தாப ஒளி - கங்கையும் கண்ணகியும்




பெண் பாலென படைத்தது வள்ளுவனின் 
மூன்றாம் பாலினை என் தொழிலென 
விதியெழுதிய பிரம்மனும் இல்லை 
என்னை வேண்டாமென வீதியில் வீசிய
அவளுமில்லை - என் கண்முன்னே

கனவுகள் எல்லாம் இருளில் கரைந்து போக
தேடி வரும் மனிதனெல்லாம் மறைந்து போகும்
வெளிச்சத்தில் மிருகமென என்னை வேட்டையாடி 
மகிழ்ந்து போகிறான் - மரத்து போன என்னுடலில் 
மீண்டும் உயிர் வந்து சேர - மரணம் பல முறை ஒரு நாளில்

விரகம் தீர்ந்ததும் நடந்தேறிய நிகழ்வுகொரு 
விலை சொல்லி வீசியெறிந்து போகும் 
நோட்டுக்கள் தேகமெங்கும் கலங்கமென 
சின்னம் பதித்து கிடப்பதென்ன? - ஒருநாள் 
எனக்கே என்னை பிடிக்காமல் போய் விடுமோ?

எனக்கென ஒரு உலகம் இயந்திரமாய் - நான் 
உடுத்தும் சலவைப்  புடவையெல்லாம் 
கசங்கிப் போகும் சாபமென்னவோ? வாசம் 
வீசும் மல்லிகை என் கட்டிலுக்கு மட்டும் சொந்தமோ 
என் கூந்தல் வந்து சேராதோ?

கனவுகளெல்லாம் மெத்தைகளில் புதைந்தது
என்னை போலவே தினமும் தேய்ந்தது - ஆசைகள்
என்னுள்ளும் பரவிக் கிடந்தது இதை விட்டொழிய!
காற்றடைத்த உடலுக்குள் துடிக்கும் என் இதயம் 
அதைத் திருடும்  கள்வனாய் ஒருத்தனுமில்லை!!

மீண்டுமொரு ஜென்மம் வேண்டும் கண்ணகியாய்
காமம் இல்லா முத்தமொன்று இதழ்களுக்கு வரமாய்
பிண்ணிக்கொள்ள விரல்கள் வேண்டும் - தேகம்
தீண்டா கண்கள் என் அழகை ரசித்திட - என்னவன்
நகம் தீண்டி என் கனவுகளுக்கு சிறகுகள் முளைக்காதோ?

மூன்றுடன் சேர்த்து இன்னும் கொஞ்சம் நாட்கள் கோர்த்து
இயங்கா நிலையில் நானும் தனிமையும் - கண்னை
மூடினால் துகிலுரியும் துரியன் எவனும் வந்துவிடா
உறக்கமொன்று நிம்மதியாய் - தொலைத்து விட்ட என்
தூய்மையை கழுவிக்கொள்ள கங்கையொன்று வேண்டும்

போதும் போதும் தேய்பிறையென தேய்ந்தது மீண்டெழுந்து
சிங்காரமாய் ஒப்பனைகள் சூடிக்கொண்டு தேவ மகள் 
வீதியுலா நடைபோட - அவளை நிறுத்தும் குரலொன்று
கேக்க தானாய் கால்கள் திகைத்து நிற்க - புதிய முகம்
"கங்கையும் - கண்ணகி"யும் வரமாய் பார்த்துக்கொண்ட
 ஒரு நொடி!!

வேண்டா கூடலில் துளிகள் கூடி நிறை குடத்தில்
தாயவள் கலைத்தெறியும் முன்னே எட்டியுதைத்து
கொடியோடு அமுது தேடி பலம் கூட்டி அழ - பசி
தீர்க்க வாராயோ? தாசியென்றல்ல - தாயாக !!
நிசப்தமாகிப் போனது உலகம் அந்த குரலைத் தவிர!


அள்ளியெடுத்து முத்தமிட்டாள் கயல் விழி - முதல் துளி
கங்கையென அவள் மார்பில் பட  சுரந்தது தாயமுது!
களங்கமெல்லாம் கள்ளச் சிரிப்பில் கரைந்தது - துணையின்றி
தாயானாள் கட்டியணைத்து முத்தமிட்டாள் - கட்டில்
கனவுகள் பட்டாம்பூச்சியாய் வண்ணம் வீசி சிறகு விரித்தது
வானை நோக்கி!!

"ஆதரவற்றவர்கள் அனாதைகள் அல்ல - 
அன்பில்லாதவர்கள் மட்டுமே"

- அஜய் ரிஹான்   

கருத்துகள்