வெகுநேரமாகியும் திவ்யா வீட்டிற்கு வரவில்லை, அவளுடன் தினமும் விளையாடும் பக்கத்து வீட்டு தோழிகளிடம் சென்று விசாரித்தான். இன்று மதியம் முதலே அவளை பார்க்கவில்லை என்றே பதிலளித்தனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை, இறுதியாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க மணி கிருஷ்ணனை தன்னுடன் கூட்டிச் சென்றான்.
வயது, நிறம், கடைசியாய் அணிந்திருந்த உடை, அங்க அடையாளங்கள், என வழக்கமான காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு வீட்டிற்கு வரும் வழியில் அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவன் ரோட்டிலேயே மயங்கி விழுந்தான். பதறிப்போன மணி கிருஷ்ணன், அவனை தண்ணி தெளித்து எழுப்பி வீட்டிற்கு கூட்டி வந்தார். ஒன்னும் கவலைப்படாத சூர்யா, திவ்யா வந்திடுவா என சமாதானம் கூறி சென்றார்.
மறுநாள் காலை சரியாக 8.30 இருக்க, காவல் துறையினர் இருவர் சூர்யாவின் வீட்டு வாசலில் வந்து நின்றனர். திவ்யாவை நினைத்துக் கொண்டே இரவு முழுவதும் தூங்காமல் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் அப்பா அம்மாவின் புகைப்படத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தான். இதற்கிடையில் இரண்டு முறை காலிங் பெல் அடித்தது கூட தெரியவில்லை அவனுக்கு. காவலர்கள் லத்தியை கொண்டு கதவை தட்டவும் வெடுக்கென்று விழித்தெழுந்தான்.
இவ்வட சூர்யா யாரானு? என கேக்க, நான் தான் சார், எதாவது தகவல் தெரிஞ்சுச்சா? என பதற்றத்துடன் கேக்க, உங்களை சார் கூட்டிகிட்டு வர சொன்னார், மத்த விஷயம் எல்லாம் சார்'க்கு தான் தெரியும் என்றார் அவர்களில் தமிழ் தெரிந்த ஒரு காவலர். கீழே சூர்யா காவலர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த மணி கிருஷ்ணன் கிடுகிடுவென கீழிறங்கி வந்தார். என்ன சூர்யா? என்ன சொல்றாங்க? திவ்யா கிடைச்சுட்டாளா? என்றார் ஆவலாய். இன்ஸ்பெக்டர் கூட்டிகிட்டு வர சொல்லி இருக்காராம் என்றான் சூர்யா.
இரு இதோ வந்திடுறேன் என உள்ளே சென்ற மணி கிருஷ்ணன் சட்டென்று சட்டையை மாட்டிக்கொண்டு வந்தார். இருவரும் காவலர்களுடன் காவல் நிலையம் புறப்பட்டனர்.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எங்கோ வெளியே சென்றிருந்தார், ஓரமாய் இருந்த நாற்காலியில் இவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, சிறிது நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் ஆன்டனி மோசஸ் இரண்டு பெண் காவலர்களை அழைத்து வந்திருந்தார். சூர்யாவையும், மணிக் கிருஷ்ணனையும் கூப்பிட்டு, நேற்றைக்கு திவ்யா காணாமல் போன நேரம் சரியாக தெரியுமா என்றார், சாயங்காலம் ஒரு நான்கு மணிக்கு பிறகு அவளை பார்க்க வில்லை எனவும், மணி ஆறான பிறகே அவளை காணாது தேட தொடங்கியதாகவும் அவரிடம் கூறினான் சூர்யா.
சரி, என்னோடு வாங்க. பரம்பிக்குளம் அருகே ஒரு பதினைந்து, பதினாறு வயதுடைய சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த சடலம் இறந்து சுமார் 20 மணி நேரம் இருக்கலாம் என பரம்பிக்குளம் காவல் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர் என மோசஸ் சூர்யாவிடம் சொல்ல, ஒரு நொடி அவன் உயிர் அவனிடமே இல்லை. அது திவ்யாவாக இருக்காது, என கத்திக்கொண்டே காவல் நிலையத்தை விட்டு வெளியே ஓட, அவனை கட்டுப்படுத்தி நிறுத்தினர் மணி கிருஷ்ணனும், இரண்டு காவலர்களும்.
வண்டி பரம்பிக்குளம் நோக்கி புறப்பட்டது, அது திவ்யாவாக இருக்க கூடாது என தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டே வந்தான். அவனை அறியாமலும் கண்களில் கண்ணீர் வழிந்தது. சொந்தம் என சொல்லிக் கொள்ள அவனுக்கு இருந்தது திவ்யா ஒருத்தி மட்டும் தான். அவளுக்கும் இந்த நிலையா? என வழியில் தென்பட்ட கடவுள்களை எல்லாம் பார்த்து மனம் நொந்து போனார் மணி கிருஷ்ணன்.
