தூண்டில் மீன்கள்




வாடை காத்து வாசலுல நிக்குது
என்ன சேதி வெச்சுருக்கோ?
வருஷம் பாதி ஓடிருச்சு வாழ
வழியொன்னும் பொறக்கலியே!

கட்டுமரமும் காஞ்சு போச்சு
வயித்த கழுவ வழியுமில்லை!
உப்புக் காத்து உசுருல ஏறுது
பசியில கண்ணு துள்ளி குதிக்குது!!

நெத்திலியும் பாத்து சிரிக்குது என்
நெத்தியில அடிக்குற விதி அலைய
பாத்து - கொடுவாவும் கோவமா
மூஞ்சி சுழிக்குது கருவாடா ஆன பின்னும்!!

கலவனும் கால கடிக்கிறான் காலம்
போயும் பள்ளிக்கூடம் போகலையான்னு?
குடிசையில கொட்டிக் கிடக்குற கோடி
ரூவாய எண்ணி வெக்கவே நேரமில்ல!!

பொட்டலம் கட்டி சோறு ஊட்டி காத்துல
கையசச்சு போய் வாடா என சொல்ல
ஆத்தாளுக்கும் சொகமில்ல ராசா போல
அனுப்பி வைக்க சுருக்கு பையில் கனமுமில்ல!!

பறந்து பாக்க றெக்கை ஒன்னு கேட்டிருந்தேன்
கெணத்துக்குள்ள பறந்து பாக்க ஒன்னுமில்ல கடல
பாக்க போலாமுன்னு பரவ மீனும் எங்கண்ணீருல
தத்தளிச்சு கேக்குது - கனவும் கலங்கி போயிருச்சு!!  

வாச வழியா வந்த கனவெல்லாம் தாங்காம
சொல்லாம கொள்ளாம கொல்லை வழியா
போயிருச்சு மூளைக்காரன் ஆசையெல்லாம்
வேலைக்காரன் காலடியில் அடைக்கலமாயிருச்சு!!

கரையில எழுதி வெச்ச ஆசைய போல
அடுத்த அலைக்கு காணலியே! - சேத்து
வெச்ச சிப்பியும் இன்னம் காசா மாறலியே?
கனவு காணும் பழக்கம் மட்டும் கொறையிலியே!!

நோட்டுக்குளே வெச்ச தோகை குட்டி
போட்டு நிறைஞ்சுருச்சு! - சேத்து வெச்ச
நோட்டு இப்போ செல்லா காசா போயிருச்சே!
சோத்த பாத்தும் நாலு பல ஆயிருச்சே!!

வாச கதவ பாத்து பாத்து கண்ணு ரெண்டும்
பூத்துருச்சு - சூரியனா வீசி வந்த கலங்கரை
விளக்கும் இப்போ அகல் விளக்காய் மாறிடுச்சு!
படகு மட்டும் வந்திருக்கு போன மனுஷன் காணலியே!!

போன வருசம் போன மனுஷன் போய்
வரேன்னு சொல்லலியே! -  தோட்டா
துளச்ச உடம்ப கூட எங்கிட்ட காட்டலியே
எல்லையில செத்ததுனால எங்கப்பனும் வீரனோ?

சமுத்திரத்துக்கே ராசன்னாலும் தங்கித்
திரியிறது குடிசையில - அடிக்கடி தீபாவளி
மட்டும் வந்து போவும், கொளுத்தி போட்டு
போனவனை துரத்திப் புடிக்க கெளுத்தியும் ஓடும்!!

சட்டம் கேட்டு போனவனையும் சத்தம்
போட்டு எட்டி உதைக்கும் கால்கள் வெட்க
மின்றி கட்டிப் பிடித்து பிச்சை கேட்டு வண்ணத்
திருவோடு ஏந்தி வரும் கோட்டை முதலைகள்!!

நேத்தின சோறும் நண்பன் வீட்டு கொழம்பும்
பெனஞ்சி திங்கிறத நெனச்சாலே நாக்குல தண்ணி
சொட்டும் - ரோசக்காரிக்கு கோவமுன்னு வந்து
புட்டா கடல் அலையும் எங்க வூட்டு கதவ தட்டும்!!

அலைய பாத்து அழுத்ததில்ல காசுக்காக
எவன்கிட்டயும் அலைஞ்சதில்ல - சால
வேட்டைக்காரனுக்கு ரோசம் கொஞ்சம்
ஜாஸ்தியோ? வளைஞ்சு கொடுத்து வழக்கமில்ல!!

அழுக்கு சட்டைக்குள்ள வெள்ளாவி மனசிருக்கு
அத அரவணைக்க மனுஷன் மட்டுமில்லையே?
மீன வகை பாத்து தரம் பிரிக்க தெரிஞ்ச மனசுக்கு
பாவி மனுசனை மட்டும் தரம் பிரிக்க தெரியலையே?

ஆழிப் பேரலையில ஆசையெல்லாம் அழிஞ்சு போச்சு!
படகுக்காரன் பகுதி மட்டும் தனித்தீவா ஆயிருச்சு!!
சொந்த நாட்டுக்குள்ள சுதந்திரம் தூண்டிலுல
மாட்டிருச்சு - மாய்வது எத்துணை மீன்களோ?

செத்து செத்து பொழைக்குறது வலையில சிக்குற மீன்கள் மட்டுமா?
இல்லை அவர்கள் கனவுகளும் தான்!!


- அஜய் ரிஹான்

கருத்துகள்