இதயக்கூட்டில் திரையொன்று போட்டு
இரும்பு சம்மட்டியால் தட்டி வைக்கிறேன்
என் ஆசைகளை
இச்சைகள் இருள் சூழ்ந்து விழி மயங்கும்
இம்சைகள் துளைத்தெடுத்த துளை வழியே
தேடிப் பார்க்கிறேன் "நான்" தொலைத்ததை !
துளித் துளியாய் சேர்த்த கோடிக் கணக்கான
துளிகளை சாரல் மழையாக கசிந்தோட அள்ளிப்
பருக முடியா நிலையில்
நெற்றியில் வழியும் ஒரு சொட்டு உதிரம்
நெருங்கி கரு விழி அருகே காற்றில் கரையும்
உயிரை பாரென்றுரைக்க விழித்தேன் !
சில நொடி என்னை மறந்தேன் இறக்கை
முளைத்த என் இதயம் வானை நோக்கி
ராசாளியாய் பறக்க
கூடிப் போன எடை பிண்டம் கிடப்பில் கிடக்க
இலகுவான ஒளி உருவம் மட்டும் இன்னும்
மேலே மேலே வேகம் கூட்டிப் பாய !!
சில்லென்ற மேக கூட்டங்களின் இடையே உருவமில்லா
ஒளிச்சிதறல்கள் பரவிக் கிடக்க பரவசமானேன்
மண்ணில் கொட்டிக் கிடக்கும்
எண்ணிலடங்கா கடவுள் சிலைகளின் உயிர்கள்
எல்லாம் உலவ கண்டேன் - அறிமுகம் செய்து கொள்ள
ஆவலானேன் கடவுள்களின் குலமறியாது !
கேள்விக்குறி புருவங்கள் என்னை நோக்கி பாய
ஆயத்தமாக சொர்க நரக வாசல் வழி கேக்க வந்தவனோ?
பாசக் கயிறு வந்தடையுமுன்னே
மாயச் சங்கிலியொன்று சுற்றிவளைத்தென்னை மின்னல்
வேகம் கொண்டு என்னை புவி ஈர்ப்பு விசையில் இழுக்க
வழிநெடுகே கண்ணீர் தடாகம் ஒன்று ஓட காண்கிறேன்
உறங்கிக் கிடந்த என் சதைப் பிண்டத்தோடு ஒளி மீண்டும்
ஊடுருவல் கொள்ள - வேட்டையென ஓலமிட்டு ஓடிவந்த
சதிகாரன் காலன் - என் பாதம் மட்டும்
தொட்டுச் செல்ல விழித்துக்கொண்ட விதியோ மார்பில்
எட்டி உதைக்க புதிதாய் இதயமொன்று துடிக்க மீண்டும்
ஒரு ஜனனம் கொண்டேன் மறுபடியும் நான் ரசித்த அதே பூமியில் !!
உதயம் முதல் ஸ்வாசம் வரை எல்லாம் புதிதாய் !
வலிகளில் புன்னகைகள் பிறந்தது - திமிறி எழுந்த தைரியத்திலேயே
வாழ்ந்துவிடு என்ற திமிரும்
மருந்தாய் நரம்புக்குள் புடைத்து ஏற ஒளிந்திருந்த கள்வன் காலனை மீண்டும் எமலோகம் வழியனுப்பி சிரித்தது என் கண்கள் !
வெள்ளை தேவதைகள் என்னை சுற்றித் திரிய சில மாயங்கள்
அரங்கேறும் - இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்கள் அவை
அன்பை அளவாய் மருந்தொடு
என்னுள் செலுத்தியதால் - நன்றிகள் சொல்வேனோ செல்லங்களுக்கு? இல்லை என்னை மறவா முத்தமொன்று
தருவேன் சின்னமாய் செல்ல கன்னங்களில் மட்டும்!!
வந்தேன் நின்றேன் மீண்டும் நடந்தேன் வலிகளை மிதித்தொரு
புதிய வழியோடு - மீண்டும் என் தாயின் கைக் குழந்தையானேன்
திடமான எந்தை தோள் பிடித்தொரு
நடை பயின்றேன் வேண்டியவர் வேண்டியவாங்கு உரு கூடி
உயிர் கூட்டி காலனை தின்ற மிருகமாய் மீண்டும் என்னுலகில் !!
போர்க்களம் மீண்டு திரும்பிய வீரனைக் கண்ட தாயை போலே
என்னை பார்த்த என்னுயிர் நண்பனெல்லாம் புன்னகைக்க ஓராயிரம்
யானை பலம் சதைகளில் உயிர்பெற
இன்னும் தொல்லைகள் செய்ய காரணங்கள் கொட்டிக் கிடக்க
விட்டுச் செல்வேனோ? உணர்வில் உதித்த உறவுகளன்றோ
என்னை இழுத்த மாயச் சங்கிலி இதுவோ?
மாயத்திரை கொண்டு புதைந்திருக்கும் புன்னகைகளை தட்டி
எழுப்பினேன் - கலைந்த கனவுகளை விழித்திரை கிழித்து
சாயாத கோபுரங்களாய் நிமிர்த்தெழுப்பி
இருளில் மறையும் என் ஆசை நிழல்களை நிஜங்களாய்
உயிருக்குள் தைத்துக் கொண்டேன் - வேகமாய் ஒளியானேன் !
இயலாமை என்ன முகமூடியோ ? ஒன்றை மறைத்துக்கொள்ள
நிஜத்தை விரும்பும் எனக்கெதற்கு - ஏற்றுக் கொள்ளாதவனுக்கு
இன்பமாய் பரிசளிப்பேன் புன்னகையை
அவன் மாயத்திரையை விலக்க - அனுதாபங்களை யாசித்து
வரும் யாசகன் நானல்ல - விரும்பினால் தந்து விடு அன்பை !
மாண்டவனுக்கும் மீண்டவனுக்கும் விதியின் இடைவெளி
நாழிகை கணக்கென்றால் என் மொழியில் வாழ்பவனுக்கும்
வீழ்பவனுக்கும் விதியின்
இடைவெளி நம்பிக்கை - நாளையின் விடியலை நம்பி
வாழ்பவனென்றால் இன்றை தொலைத்த ஏமாளியாகி இருப்பேன்
நீ எப்படி ? விலக்கிவிடு உன் மாயத்திரையை !!
" பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ "
நானாக மட்டுமே என்றும் நான்
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக