காதம்பரி - வாளும் வளைவுகளும்


சந்திர வேளையில் மானொன்று தேடி
புரவி ஏறி கானகம் பிரவேசிக்க மங்கும்
ஜுவாலையின் கதிரொன்று கண்ணை கூச
நிலவொளி பட்டு உயிர்பெற்ற சிற்பமொன்று
அன்ன நடை போட்டு உலவ மயங்கினேன்!! 

காற்றில் அசைந்தாடும் கருங்குழல்
வெண் மேகக் குழியில் தவழும் கரு
விழியும் தினமொரு கமலம் பூக்கும்
கன்னங்கள் பேதையோ, ராதையோ
என்னை சாய்க்கும் போதையோ நீ?

அயில் கொண்ட வேலோ உன் பார்வை
ஆழப் புணரியோ புன்னகை தத்தளித்து
மீளா மால் தனில் பொழில் மறந்து ஆகம்
வேகம் கூடித் துடிக்க இழும் பொழுது யாவும்
உன் பெயர் சொல்லி களித்தேன் - காதம்பரி 

அழகே திக்கெங்கிலும் விஜயம் செய்தும்
நின் அசலாய் காரிகை காணாது தோல்வி
யொன்றே முடி சூடி தீரா வேட்கையென மீண்டு
மொரு படை திரட்டி மீட்டு வர நனை போ
ரொன்று  தொடங்கி வைத்தேன் தேடல் நீயென்று!

காந்த தேகமோ கண்டவுடன் புணர்தல் தேட
கந்தர்வ ரம்பையோ யாழ் நரம்புகள் கூட்டி
யாக்கை நெய்திட அதை நானொருவன் மீட்டிட
ராகங்கள் உன் இதழில் ஜனனம் கொள்ளாதோ
லயமும் ஸ்வரமும் சேர அந்தப்புரம் அதிராதோ!!

பஞ்சணையில் துயில் வேண்டித் தவிமிருக்க
காதோரமாய் என்னை தீண்டும் உம் மூச்சுக்
காற்றும், மயிலிறகாய் என் தேகம் வருடும்
உன் நினைவலையும் கழல் அடியில் வளைந்து
ஓடும் ரேகைகளில் தொலைந்து போகும் இரவுகள்

நடுநிசியில் நித்திரை தொலைத்தெழுந்து
காற்றில் கலந்து நிற்பது நீயென்று வாரி
கட்டித் தழுவிட கரங்கள் விரிந்திட கண்டது
கனவென்று உணரா வீரனே அஸ்திரங்கள்
எல்லாம் கட்டுண்டதோ அவள் கொடியிடையில்?

உன் பெயர் சொல்லிச் சொல்லியே உண
வெல்லாம் அமிர்தமாகி போனதென்னவோ?
பாவை நீ யூட்டும் மயக்கமென்னஆல கால
விஷமோ வஞ்சியிவள் நினைவில்  பிறழ்ந்து
திரியும் கொற்றவன் நான் மட்டும் விதிவிலக்கா?

ஆயிரம் வாரணம் வரினும் மார்பின் வல்லை
மோதி முட்டி சாயாதோ - என் வாள் எழுதும்
சரித்திரம் யாவும் உன் முதல் முத்தமொன்றே
எழுதித் தீர்க்கும் வளைவுகளில் ஈர்ப்பு விசை
யதிகமோ வேந்தன் என் ஆதிக்கம் நடக்குமோ?

சந்திரன் என்னும் அரசன் காதம்பரி என்னும் பெண்ணின் நினைவாகி அவளது அழகில் மூழ்கி எழுதப்பட்டது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

- அஜய் ரிஹான்

கருத்துகள்