ரௌத்திரம்


வேர்கள் கிளர்ந்தெழ எரிமலை பிழம்பென
ஊடுருவி கொதித்தெழும் தீயோ - பார்வையில்
பொசுக்கிடும் பராக்கிரமம் தந்தருள்வாய்
ருத்ரமாய் என்னுள் உயிர்த்தெழும் ரௌத்திரமே!!

நிஜமென்று தெரிந்தும் நிழலென்று ஒதுங்கிப்
நிலையொன்று - துடிக்கும் சத்திலும்  உறங்கிக்
கிடக்கும் என் இதயம் வீர கதைகள் பல சொல்லி
கற்பனைகளில் மூழ்கி மொத்தமாய் மாய நிலையில்!!

வார்த்தைகளில் வீரம் புகட்டி செயல்களில்
கோழையாகிப் போன கொத்தடிமைகள் தானோ?
மறைந்து போன ராஜ வம்சம் - மறையா வித்தாய்
காலம் கடந்தும் விருட்சமாகி நிற்கும் அசுர குணம்!!

மழுங்கிப் போனதோ ரௌத்திரம்?

அகிம்சையால் வாங்கிய சுதந்திரம் தானே என்று
அலட்சியமாய் அரக்கனாய் மாறிய ஜாதியொன்று
மனிதக் கடலில் கலந்து விட்ட களங்கமாய்
களையெடுக்க ஆளின்றி ஆட்சி செய்ய!!

நானும் வாழ்கிறேன் மௌனமாய் !!

அநியாயங்கள் எல்லாம் அந்நியமாய் போக
மூச்சுக்காற்றும் கலப்படமாகிப் போனதோ?
மனிதனில் வேற்றுமை நீயென்றும் நானென்றும்
நடுவில் பிறந்ததோர் அந்நிய முகமொன்று - சுயநலமாய்!!

வீதியில் தவறென்று ஒன்று கண்டும் ஒதுங்கிப்
போகும் கண்களும்  - நீதிகள் அநீதியாய் உருமாறும்
செயலொன்று நிகழ்ந்தேறும் நிலையிலும் நடை
போடும் கால்களும், உயரா கரங்களும் இருந்தும் பயனுண்டோ?

துகிலுரித்து விளையாடும் கௌரவர் சபை போலானதோ?
பாரதம் - துரியோதனன் குணம் மட்டும் பல்லாயிரம் உயிர்
புகுந்து வீர நடை போட்டுத் திரிய கண்ணன் உற்பத்தி மட்டும்
குறைந்து போனது  - பாவம் திரௌபதிகளுக்கு மட்டும்
பஞ்சமில்லை என் நாட்டில்!!

பாண்டவர் மீது மட்டும் குறை சுமத்தாமல் போவது நானும் ஆண்மகன் என்ற கர்வம் தானோ?

நியாயமில்லா தொடுதல் பொழுதில் ஆவேசமாய் விலகிப்
போகும் வேசிகளின் ரௌத்திரம் கூட இல்லாமல் போனது!
வீரமாய் முறுக்கிக் கொள்ளும் மீசைகளும் தானாய் தற்கொலை
செய்து கொள்ளும் - மரித்துப் போன ரௌத்திரம் பார்த்து!!

ஐந்தறிவு கொண்ட மிருகம் காட்டும் கோபம் கூட
ஏழாம் அறிவை நோக்கி நடை போடும் மனிதனிடமில்லை!!
பாகுபாடுகள் ரௌத்திரத்திற்கு இல்லை எந்நேரமும்
வெளிப்படும் காளியாய், முனியாய் ஆக்ரோஷமாய்!!

ரௌத்திரம் யாதென்று கேட்பாயோ?

வாளின் முனையில் கூர்மையாய் வீற்றிருக்கும்
கம்பீரமாய் பேசும் வார்த்தையில் ஒலியில் ஒளிந்திருக்கும்
பார்க்கும் பார்வையில் பாவங்களை பஸ்பமாக்கும்
தவறுகளை அறுத்தெறியும் தாய்ப்பால் ஆயுதம்!

பொய்களின் முகமூடியுடைத்து மெய்யின்னை
விடுதலை செய்யும் நிகரில்லா நீதியரசன்
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கரை கடந்து நிதமும்
பெருக்கெடுத்து பொங்கி வரும் வீரமன்றோ?

எனக்கென்னவென்று நீ கடந்து செல்லும் ஒவ்வொரு
அதர்மமும் நாளை நீ வரும் பாதையில் முட்களாய்
உன்னை வரவேற்கும் !!

மரணம் ஒரு முறை என்றால் அநியாயங்கள் கண்டும்
காணாமல் நீ கடக்கும் ஒவ்வொரு முறையும் இறந்தும்
மீண்டும் பிறந்தும் - என்றோ ஒரு நாள் மொத்தமாய்
சவக்குழியில் புதைத்திருப்பாய் ரௌத்திரத்தை!!

மௌனமாய் போவது நலனென்று கருதி நகர்ந்து
போகும் ஒவ்வொரு நொடியும் உன் மௌனத்தால்
நிகழ்ந்தேறும் பாவங்கள் உன் கணக்கில் பதிவாகும்
இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறதா உன் ரௌத்திரம்?

சமுதாய சாயங்கள் பல பூசி வண்ணக் காரணங்கள்
சொல்கிறாய் - மீண்டும் எழுந்து வாவென்று கட்டளையிட்ட
பின்னும் வெளி வர மறுக்கும் கட்டுண்டுண்ட குழந்தையோ?
இருளில் நீ தேடும் நிழலோ? உன் ரௌத்திரம் !!

ரௌத்திர சிறகுகள் விரியும் வரை 
என்றும் முடியாது இந்த நிலை!
உனக்கென்றொன்று நிகழும் வரை 
விழித்துக் கொள்ளாது உந்தன் மாய நிலை !!

மௌனமாய் கிடந்தது போதும் விழித்துக்கொள் என்னுள் உறங்கும் ரௌத்திரமே !!

- அஜய் ரிஹான்

கருத்துகள்