படைத்தாலொன்றே உன் தொழிலானால் - மண்ணில்
கடவுள்களின் ஜனத்தொகை அதிகம் பெண்ணுருவில் !
உலகில் என் விழிகள் கண்ட முதல் பெண் நீயல்லவோ
உன்னை சொல்லாது தொடங்காது என் கவியோ - அன்னையவளுக்கும்
கதைகள் சொல்லி அரக்கன், அரசன் அவன் உருவம் காட்டி
தூங்கும் வரை என் மார் தட்டிக் கொடுத்து தூக்கம் தொலைத்த
என் இரு பாட்டிக்கும் !
தூங்குகையில் வேண்டுமென்றே தலையணை கொண்டு என்
தூக்கம் கலைத்து காலை வணக்கம் சொல்லி செல்லமாய்
கொட்டொன்று வாங்கிச் செல்லும் தங்கம் அவளுக்கும் !
எங்கோ எனக்காக காத்திருக்கும் என்னவளுக்கும் !!
பால் விற்கும் பால்காரியவளை அத்தை என உறவு சொல்லி அழைப்பேன்
பெண் தருவாளென்றல்ல அவள் சொல்லும் "என்ன மருமகனே" என்னும்
வார்த்தைக்காக - அவருக்கும்!!
உறவுகளில் உருவான சித்தி தொடங்கி அத்தை வரை அனைத்து
உணர்வுக்கும் !
நடந்து செல்கையில் தடுக்கிட்டு நின்றால் முகவரி தெரியா
முகங்கள் "பார்த்து போ கண்ணு" என சொல்வதும் கவிதை தான் - அந்த கவிதைகளுக்கும் !!
தினமும் என் வீட்டுக் குப்பை வாங்கிச் செல்லும் உறவில்லா
என் அக்காளுக்கு தினமும் ஒரு புன்னைகை பரிசளிப்பேன்
ஆசையாய் -என் அக்காளுக்கும்!
காலையில் கீரை விற்கும் கிழவி என்னை தன் பொக்கை
வாயால் பெயரன் என அழைக்கையில் கொஞ்சம் கரைகிறேன் நான்
கடைத்தெருவில் பாரம் தூக்கிச் செல்பவளின் முகத்தில்
கூட கனமில்லா புன்னகை ஒளிரக் காண்கிறேன் - அந்த கிழவிக்கும் !
என் கண்களுக்கு தெரிந்த பெண் தேவதைகளுக்கும் - என்னுலகம்
சுழல என் பின்புலத்தில் மறைந்திருக்கும் சக்தியாய் - நான் சொல்ல
மறந்த மறதிப் பிழைகளும் !!
வயக்காட்டில் நாத்து நடுவது முதல் விண்ணில் பாயும்
ஏவுகணை வரை அணைத்திலும் நான் காண்கிறேன்
ஏட்டில் பாரதி எழுதிச் சென்ற"புதுமை பெண்கள்" - நாட்டில் !
இன்றேனும் உன் புன்னகைகளுக்கு சுதந்திர சிறகுகள் முளைக்கட்டும்
உலகம் இன்று மட்டுமாவது உன் ஆசைகளை சுற்றி சுழலட்டும் !
யாதுமாகி நின்ற உன்னை வாழ்த்திச் சொல்ல நாளொன்று எதற்கு
இருந்தாலும் சொல்லி மகிழ்கிறேன் "பூவையர் தின வாழ்த்துக்கள்"
-அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக