ஹுமனாய்டு




கர்வம் கொள்ளுங்கள் எட்டா உயரமெல்லாம்
எட்டிவிட்டோமென்று இன்னும் கொஞ்சம் பாரம்
ஏற்றிக்கொள்ளுங்கள் தலையில் ஊற்றெடுத்து
பெருகும் நவீன நாகரீகம் தலைமுறை வரமோ?
சாபக்கேடோ? மெல்லென தலைக்கேறும் விஷமோ?

வல்லரசு என்று சொல்லிச் சொல்லியே வாக்கை
எல்லாம் அடகு வைத்தாய், வைத்தது உரிமையும்
சேர்த்தோ?எவன் எவனால் என்னாகினும் ஊமை
யாகிப் போகும் பொம்மலாட்ட பொம்மைகளோ?
மனிதம் மெல்ல கருகும் உணர்வை நுகர்வாயோ?

சாதிகள் சொல்லியே சாமானியனை உதைத்து விடு
வெட்கமின்றி பாரதி வரி கூறி மிருகத்திற்கு முகமூடி
அணிவித்து உலவ விடுகிறாய் - தலைக்கேறும் மகுடம்
இறங்கும் வேளையில் ரத்த வெறியூட்டி சம்பவங்கள்
செய்கிறாய் - நாடும் காடாகிப் போனது வேட்டையில்!

அஸ்திரங்கள் ஏதுமின்றி கட்டுண்டு கிடக்கிறாய்
நுட்பங்கள் புகத்தி மதியிழந்து திரிகிறாய் கலப்
படங்கள் பல புகுந்தும் வெட்கமின்றி ரசிக்கிறாய்
விஸ்வ ரூபமாய் வளர்ந்து நிற்கும் பரிணாமம்
இழந்தது எல்லாம் எண்ணி பார் ஐயகோ பாவம் மனிதா நீ!

முகம் பார்த்து புன்னகைக்க மறந்தாய் செல்ல
மகள் உச்சிமுகர நேரமில்லா உனக்கு எந்நேரமும்
ஒட்டி உறவாட ஒட்டுண்ணி போல் கை பேசியொன்று
உன் நேரம் தின்று, உன் புன்னகை தின்று  போதாது
தீரா பசியென்று உன்னையும் ஒரு நாள் புசித்தெரியும் !

வளர்ச்சியென்று வயலை தொலைத்தாய் ஏற்றம்
மென்றுரைத்து ஏர்கலப்பையை மூடி மறைத்தாய்
கலாச்சாரம் என சொல்லியே காளையையும் விற்று
தீர்த்தாய் - மீட்டெடுத்து திரும்பவே தொலைத்த காலக்
கணக்கை அறிவாயோ? - மீண்டுமொரு புரட்சி வரும்
மனிதா உன்னை மீட்டெடுக்க!

விளை நிலங்களை விலை நிலமென்றாய் தாகம்
தீர்க்கும் நீரையும் தாரை வார்த்து கொடுத்தாய் !
இன்றோ கையேந்தி விலை கொடுத்து தாகம் தீர்த்துத்
கொள்கிறாய் என்னே ஒரு வளர்ச்சி ! இன்னும் ஏதேனும்
மீதமுள்ளதா பார்த்துக்கொள் அன்னியன் காலில்
அடகு வைக்க!!

பெருமிதம் தான் நெஞ்சை நிமிர்த்திக் கொள் விண்ணில்
ஏவுகணை பாய்கிறதென்று ! - தட்டில் சோற்றை போட
உழவன் இல்லா நாட்டில் சாதனைக்கு பஞ்சமில்லையென்று!
அன்றாட தேவைக்குள்ளும் அரசியல் செய்யும் நரிகள்
உலவும் காடு களையெடுக்க  சிங்கமொன்றையும் காணவில்லை

தூய்மை தூய்மை என வெறும் முழம் போட்டுத்
திரியும் உன் வாய்க்கும் பொதுவெளியில் பூட்டு
போட்டுக் கொள்ள சொல்லித் தருவாயோ? வெறுங்
கதை பேசியே ஒழிந்து போவாய் சமூக வலைத்
தளங்களில் - உருவெடுக்கும் அரக்கனை அழிப்பது யாரோ?

வியாதிகள் வரிசைகள் கட்டி நிற்கும் மருந்துகள்
வணிகமாகும் - மூன்றாம் உலகப் போர் மருத்துவ
போராகும் - சடலங்களும் சாதுர்யமாய் கடல் கடந்து
வியாபாரமாகும் - மனிதனை மனிதன் புசித்தெறிவான்
அச்சிட்ட நோட்டில் காந்தியும் தலைகுனிவான்

துளித் துளியாய் நரம்பிலேறும் நச்சுக்கள் - உண்டு
களித்து உறங்கி மீண்டும் நாளை எழுவாய் என்பது
நிச்சயமோ? மீண்டுமுன்னை பின்னோக்கி அழைத்துச்
சென்றால் வருவாயோ? உன்னை சிறைபிடித்து
கொல்லும் அனாவசிய நுட்பங்களை தியாகம் செய்து?

இயந்திரமாய் மாறும் மனிதா உன்னையும் ஒரு நாள்
இயந்திரம் ஆளுமை செய்யும் - உன்னக்குள் பாயும்
செயற்கை ஹார்மோன்கள் நாளை நீயும் உயிர் தருவாய்
உலகில் உதிக்கும் முதல் ஹுமனாய்ட் குழந்தைக்கு!!

வளர்கிறாயா அழிகிறாயா ? நாகரீகமா நரகமா ? மிருகமா மனிதமா?

- அஜய் ரிஹான்

கருத்துகள்