சாலையோரக் காற்று



சாலையோரம் நின்றிருந்தேன்
புயலொன்று கடக்குமென்று அறியாது
வானிலை மாற்றமோ ?

தேவதைகள் எல்லாம்
வெள்ளை நிறமென்று சொன்னது
பொய்யென்றுரைக்க வந்தாயோ ?

சுட்டெரிக்கும் சூரிய
காற்றில் கூட ஒரு நொடி உரு
மாறா மேகம் ஒன்று கடந்ததோ ?

உடம்பில் ஓடும் கோடி
அணுக்களும் ஒன்றாய் கூடி ஒரு
நொடியில் உன் முகம் வரைந்ததோ?
என் இதயத்தில் !

அந்த கடை விழிப் பார்வை
தீட்டி எடுத்த மின்னலொன்று என்னூடே
பாய நிசப்தமாகிப் போனது இயற்கை !

காற்றோடு சிணுங்கிய
கூந்தல் கொஞ்சம் அள்ளியெடுத்து
காதோரம் தூங்க வைத்த அழகை
என்னவென்று சொல்வதோ ?

அழகிகள் கோடி சுற்றி
உலவ கண்டதெல்லாம் மாயையோ?
பிரம்மை நீங்கி உயிர்த்தெழுந்தேன் உன்னால் !!

உன்னை பார்த்து நின்ற
இடம் விட்டு நகர முடியா உறை நிலை
என்ன மாயம் செய்தாயோ ?

சட்டென்று பாயும்
ரத்தமும் என்னுள் தாளம் போட
முதல் முறை வெட்கம் உணர்கிறேன்

கடந்து செல்லும்
மனிதரெல்லாம் காற்றடைத்த
பைகள் போலே மிதக்க காண்கிறேன் !

தூரத்தில் ஒலிக்கும்
பாடல் கூட இனிமையாய் என் காதில்
உனக்கும் எனக்குமானதாக கேக்க

புகை கக்கிச்
செல்லும் ஊர்திகள் எல்லாம் மெல்லிய
ஊர்வன பூச்சிகளாய் மாறிப் போக !

காற்றில் அசைந்தாடும்
உன் நூலாடை தவறியேனும் என்
முகம் தொட்டு உன் முகவரி சொல்லாதோ ?

புன்னகை வீசும்
உன் இதழ்கள் துடிக்க காண்கிறேன் பிரம்மன்
உனக்கு மட்டும் இதயம் அங்கு வைத்தானோ ?

நீ கண்சிமிட்டும் நேரம்
இருள் மூடிப் போகிறதே என்னுலகம்
இன்னும் நீ இதழ் சுழித்தால் என்ன ஆவேனோ  ?

கவலையுற்றேன் உன்னை
பெற்றவர்களை எண்ணி இப்படியொரு
அழகிற்கு பெயர் வைக்க யோசிக்கும் பொழுது

என்னைத் தவிர
வேறு கண்கள் உன்னைத் தீண்டுமோ என
சுற்றி தேடல் கொண்டேன் காவலாய் !

உன் வளைவு, நெளிவு
வதன அழகினை கவிதையில் கூட
சேர்ப்பதில்லை எழுத்துக்களும் காதல்
கொள்ளுமோ என !

வியந்தே போனேன் உன்
இதழ் பட்டு மண்ணுலகம் சென்ற நகம்
கூட இன்று தளிர் விட்டு செடியாய் நிற்க!!

இன்னும் என்ன சொல்ல?
என் ஒரு நொடி விழி துடிப்பில்
விழுந்த உன்னை மறுமுறை காண்பேனோ எப்பொழுது !

- அஜய் ரிஹான்

" வாசகர் கவனத்திற்கு : மேற்கூறிய யாவும் என் கற்பனையே, இதை என் வீட்டில் கூறி மூன்றாம் உலகப் போரிற்கு வித்திட வேண்டாம். "

கருத்துகள்