போதி மரம் - கனவுத் தொழிற்சாலை



தூங்கிக் கிடக்கும் ஐந்தாமாறிவு எட்டிப்  
பாராது தட்டி அடக்கி ஆறாமறிவு மட்டும்
ஜீவித்திருக்க தினமும் உட்கொள்ளும்
அமுதென்று கூவிக் கூவி விற்கும் "கல்விச் சந்தை"

கருவில் உருவான முதல் நாளே அலைமோதும்
சந்தையில் என்னை விற்க - வரிசை கட்டி நிற்கும்
கூட்டத்தில் விண்ணப்பமொன்று வாங்கி விட
தவமிருக்கும்  மூடர் கூட்டத்தில் நீயும் ஒருவனோ?

மழலைத் தமிழில் உறவு சொல்லி நான் அழைக்க
மனமில்லையோ உனக்கு அதை கேட்டு மகிழ
வேற்று மொழியில் உன் அடையாளம் எனக்குச்
சொல்லி என் மொழிக்கும் ஊற்றுகிறாய் கள்ளிப் பால்

இரவில் நீ கதை சொல்லி தூங்க வைப்பாய் என பொய்யாய்
நான் அழுது உன்னை அழைக்க நீயோ பெட்டிக்குள் ஓடித்
திரியும் பொம்மை காட்டி உறங்கச் சொன்னாயே நியாயமோ?
கற்பனை உலகில் தனிமையில் விடுவது தான் கல்வியோ !

பாட்டி சொல்லும் புராணங்கள் எல்லாம் இன்று
வண்ணக் காகிதமாய் என் முன் வந்து என்னைப்பார்
என கதறி நிற்க அனுபவம் சொல்லும் கதைகளுக்கும்
அச்சிட்ட கதைகளுக்கும் வேற்றுமை சொல்லித் தர ஆளில்லை!!

பால் மனம் மாறா என்னை தூக்கி இன்று வரை காணா
உடை உடுத்தி என் புன்னகை எல்லாம் பூட்டி வைத்து
புதுவுலகம் காணச் சென்று வாவென்று வழியனுப்பி
புன்னகைத்து நிற்கும் உனக்கு மறுமொழி சொல்லக்
கூட தெரியவில்லை எனக்கு!!

பள்ளி செல்ல வயதொன்றிருக்க - வண்ணத்து பூச்சியென
பறந்து திரிய ஆசைதான் - என்னையும் சிறை பிடித்து
பறக்கச் சொல்லித் தர - எனோ விரிய மறுக்கும் என் சிறகுகள்
மீண்டுமொருமுறை கருவறை செல்ல திரும்பி வரவோ ?

உயரத் தூக்கி தூரம் தெரியும் அழகுகளை எந்தை
தோளமர்ந்து அவன் விரல் காட்டும் திசை எல்லாம்
பார்க்க கொள்ளை ஆசைதான் - பள்ளியில் என்னை
சுற்றி பொம்மைகள் இருக்க எனக்கோ அப்பா முகம் வந்து போக

வளர்வதை நிறுத்திக் கொள்ள வரமொன்று உள்ளதோ?
புராணக் கதை சொல்லும் புத்தகங்களில் தேடிப் பார்க்கிறேன்
பதில் சொல்லத் தான் ஆளுமில்லை - பொம்மைக்
கடவுளிடமும் பிரார்த்தனை வைக்கிறேன் தினமும்!!

என்னையறியாது வளர்ந்து விட்டேன் என்னுடல்
தசையும் நரம்புமே எனை ஏய்த்துப் போக - புரிந்து
கொண்டேன் பொம்மைக் கடவுளும் பொய்யென்று
வழியேதுமில்லை இனியென்று பழகிக் கொண்டேன் பள்ளி செல்ல !!

பொதி சுமக்கும் கழுதையோ நான் என விம்மி
விம்மி அழுதேன் கண்ணாடி முன்னே - என்
எதிர்கால கனவுகள் நிகழ்கால படங்களாய் ஒரு
நொடி வந்து போக திகைத்து போனேன் சிலையாக!!

ஊடகம் காட்டி உணவூட்டாதே உண்மைக்
கதை கூறி நல்லோர் வழி காட்டி கூட்டிச்
செல்வாயோ? - கல்விச் சாலையில் விற்பனை
நிலையங்கள் யாவும் தொழிற்சாலை என்ற பிம்பம் மாறதோ?

கழிப்பிடம் கூட பொதுவென்று இருக்க கல்வியில்
மட்டும் வியாபாரம் நடக்கும் விதியென்னவோ?
தரமென்று சொல்லி கூவி விற்கும் பண்டமோ அறிவு !!
விலைக்கு விற்கப்படுவது நானன்றோ உங்களிடம்!

செவி வழிக் கல்வியும் ஒளி வழிக் கல்வியும் புகுத்தி
சந்தையில் உன் தந்திர யுக்தி பறைசாற்றி மாயக்
கயிற்றை வீசி கொள்ளையடிக்கும் கூட்டமோ - வித
விதமாய் கட்டணம் வாங்கி உயிர் பிதுக்கும் எமனோ நீ!

வாய் மூடிக் கிடக்கும் அரசுக் கதவுக்கு ஞானத் திறவு
கோல் தந்து பொதுவுடைமை சொல்லித் தர ஆசான்
யாருமில்லை பால பாடம் தொடங்கி பருவ பாடம்
வரை பக்குவமாய் எடுத்துரைக்க எவருமில்லை!

தூவிய விதைகள் வேர்விடும் சமயம் துணை கொண்டு
எழுந்த களையை எடுக்க தெரியவில்லை சில சிற்பிகளுக்கு
அரசனாவதும் அசுரனாவதும் கல்வி புகட்டும் அறிவன்றோ
நெறி கூறி அழைத்துச் செல்ல சந்தையில் ஆளில்லையோ?

தூளி கட்டி ஆடவோ - கூட்டாஞ் சோறு அதை
சமைத்து உனக்கும் ஒரு வாய் ஊட்டவோ
பல்லாங்குழி ஆடவோ - சுவரில் என் கிறுக்கல்
ஓவியம்
வரையவோ - என் எதிர்கால ஞாபகங்கள்  !!

தவழும் வயதில் தவழ விடு நடை பயில எழுகையில்
உன் கைவிரல் தந்து உதவிடு பொம்மைகள் தேடும்
வயதில் என் முதல் நீங்கள் இருவரும் மாற்றிவிடுங்கள்
என் பொம்மைகளாய் - சொர்கமாகட்டும் என் குழந்தைப் பருவம் !!

விரும்பினும் திரும்ப கிடைக்கா குழந்தைப்  பருவத்தை பள்ளி என்ற சிறைச் சாலையில் தொலைத்து விடாதீர்கள், அழகாய் ஓடி ஆடி விளையாடட்டும், உறவுகளோடு ஒன்றிப் போகட்டும்,  பாட்டியின் கதைகளும், தாத்தாவின் மீசையும் அவனுக்கு துணையாகட்டும்.கல்வியை திணிக்காதீர்கள், கற்றுக்கொள்ளட்டும் இயற்கையோடு இசைந்து  வளர விடுங்கள்.


"கல்வி என்பது விதையென்றானால் அதில் அவன் கனவுகள் மட்டுமே உரமாகட்டும்"
 
- அஜய் ரிஹான்

கருத்துகள்