குருதிப் புனல் - அத்தியாயம் 10




சூர்யா..!! பெயரை போலவே  கொஞ்சம் குணமும் சூடாகவே இருக்கும் ஆனால் அதில் அதிகமான நியாயமும் இருக்கும். அவனுக்கும் ஒரு அழகான குடும்பம் இருந்தது. அம்மா,அப்பா, செல்லத் தங்கை என்று எழுதா கவிதை போல, மகிழ்ச்சிக்கு என்றுமே குறைவேதும் இல்லாமல் மகிழ்வாகத் தான் இருந்தது.

இருந்தது என்றால்? இப்போது !!

ஆம்! இன்று சூர்யாவிற்கு துணையென்று கூடவே இருப்பது அவன் நிழலும், தைரியமும் தான். சிறுவயது முதலே பிறர் செய்வது தவறென்று தெரிந்தால் அடங்காத கோபம் கொள்ளும் குணமும் , தான் செய்தது தவறென்று தெரிந்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவும்  தெரிந்தவன். ஆனால்...மனதிற்குள் ஆழமான ரணமாய் ஒரு வலி. அதை நினைக்கும் போதெல்லாம் நரம்புகள் ஒவ்வொன்றுக்குள்ளேயும் தீப்பிழம்புகள் பாயும் மாதிரியான ஒரு அடங்காத கோபம்.

சூர்யா பிறந்த ஊர் கேரளமாக இருந்தாலும் தாய் மொழி தமிழ் தான். அப்பா சதாசிவம், அம்மா கனிமொழி. தொழில் காரணமாக கேரள நாட்டிலேயே இடம் பெயர்ந்தனர். விவசாயம் தான் முதலில் குடும்ப தொழிலாக இருந்தது, பின்னர் பண்ணையில் ஆள் வைத்து வேலை வாங்கவும், அவர்களுக்கு கூலி கொடுக்கவும் முடியாத சூழ்நிலை. நில புலன்களை விற்று இங்கே இடம் பெயர்ந்தனர். இங்கு வந்து கட்டிட வேலைக்கும், ஓய்வு நேரங்களில் கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டும் இருந்தார் சதாசிவம்.

உதவி என்று கேட்டு வருபர்களுக்கு இருந்தால் பொருளாகவும், இல்லாமல் போனால் உணவாகவும் கொடுத்து உதவி வந்தார். அவருக்கு எதுவுமே சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தார். இடம் மாறி வந்ததற்கு பிறகு குடும்ப அட்டை வாங்க நீண்ட நாட்கள் அலைந்து திரிந்து கேரள நாட்டு விதிமுறைப்படி தான் வாங்கினார். இவரின் குணங்கள் தான் சூர்யாவிடம் பால படமாக ஒட்டிக்கொண்டது. எவ்வித சிரமமின்றி தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை அந்த சம்பவம் நடக்கும் வரை.

நான்கு வயது குழந்தை திவ்யா, சூர்யாவின் செல்லத் தங்கை. வீட்டில் அம்மா இல்லாத போது அவ்வுளவு அக்கறையாய் பார்த்துக் கொள்வான். அவளுக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனையையும் பார்த்து பார்த்து செய்வான். "தங்கைகள் எல்லாம் அண்ணன்களின் முதல் மகளென்று இலக்கியங்கள் எழுத மறந்த தேவதை காவியங்கள்"  இது தான் சூர்யா நினைவு தெரிந்து எழுதிய முதல் கவிதை, அடிக்கடி இதை கனிமொழி தன் கணவரிடம் சொல்லி மகிழ்வாள்.

பள்ளி செல்லும் காலங்களில் திவ்யா அவள் அம்மாவிடம் ஜடை போட்டுக்கொண்டதை விட சூர்யாவிடம் ஜடை பிண்ணிக்கொண்ட நாட்கள் தான் அதிகம். பள்ளியில் இருவரும் ஒன்றாக தான் சாப்பிடுவார்கள். செல்லமாய் நிறைய சண்டைகள் போட்டுக்கொள்வார்கள் ஆனால் கடைசியில் அண்ணனுக்காக திவ்யாவும், தங்கைக்காக சூர்யாவும் விட்டுக் கொடுத்து போவது அந்த வீட்டில் எப்போதும் நடக்கும் ஒன்று தான்.

