சகியே!
தினமும் எழுந்தவுடன் கலைந்து விடும் கனவு
இன்று மட்டும் ஆழமாய் என் மனதில்..!
இன்று நீ வருவாய் என நானறியேன் நான்
காணா முகமாக வந்தென் இரவை
களவாடிச் சென்றாயடி!!
தெளிந்த நீரில் மிளிரும் மலரின் பிம்பம்
போலே உன் முகம் - ஆயிரம்
வீணைகள் இசைப்பினும் கிட்டா மயக்கம்
தந்தாய் ஒற்றை புன்னகையில்!
இன்னும் மூழ்கிக் கிடக்கிறேன் மீண்டெழ
உன் கரங்கள் கிடைக்காமல்!!
ஆசை முகம் மறத்தல் நியாயமோ? - இல்லை
காற்றில் கலந்து விட்ட உன் குரல்
மெல்லென கரைதல் தகுமோ? - விடியும்
முன்னே விழிக்கும் சூரியனை
இன்னும் கொஞ்சம் உறங்கச் சொல்கிறேன்
உன்னுடன் நீளட்டுமே இந்த கனவு!
தேவதை, பேரழகி நீயென்று பொய்யுரைத்து
உனையழைக்க விரும்பா என்
இதழ்கள் தயங்கும் நிலை பார்த்து என்னவள்
நீயென்று சொல்லி முடித்தது உன்
வசமான என் இதயம் - இதுவரை கடந்து சென்ற
கன்னிகள் எல்லாம் கானல் நீரானது என்னவோ?
பிரம்ம முஹூர்த்தத்தில் நிகழ்ந்தேறிய சுப
முகூர்த்தக் கனவனாய் - நிலவொளி
சாட்சி சொல்ல களவுத் திருமணக் காட்சிகள்
என்னை மறந்து வேறொரு உலகம்
வந்தேனோ ? - நீயும் நானும் வாழுமிடத்தில்
அருந்ததி நட்சத்திரமாய் இவ்வுலகம்!!
மயில் தோகைகள் பட்டு நூலோடு கலவி கொண்டு
உன் தேகம் சுற்றிக் கொள்ள - தங்க
நகைகள் ஏதும் வேண்டாமடி உனக்கு என் மூச்சுக்
காற்றில் உருகிப் போகுமோ? என பயம்
எனக்கு - பூக்களுக்குள் பூக்கள் ஒளிந்து கொள்ளும்
விந்தை என்னவோ உன் கூந்தலில்!!
ஸ்வரங்கள் ஒவ்வொன்றாய் உன் பாதம் மீட்டிக்
கொண்டு நடக்க - சுழலும் உலகம் உன்னை
பார்த்த அந்த நொடியிலேயே உறையாதோ? என
கடிகார முட்களுடன் நிராயுதபாணியாய்
மண களத்தில் நான் - இன்றுவரை கண்டதில்லை
இப்படியோர் "அழகையும் கனவையும்"
உன் வலக்கரம் பிடித்து நடப்பது என் வரம் தவறி
விழும் முன்னே தாங்கிப் பிடித்தும்
விழுந்தே விட்டேன் மொத்தமாய் உன்னுள் - இந்நேரம்
ஓவியனாய் இருந்திருந்தேனாயின்
வரைந்திருப்பேன் உன் முகத்தை, பாவம் தூரிகை கொண்டு
நாழிகைகள் விழுங்கி எழுத்தோவியம் தீட்டிய
இப்பாவியை மன்னிப்பாயோ?
கண்கள் பேசும் என நானறிவேன் அவை முத்தமும்
இடுமென்று உன் இமை மூடித்
திறக்கையில் கண்டுகொண்டேன் - சகல வாத்தியம்
முழங்கையில் நான் உன்னவனானேன் - உன்
பெயரின் பின்பாதியில் அடைமொழியானேன் என்னுள்
கலந்து விட்ட உன்னுள் நானும் "அடைக்கலமானேன்"
குளியல் முடிந்து உன் புடவை நுனியால் துவட்டிய சாரலில்
கலைந்தது என் கனவு!!
இது முகம் தெரியா முகவரியான
என்னவளுக்காக மட்டுமே!!
என்னவளுக்காக மட்டுமே!!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக