சாசனம்



எழுதா சாசனமொன்று
உருவான கருவில் ஒரு அணுவில்
முற்பிறவி வரமொன்று
அம்பெனதாக்கித் தைத்து மாயமாய்
பிறை பிறையாய் உன்னூடே
வளர்ந்து பிறப்பெடுக்கும் மாயன் விதி!

உணர்ச்சிகள் உருவெடுக்கும்
உருவங்கள் மாறி மாறி மாற்றம் காணும்
சூழ்நிலைகள் சார்ந்து சூழ்ச்சிகள்
சூழ்ந்து கொள்ளும் - சூசகமாய் வினைகள்
வளைந்து போக விளையாட்டுகள்
வீரமென்று ஆடிக் கலைப்பாய்!!

காலம் ஒரு நாள் காலனாய்
காலை சுற்றும் நாகமாய் மாறுமென்று
அறியாது மெத்தனமாய் உதா
சினமாய் ஆல மர விழுதென்று உதறி
ஞானங்கள் மங்கித் திரிந்து சில
காலம் வாழ்ந்து விடைபெறும் பூலோகவாசியே!!

நிரந்திரமில்லா இடமிதுவென்று அறியாது
போக மோகங்களில் மூழ்கி விடுவாய்
மீட்பர் நீட்டும் கரமென்று அறியாது
கோப வாளால் வெட்டி வீழ்த்தி கர்வ வாகை
சுயமாய் சூடிக் கொண்டு வந்த காரணம்
மறந்து போகிறாய் நீயென்ற ஆணவத்தால்!!

மனதிற்குள் ரணமொன்று புகுந்தால் வருவது
மரணமென்று உணர்த்த கடவுள் துளிகள்
வீசிச் சென்ற விதைகள் விளைந்து
(வி)வேகமாக வளர விடாது தளிரிலேயே   
கள்ளிப் பாலூற்றி தாலாட்டும் பாடி விடுகிறாய்
சித்ர குப்தனுக்கும் ஓய்வில்லா வேலை தருகிறாய்!!

இசை கேட்டு மயங்கி உயிர் விடும் மானும்
ஒளியென்று நினைத்து தீயில் மடியும் விட்டில்
பூச்சியும் சுவையில் மயங்கி தன் கூட்டிலேயே
வெப்பத்தில் வெந்து போகும் தேனீக்களும்
கண்டும்  - கேட்டும் - சுவைத்தும் புலன்கள்
அறுவடை செய்யும் தீமைகள் - இயற்கை மனிதன்
உனக்குச் சொல்லும் உதாரணங்கள்- அடக்கி ஆள்பயோ?

வாவென்று அழைப்பான் சர்வநாடியும்
ஊமையாகிப் போகும் - காலங்கள் காத்திருந்த
காலன் தரிசனம் காட்சியாய் நிற்கும்!
கடந்து வந்த பாதையில் நிகழ்தேறிய நாடகங்கள்
நிழற்படமாகிப் போகும் நிஜங்கள் உணர
நாழிகைகள் மட்டும் மீதமிருக்க மீண்டு வருவாயோ?

பாசங்கள் அறுந்து கயிறை பற்றி பயணிக்க
பிரயத்தனமாவாய் - இன்னும் கொஞ்சம் காலம்
வாழ்ந்து விட நீ காட்டாத கருணையை யாசகமாய்
கேட்டு நிற்பாய் - உன்னுள் பிரவேசித்த மிருகம் கூட
மிரண்டு நிற்கும் முறைத்து நிற்கும் காலனவன்
கருநிற வாகனம் பார்த்து - இரக்கம் தருவானோ?

சேர்த்து வைத்த செல்வமெல்லாம் உன்னை விடை
யனுப்ப வரிசையில் நிற்க - நிறைவேறா ஆசைகள்
எல்லாம் இறுதி ஸ்வாசமாய் காற்றுடுத்திய தேகத்தை
சுற்றி வருடிக் கொடுக்க இறுதியாய் பெய்யும்
கண்ணீர் மழை நீயுமொரு குளியல் கொள்ள கடைசியாய் 
வெற்றி பெற்றது நீயா? நானா? காலமா?

கதறி கதறி அழுவாய் அறுந்து கிடக்கும் பந்தங்கள்
பந்தம் கொண்டு நடை போடும் -ஐம்பூதங்களில் ஒன்று
கட்டித்தழுவும் - ஒளியொன்று புறப்பட்டு கிளம்பும்
ஆன்மாவென்று - ஈமக்கடன்கள் யமலோக பயணத்திற்கு
கட்டுச்சோறாய் வாங்கி முடிந்து காற்றில் கலந்த
சாம்பலாய் வேகமாய் பாய்வாய் - நிரந்தரமாய் !!

நரக லோகங்களில் நரன் நின்
வருகை வழியில் வழித்துணையாய்
வகை வகையாய் யமனை குதூகலிக்கும்
விளையாட்டுப் பதுமைகளாகி
கிங்கனர் கை காட்டும் வழிகளில் உடலில்லா
புத்துயிர் பெற்று பாப லோகம் அடைவாய்!!

சாசனம் எதுவென்று உணர்ந்தாயோ அது
மரணம் என்பதையும் மறந்தாயோ?
பயணிக்கும் காலத்தில் பயனற்ற பொருள் மீது
பற்றதிகம் கொண்டாயோ? பாச
கயிற்றிற்கும் நரக ஸ்வர்கத்திற்கும் விலை பேசிட
துணியும் மனிதா துணை கொள்வாய் நீயும்
"ஒரு நாள் மீளா துயில்"

தாமிஸ்ரம், ரௌரவம், கும்பீபாகம், அசிபத்ரம், 
வஜ்ரகண்டகம், கிருமி போஜனம், வைதரணி, 
லாலாபட்சம், அந்த கூபம், சான்மிலி, பூயோதம், 
சூசிமுகம், அவீசி - இதன் அர்த்தங்கள் ஒழுக்கம்
போதிக்கும் - வாழும் காலம் தீர்மானிக்க தீரன்
நீயில்லை நிலையானவை உணர்ந்து கொள்
"ஆக்கமும் அழிவும்"

பூமியில் வாழும் காலத்தில் ஸ்வர்க சௌகரியங்களை 
வாழ்ந்து விடு - கொஞ்சமேனும்
புண்ணியங்களை தலைமுறைக்கு சேர்த்து வைப்பாயோ? நல்லவனாய் வாழ்ந்து விட்டால் வாழும் காலமே ஸ்வர்க்கமே!!

புராணங்களின் பக்கங்கள் கூறும் தண்டனைகள்
மதங்கள் சார்ந்து மாற்றம் கொள்ளலாம் - மாறாதது
மரணம் ஒன்றே !!

"காலனே கட்டளை மரணமே சாசனம்"

- அஜய் ரிஹான்

கருத்துகள்