விஸ்வரூபம்




" தலைமுறைகள் மாற்றம் காணும் வானொலிகள்
காணொலிகளாய் மாறும் - விண்ணிலிருந்து காட்சிகள்
மண்ணை நோக்கி பாயும் - திரைகள் பெரிதாகும்
மனிதன் மனம் எதிர்மறையாகும் - ஊடகம் ஊடுருவும் "

கூவிக் கூவி என்னை அழைத்து வேண்டா
வெறுப்பென என்னை இழுத்து சென்று
விழுந்து விடு நீயும் என என் முதுகில்
எட்டி உதைத்தாய் மாய உலகத்தில் !

விலகி போகாதே நீயுமென மூளைக்குள்
மாயை புகத்தி என் நேரங்கள் யாவும்
இரக்கமின்றி புசித்தெறிந்தாய் மிருகமா
என பதறி எழுந்தேன் கட்டுண்டதை அறியாமல் !

என்னை மயக்கும் கலைகள் அத்தனையிலும்
புதுமை புகத்தினாய் நான் அறிந்த கலைகள்
கரை தாண்டாது என்னுளே புதையுண்டு போக
வழிவகை செய்தாய் என் சாப வரமோ நீ ?

காலையில் உன் குரல் கேட்டு விழித்து எழும்
கடவுள் தொடங்கி இரவு தாலாட்டு பாடும் வேலை
வரை அத்தனையும் நீயே வழிப்பறி செய்தாய்
ஷைத்தானும் உன்னுள் உறங்குவது நானறியேன் !

மூடன் மனிதன் அவனை அழகுற காட்சிப்படுத்தி
முட்டாளாக்கும் வித்தைகள் யாவும் சங்கமமாகும்
இடமோ கல்லையும் கலை பொருளென்று காசாக்கும்
வித்தகர் பலர் வீரம் காட்டும் சந்தை போர்களமோ ?

தர்மம் இதுவென்று விலைக்கு வாங்கிய மனிதர்கள்
கூடிப் பேசி இடை இடையே சொல்லி வைத்தபடியே
ரௌத்திரமும் தெளிக்க  விட்டு எழுதி வைத்த நியாயத்தை
சிறிதும் பிழையில்லாமல் வழங்குவதில் நடுநிலை தவறியதில்லை !!

குழப்பங்கள் குப்பையென ஆயிரம் கொட்டிக் கிடக்க
நீயோ தினமும் குடியை கெடுக்க வழிகள் பல
போதனை செய்கிறாய் சமுதாயம் செல்லும் வழி
எல்லாம் முட்செடிகள் வளர்த்து இயற்கை காக்கிறாய் !

உண்மைக்கு உயிர் கொடுக்க முன்வர துணிவில்லை
நீயா நானா என பொய் முகம் பூட்டி அரிதாரம் பூசிக்கொள்ள
கேளிக்கை கூத்தாட மட்டும் நேரம் பஞ்சமில்லை உனக்கு
நிர்வாணமாய் வைத்துக் கொள்கிறாய் உன் மனசாட்சியை !!

"பரபரப்பாக வியாபாரம் செய்ய என் பொழப்பை கெடுக்காதே "

முந்தியடித்து சங்கதி வாங்கி முச்சந்தியில் பார்
உரக்கக் கேளென்று பறைசாற்றி இகழ்ச்சியொன்றை
சாயம் பூசி உண்மை இதுவென்று ஜாலம் காட்டி
நாதியற்ற உலகில் நீயும் சாட்டையில் அடிக்கிறாய் !!


உயிரற்ற பிணத்தையும் வைத்து அதிலே உறவின்
உணர்வையும் தைத்து அழுகுரலையும் அழகாய்
பணமாக்கும் கழுகுக்கும் தந்திர நரியின் கூடலின்
உயிரற்ற சதை பிண்ட முதலையோ முதலாளிகள் ?

கருப்பும் இல்லாது வண்ணமும் இல்லாது நிறமற்ற
பூக்களாய்
நகரும் நரக வாழ்வில் உயிர் உறுஞ்சி
புழங்கி எமனாகி முதுகெலும்பில் சோம்பல் முறித்து
வரி வரியாய் உன் பழிகள் சுமத்துகிறாய் பாவமாய் !

நீயும் ஆட்டி வைக்கும் பொம்மலாட்ட பொம்மைகளோ
தராசில் அரசியலையும் ஆட்டி வைப்பவனையும் வைத்து
நடுநிலை பார்க்கச் சொல்லி கேட்பது பாவமென்றும் நினைக்கத்
தோன்றும் சில நொடி தோன்றும் இரக்கத்தால் !!

கலை என்று சொல்லி கலவரம் செய்வாய் வாதங்கள்
கேளாமல் முடிவுரை கூறி தீர்ப்பொன்று சொல்லி
பேனா முனை உடைப்பாய் தினச் செய்திகள் எனக்
கூறி நாட்டுப் பற்றென்று மார் தட்டிக் கொள்வாய் !!

உன் பலம் என்னவென்று அறியாது வாய்
மூடிக் கிடக்கிறாய் வியாபாரம் என்ற துயில்
நீங்கி விழித்துப் பார் அவலங்கள் கொட்டிக்
கிடக்க விருந்தொன்று உன்ன மனமுண்டோ?

பொய்கள் உலவும் உலகிலே சாகும் மெய்களுக்கு
மெல்ல உயிரளித்து எழுப்புவாய் களையகற்றி
தூய விதை அதை வித்திட்டு மாற்றம் விஸ்வ
ரூப(ம்) கொள்ள தரிசனம் காண்பாயோ?

சத்தியம் உரைத்துப் பார் அனைத்தும் சாத்தியமாகும்!
உண்மையை மட்டும் உணர்த்திப் பார் ஊடகத்தின் ஆழம் அறிவாய் !
நியாயம் எதுவென்று நினைத்துப் பார் நன்மை அறுவடை செய்வாய்
வியாபாரத்திற்கும் விபச்சாரத்திற்கும் வேறுபாடு புரிதல் கொள்வாய்
உரிமைக் குரலாய் ஊடுருவிச் செல்வாய் ஊடகமே !!
- அஜய் ரிஹான்

கருத்துகள்