வழக்கம் போல் அன்று வேலைக்கு சென்று விட்டு மத்திய உணவிற்கு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடன் வேலை செய்து கொண்டிருந்த மணி கிருஷ்ணன் அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சாரம் உடைந்து கீழே விழுந்தார். அப்போது காயாத மாடி சுவர் இடிந்து அவர் காலில் விழுந்தது. பதறிப் போன சதாசிவமும், வேலையாட்களும் மணி கிருஷ்ணனை பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தன்னுடைய முதலாளியிடம் (ரகு சேட்டா) மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்ள சொல்லியும், மணி கிருஷ்ணன் குணமாகி வரும் வரை குடும்பம் நடத்த தேவையான பணத்தையும் தருமாறு கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினார்.

ஒரு வாரம் கழித்து மணி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று நலம் விசாரிக்க சென்றார் சதாசிவம். ஆனால் அங்கு இருந்த நிலைமை வேறு, மணி கிருஷ்ணனும், அவரது மனைவியும் மருந்து செலவுக்கு கூட வழியின்றி யாரை கேட்பதென தவித்துக்கொண்டிருந்தனர். உடனே தன் சட்டைப்பையில் வீடு செலவுக்கென வைத்திருந்த 500  ரூபாயை கொடுத்து விட்டு சட்டென்று அங்கிருந்து கிளம்பினார்.

தன் முதலாளியிடம் நியாயம் கேக்க, பேச்சுவார்த்தை கை கலப்பானது. உடனே சதாசிவம் கேரளா உழைப்பாளர் நலச் சங்கத்தின் மூலம் தன் முதலாளிக்கு எதிராக கோர்ட்டில் புகாரொன்றை பதிவு செய்தார்.

சாயங்காலம் வரும் வழியில் பள்ளி முடிந்து சூர்யாவும், திவ்யாவும் நடந்து வந்து கொண்டிருந்தனர். எதிரே தன் அப்பா என்றுமில்லாமல் இன்று கொஞ்சம் கோபமாய்  இருப்பதை பார்த்து சூர்யா அவரிடம் அப்பா, என்னாச்சுப்பா? என கேக்க, ஒண்ணுமில்லலடா தங்கம், வீட்ல போய் பேசிக்கலாம் வா என சொல்லிவிட்டு, நடக்கும் வழியில் இருவருக்கும் தின்பண்டம் வாங்கி கொடுத்து விட்டு இன்று பள்ளியில் என்னென்ன நடந்தது என கேட்டுக்கொண்டே செல்லமாய் திவ்யாவை தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டார் சதாசிவம்.

மூன்று மாதங்கள் கழித்து, அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தீவிரமான  விசாரணைக்கு பிறகு மணி கிருஷ்ணனுக்கு நீதி கிடைத்தது. நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ரகு சேட்டா, எந்தா? சதாசிவம், இதுல உனக்கு சாதகமா தீர்ப்பு வந்துருச்சுன்னு சந்தோஷப்படாத, நியாயம் நியாயம்ன்னு பேசுறவன்லாம் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான். நான் சொல்றது புரிலைல, நாளைல இருந்து வேலை இல்லாம வீட்ல இருந்து பாரு உனக்கே புரியுமுன்னு சொல்லிட்டு ஏளனமாய் ஒரு பார்வை பார்த்து கிளம்பினான் அந்த முதலை முதலாளி.

நாளை என்ன செய்வது? என யோசித்துக்கொண்டே கனிமொழியிடம் மிகவும் வருத்தமாய் பேசிக்கொண்டிருந்த சதாசிவம், மீண்டும் தன்னுடைய ஊருக்கே போய் விடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பு பரீட்சைகள் எல்லாம்  முடிந்து விடுமுறை நாளென்பதால், நேரம் கழித்து விளையாடி விட்டு வந்தான் சூர்யா. அப்பாவோடு சேர்ந்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு திவ்யாவை பார்க்கச் சென்றான்.

விடிந்தது, எப்பொழுதும் தனக்கு முன்னெழுந்து வந்து எழுப்பும் அப்பாவையும், இந்நேரத்திற்கு வாசல் தெளித்து கொண்டிருக்கும் சத்தம் கேக்கும் ஆனால் இன்று அதுவும் கேட்க வில்லை.அப்பாவின் அறைக்கு சென்று பார்த்தான், இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். எழுப்ப வேண்டாமென்று நினைத்து, வாசலில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்து சமையற்கட்டில் வைத்து விட்டு காலைக்கடன்களை  முடித்து வந்து அம்மாவின் காபிக்காக ஆவலாய் வந்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமானது.

அண்ணனனே தந்தையும், தாயுமாகும் நிலை வருமென்று அவன் நினைத்திருக்க மாட்டான். மரணம் இருவரையும் ஒரே நேரத்தில் கூட்டிச் செல்லுமென்று தூங்குமுன் சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள் சதாசிவமும், கனிமொழியும். வாங்கி வந்த விதியென்ன கரும்பலகையில் எழுதிய வாசகமா நினைத்தால் மாற்றுவதற்கு? ஆனால் சூர்யாவும், திவ்யாவின் நிலை?