சுற்றி மரமும், பாதைகளில் வளைந்து, நெளிந்து திடமாய் வளர்ந்திருந்த வேர்களும், சலனமாய் ஓடும் ஓடைகள். அமைதியை கலைக்கும் சைரன் சத்தத்துடன் வந்து நின்றது காவல் துறையினரின் ஜீப். இவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்னரே பரம்பிக்குளம் காவல் துறையினர் இருவர் வந்து சேர்ந்திருந்தனர். ஒரு குழுவாய் சேர்ந்து அனைவரும் அந்த அடர்ந்த காட்டிற்குள் நடக்க, அவனுக்குள் சொல்ல முடியாத ஒரு வலி தானாய் உருவாக ஆரம்பித்திருந்தது.
மூங்கில் மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் சிறு ஓடை கரையோரம் பிணமொன்று கிடந்தது. சூர்யாவின் நடை தடுமாற ஆரம்பித்தது. அவன் பாதங்கள் முன்னேற மறுத்தது. தொண்டைக்குழியில் உமிழ் நீர் விழுங்க முடியாமல் ஏதோ ஒன்று குரல்வளையை நெருக்குவது போலொரு நிலை. தெய்வங்களிடம் இது நாள் வரை தனக்கென்று வேண்டியதில்லை அவன், ஆனால் அது தன்னுடைய திவ்யாவாக இருக்கக்கூடாது என மட்டும் உலகில் இருக்கும் எல்லா தெய்வங்களிடமும் பிரார்த்தனையாக வேண்டிக்கொண்டிருந்தான்.
ஆனால் அதெல்லாம் பொய்த்துப்போனது...!! ஆம், அது திவ்யாவே தான். அவள் உடல் முழுவதும் கீறல்கள், இதழ்கள் எல்லாம் கிழிந்து இரத்தம் சொட்டி காய்ந்திருந்தது. அவள் உடலை பாதி சேறும், கிழிந்த துணியும் மறைத்துக் கொண்டிருந்தது. ஆசையாய் முத்தமிட்ட அவனது தங்கையின் கன்னங்கள் பற்களின் காயங்களால் சிதைந்திருந்தது. சொல்ல முடியா கொடூரங்கள் நிகழ்ந்தேறியிருந்தது. அவள் பிஞ்சுக் கரங்களில் ரத்தம் கண்ணிப் போய் இருந்தது.அவளை பார்த்தவன் அழவில்லை, கதறவில்லை, காட்டின் அமைதியை ஓவென்று கத்தி அழுது கெடுக்க வில்லை. அவளை பார்த்தவாறே அருகிலிருந்த மரத்தின் மீது சாய்ந்தான்.
கோபமும், அழுகையும் இரு வேறு துருவங்களாய் தத்தம் எல்லைகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. எந்நேரமும் ஏதோ ஒரு துருவம் வெடித்தெழும்பும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, அவன் கடைசியாய் பார்த்த காட்சி அவனை மிருகமாகவே மாற்றியிருந்தது. இவ்வளவு கொடூரங்கள் போதாதென்று பாதி உடைந்த மூங்கில் துண்டொன்று அவள் தொண்டைக் குழியில் குத்தப்பட்டிருந்தது.
அதை எடுக்க அவன் முயன்ற போது, மோசஸ் அவனை தடுத்து நிறுத்தி, சாரே, அதை தொடாதீங்க, எவிடென்ஸ் என சொல்ல அவன் அவரை பார்த்த பார்வையில் தொடர்ந்து எதுவும் கூறாமல் பின் நகர்ந்தார். காவலர் ஒருவர் அந்த மூங்கில் துண்டை பத்திரமாய் கைப்பற்றி ஒரு பாலிதீன் பையில் போட்டு வைக்க, ஆம்புலன்ஸ் வேன் வந்தடைந்தது. அவளை தூக்கிச் செல்ல வந்த ஆட்கள் அவளை தூக்க முயன்ற போது சூர்யா அவர்களை வேண்டாமென சொல்லி விட்டு தானே தன் அன்புத் தங்கையை தூக்கிக் கொண்டு நடந்தான்.
முதலடி எடுத்து வைத்த போது மர வேரொன்று அவன் காலில் இடற, குனிந்து பார்த்தவன் அதிர்ந்து போனான். அவன் தங்கைக்கு ஆசை ஆசையாய் வாங்கிக் குடுத்த வெள்ளிக் கொலுசு...!!அவன் அவள் மேல் வைத்திருந்த கனவுகள் எல்லாம் கருகிப் போயிருக்க இந்த வெள்ளிக் கொலுசு மட்டும் சூரிய ஒளியில் இன்னும் மின்னிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு விரைந்தது.
பிரேத பரிசோதனைக்காக திவ்யாவை கொண்டு செல்ல, அவள் பாதத்தில் இருந்து வழிந்து வந்த கடைசித் துளி சூர்யாவின் மார்பில் ஒட்டிக் கொண்டது. எல்லாம் பூர்த்தியாகிவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து திவ்யாவை இவனிடம் ஒப்படைக்க வாழ்க்கையே இருண்டு போனது சூர்யாவுக்கு. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்களில் கண்ணீர் வற்றிப் போயிருந்தது.
