தூக்குச் சட்டியை தூக்கிகிட்டு முதுகுல மூணு
மாச புள்ளைய கட்டிக்கிட்டு  கொலுசு சத்தம்
கேக்கையில வவுரு தானா பசி எடுக்கும்

கம்மஞ்சோறு வாசனைக்கும் பிஞ்சு மங்கா
துண்டுக்கும் சொத்து பூரா எழுதி வைக்க ஆசை
தான் பாவி மகன் அவ கழுத்துல பொட்டுத் தங்கம்
போடக் கூட வக்கிலாம கிடக்க - அவளும்
வாய தொறந்து அவளுக்குன்னு எதையும்
கேக்காது கழுத - உழவனுக்கு வயக்கட்டுல
தான் காதலும் பிறக்குமோ ? - ஆழமாய் உ(வி)ழுவதால்!!

வரப்புல குலவி சத்தம் போடையில குல சாமி
வந்து நிக்கும் - எம்மூட்டு பொண்டுக புடவைய
கொசுவிக் கட்டி கதிர் அருவா வெச்சுக்கிட்டு சேத்துல
வந்து நிக்கையில சாமி கூட வழி விட்டு நிக்கும்
பெத்த புள்ள மரத்தடியிலே பாலுக்கு கத்திக் கிடக்க
இங்க நாத்த புள்ள போல பக்குவமா நட்டு வைப்பா
காத்துல ஆடுற ரெண்டு புள்ளைங்கள பாத்து பெரு மூச்சு விடுவா!!

புள்ளைய பத்து  மாசம் சுமந்து பெக்குறவ காங்குற
வலிய ஒவ்வொரு அறுவடைக்கும் உழவனும்
செத்துப் பிழைக்க - சோறு வைக்க சட்டியில
அரிசி இல்ல மாசம் கண்டா வட்டி வாங்க
வண்டி கட்டி தப்பாம வந்துருவான் கங்காணி
காது கொள்ளா பேச்செல்லாம் பேசி விட்டு
சொச்சம்முள்ள மானத்தையும் வண்டியில்
ஏத்தி கொண்டு செல்ல !!

அறுவடை முடியட்டும் - ஆறு மூட்டை நெல்லுக்கு
அறுநூறு கணக்கு போட்டு வச்சு, உரம் வாங்க
உசுரில்லாம நடந்து செல்ல - வயக்காட்டுல
வயசுக்கு வந்த கன்னிப் பொண்ண போல
காத்துல அசஞ்சு ஆடும் வயலை பாத்து மனசு
லேசாகி வெறச்ச மொகத்துலயும் கொஞ்சம்
துளிர் விட்ட புன்னகை அவளை (வயலை) பாத்து!

முறையிட மனுசனில்ல மழை கேட்டு
மனு கொடுக்க மருவாதியாய் முறையிட்டேன்
சொன்னது காதுல வுழுந்துச்சான்னு தெரியல
ஆனா சொல்லிப்புட்டு வந்துபுட்டேன் குல சாமிகிட்ட
எத்தினி வருஷம் கழிச்சு தீர்ப்பு வருமோ !
வருணனுக்கு தகவல் சொல்லி மனுவை படிக்க
தட்டுல தட்ச்சினை வச்சுப்புட்டேன் வெத்தலை பாக்கோடு !

தண்ணி பாய்ச்ச ஆத்துல தண்ணி இல்ல - ஓட்டம்
பாத்து ஓட்டை போட்டு உறுஞ்சி எடுக்க மனசும் இல்ல
ஒட்டு போட்டு அனுப்புனவன கேக்க தொகுதியில!
ஆளே இல்ல - கெணத்துலயும் தண்ணி வத்தி போச்சு
உழவன் வயித்த போல - வூட்டுல புள்ளைங்க எளச்சு
போச்சு மாடுகளையும் சேத்து தான் - களத்து மேடு
காத்து கெடக்கு நெல் எல்லாம் போர் அடிக்க

அறுத்து வெச்ச கதிரெல்லாம் என் முதுகுல
அடிச்சு நெல்லாக்கி அள்ளி எடுத்து மூட்டை கட்டி
அவிச்சு நீயும் திங்கயில சேத்து வாசம் வீசயில
அது தொண்ட குழியிலே இறங்கயில என்ன நெனச்சு
பாப்பியா - நாளைக்கு சோறில்லாம மனுசனை
மனுசனை வெட்டித் தின்னு பசி அடங்குவியா
உழவனும் மனுஷனுன்னு ஒரு நிமிஷம் நெனப்பியா?

பிரசவ காலம் வரும் வேலை - வலியில் துடித்திருக்க
போட்ட மனு போய்ச் சேர தாமசம் ஆச்சோ - குடுத்த
லஞ்சம் பாதியிலே களவு போச்சோ - நேரங்கேட்ட
நேரத்துல அழுது கொட்டி என் வூட்டுல எழவு கூட்டி
துருஷ்டி கேக்க வந்து நிக்க எப்படி மனசு வந்துச்சோ
மழைக்கு - நியாயம் சொல்லவும் ஆளில்லை கடவுள்களில்
அடிச்சா கேட்கவோ கூடி ஒண்ணா நிக்கவோ
நாதியில்லை மனிதர்களில் !!

மனிதன் அழிவு கடவுள் வசமில்லை - விவசாயி (உழவன்)
அழிந்தால் மனித இனம் தானாய் அழியும் !!

நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை - மாற்றம்
உன் (நம்) கைகளில்!!
 - அஜய் ரிஹான்

கருத்துகள்