அப்பா இறந்துட்டாருன்னு சொல்ல கூட தெரியாம, பக்கத்துக்கு வீட்ல போய் அப்பா எந்திரிக்க மாட்டேங்கிறாரு அப்படின்னு அழுதுகிட்டு இருந்தான் சூர்யா. என்ன நடக்கிறதென்றே தெரியாமல் அங்குமிங்கும் அண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டே திரிந்தாள் திவ்யா. பதறியடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்து மக்கள் ஆக வேண்டிய காரியங்களை செய்ய, பித்து பிடித்தவனாய் சுவரோரம் சாய்ந்து கிடந்தான்.

ஊர் பெரியவர் ஒருத்தர் அவனிடம், சொந்தக்காரங்க யாராவது இங்க இருக்காங்களா? தகவல் சொல்லனுமா? என்ன கேட்க, தலையை மட்டும் அசைத்து இல்லை என்று பதில் சொன்னான்.

அந்நேரம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தார் மணி கிருஷ்ணன், ஒரு கணம் நிலை குலைந்து போனார். நியாயம், தர்மம் என வாழ்ந்த ஒரு மனிதனுக்கே இப்படி ஒரு நிலையா? என கடவுளை எண்ணி கோபம் கொண்டார். சூர்யாவோடு இறுதி காரியங்கள் முடியும் வரை கூடவே இருந்தார் மணி கிருஷ்ணன். சதாசிவத்தின் மரணம் கேட்டு அந்த முதலாளியும் தன்னுடைய செய்கையை எண்ணி வருத்தம் கொண்டார்.

எல்லாம் பூர்த்தியாயிற்று. என்ன செய்வது, எங்கே போவது, பள்ளிக் கூடம் செல்வதா? இல்லை வேலைக்கு செல்வதா என ஆயிரம் கேள்விகள் தெளிவான ஒரே ஒரு பதிலை மட்டும் தேடி  மனதிற்குள் சுற்றிக்கொண்டிருக்க. மணி கிருஷ்னன் வந்து நின்றார் வாசலில் பதிலாய்.

அடைக்கலமாய் அவரது வீட்டில் தங்கி பள்ளிக்கூடம் சென்றான் சூர்யா, ஆனால் மனதிற்குள் தன் அப்பா சொல்லிகுடுத்த விஷயங்கள் நொடி நேர மின்னலாய் கடந்தது. கொடுப்பவன் நண்பனாகவே இருந்தாலும் அளவோடு வாங்கிக்கொள்ள வேண்டும், நிற்பதென்று முடிவானால் சுயமாய் நின்று பழகு ஏனென்றால் உன் சுமையை நீ தான் சுமந்தாக வேண்டும், எதுவும், எப்பொழுதும், எங்கேயும், சட்டப்படி தான் நடக்க வேண்டும். அப்பாவின் வாக்கியங்கள்  வேதமானது.

படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் அருகில் இருந்த மெக்கானிக் கடையில் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான் சூர்யா. காலம் நகர நகர அவனும் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேர விரும்பினான். தனக்கு தெரிந்த மெக்கானிக்கல் துறை சார்ந்த படிப்பினை படிக்க நினைத்த அவனுக்கு அதற்கான பண வசதி இல்லை. பின்னர் சென்னையில் உள்ள அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தான். தன் வாழ்வின் அர்த்தம் தன் தங்கை என்றே என்று வாழ்ந்து வந்தான். அதே நேரம்  திவ்யாவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள்.

தன் சுய உழைப்பில் சிறிதாய் ஒரு மெக்கானிக் கடை நடத்தி வந்தான். கல்லூரி சேர்ந்த பிறகு அப்பாவுடைய ஊர்க்கே சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருந்தான். அன்று சாயங்காலம் திவ்யாவிடம் அவள் ஆசையாய் கேட்டுக்கொண்டிருந்த வெள்ளிக் கொலுசை தான் உழைத்து சேர்த்து வைத்த பணத்தில் வாங்கி வந்திருந்தான். அதை பார்த்ததும் வீட்டு நிலவுகாலுக்கும், தரைக்குமாய் துள்ளி குதித்தாள்.

நாளை மறுநாள் மீண்டும் சென்னை செல்ல வேண்டும் என்று திவ்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் சூர்யா.

ஆனால் நடந்தது வேறு...!!

அனன்யா வரவில்லை என்ற ஏக்கம்மா? வருவாள் அடுத்த அத்தியாயத்தில் வேறு ஒரு ரூபத்தில்...!!

கருத்துகள்