மணிக் கிருஷ்ணன் சூர்யாவிடம், சொந்த ஊருக்கு கொண்டு போலாமா இல்லை இங்கயே....என சொல்லி முடிப்பதற்குள். இல்லை மாமா (அவன் வழக்கமாய் அழைக்கும் முறை) சொந்த பந்தங்கள் மேல எல்லாம் ஒரு ஈடுபாடு இல்லை. என் தங்கச்சிக்கும், எனக்கும் இது தான் ஊரு, நீங்க தான் எல்லாம். மயானதுக்கெல்லாம் வேண்டாம் மாமா என்னோட உழைப்புல வாங்குன மெக்கானிக் கடையிலேயே என் தங்கச்சி இருந்துட்டு போகட்டும். "இதுவரைக்கும் கடையா இருந்துச்சு, இனிமே அது அவளோட நினைவிடமா இருந்துட்டு போகட்டும் மாமா". அவன் சொல்ல சொல்ல கிருஷ்ணனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
இதற்கிடையில் அவனுக்குள் இருந்த பழிவாங்கும் குணம் தன்னை மிருகமாய் மாற்றி விடுமோ என பயந்தான். அடிக்கடி தனது அப்பா சொல்லுமொரு வாசகம் காதருகே கேட்டுக்கொண்டே இருந்தது. "எதுவும், எப்பொழுதும் சட்டப்படி தான் நடக்க வேண்டும்". காவல் நிலையத்தில் தங்கை காணவில்லை என்று அளித்திருந்த புகாரினை தங்கை கொலை வழக்காகவும், அதனை இந்திய அரசியல் சாசன சட்டம் எண் 376 -ன் கீழ் படியும் பதிவு செய்தான்.
ஒரு வாரம் கழித்து, இந்த வழக்கினை பற்றிய தகவல் அறிந்த ஒரு டீ கடைக்காரர் காவல் நிலையத்தில் தனக்குத் தெரிந்த தகவலினை சொல்ல வந்திருந்தார். சம்பவம் நடந்த நாளன்று திவ்யா தன்னுடைய கடையை கடந்து போனதாகவும், சிறிது நேரம் கழித்து அந்த வழியே வந்த ஒரு சிவப்பு நிற காரில் 28 - 30 வயது மதிக்கத் தக்க ஒருத்தன் அவளை வலுக்கட்டாயமாக அதில் ஏற்றிச் சென்றதை பார்த்ததாகவும், அவளை ஏற்றும் போது காரின் இடதுபக்க கதவின் விளிம்பில் பலமாக திவ்யாவின் நெற்றி பட்டதாகவும் கூறினார். கண் பார்வை சரி இல்லாததால் வண்டியின் நம்பர் சரியாக தெரியவில்லை ஆனால் அது தமிழக பதிவினை கொண்டிருந்தது என தனக்கு தெரிந்த விஷயங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் டீக்கடை சின்னராசு.
காவல் நிலைய எழுத்தாளர் சின்னராசு சொன்னதை ஒரு கோப்பாக எழுதி அவரிடம் கையெழுத்து விட்டு வாங்கி அனுப்பினார்.
ரயிலின் சத்தம் சூர்யாவின் இந்த நினைவோட்டத்தை கலைத்தது, கண்கள் கொஞ்சம் கலங்கித் தான் போயிருந்தது.விடுமுறை முடிந்து மீண்டும் சென்னையிலுள்ள தனது கல்லூரிக்குச் செல்ல காத்திருந்த இந்த இடைவெளியில் அவனது கடந்த காலம், வேகமாய் கடந்து போகும் அதிவேக ரயில் போல கடந்திருந்தது.
அனன்யா சூர்யா தன்னிடம் கொடுத்திருந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள், அது அம்பேத்கார் எழுதிய சட்ட புத்தகம். எந்த பக்கம் பார்த்தாலும் வழக்கு எண்களும், அதனுடைய விரிவாக்கங்களுமே காணப்பட்டது. சட்டென சூர்யா அவளிடம் சொன்னது ஞாபகம் வந்தது "உன்னையும், என்னையும் இணைக்கும் ஒரு விஷயம்" - என்னவாக இருக்கும் என குழம்பிப் போனாள். அவனை முதலில் பார்த்ததும், கடைசியாய் கேரளாவில் பார்த்ததும் ரயில் நிலையத்தில் தான்.
அந்த புத்தகத்திற்குள் எதாவது ரயில் புகைப்படம் இருக்குமா என தேடலானாள் அனன்யா...!!
நீங்களும் அவளுக்கு உதவுங்கள் - சிந்திப்போம் அடுத்த அத்தியாயத்தில்......!!
கருத்துகள்
கருத்துரையிடுக