தேவதாசி


தரை தவழும் புடவை வீணை ஓசை நிகரா
கொலுசோசை - நிலவின் உருவம் கொள்ளும்
திலகம், கூந்தலோடு கொஞ்சிக் குலாவும் மல்லிக்
கதம்பமும், கனகாம்பரமும் - முத்தமிடும் காற்றும்!!

நேர்த்தியான நிஜங்களும் அசர வைக்கும் பிரதி
பிம்பங்களும் - மார் தவழும் அட்டிகையும் ஒட்டி
உறவாடும் ஒட்டியாணமும் நெற்றியில் நர்த்தனமாடும்
சுட்டிகையும் வளர்பிறை சந்திரன் என் வளைவுகளில்!!

நடனம் என் தொழிலென்றேன் இறைவன்
சன்னதியில் - அவன் பாதமதில் பூச்சூடி
கிடப்பதொன்றே பிறவிப் பயனென பா
சுரம் பாடி அகம் மகிழ்ந்திருந்தேன்!!

பக்குவமறியா பருவத்தில் படைத்தவன் விருந்தென்று
சந்நிதியில் விற்பனை செய்து விட்டாய் - வேள்வியில்
ஊற்றும் நெய்யோ? மங்கை என்னை மஞ்சம் தீண்டும்
வேளையிலே - ஹவிர்  பாகம் வந்தடைந்தோ பூர்ணாஹுதியில்!

கலைகள் ஆயிரமறிந்திருந்தும் ஆண்டவன் பெயர்
கூறி என்னை ஆட்கொண்டது என்னவோ? புனித
மென்பது கருவறை கடந்தால் காற்றில் கரையுமோ?
பகிர்ந்துண்ணும் எச்சில் தின்பண்டம் நானானேன்!!

மா தவம் புரிந்தும் மாதவன் காட்சி
தரவில்லை, இரவினில் களவு போகும்
கண்ணியத்தைக் காத்தருள கடவுள் கண்ணில்
தென்பட வில்லை - இருளில் மறைந்ததனால்!!

பேதைக்குள்ளே போதை தேடும் மூடர்
கூட்டம் - சுகங்கண்டு பாடசாலைகள் பல
எழுந்தோங்க படுக்கையறையில் - கலவி
ஒன்றே பாடமாய் - பால்கள் நிர்வாணமாய்!!

தீரா இன்பம் அடங்கிய வேளை - கட்டில்
வீரன் வெட்டியெறிந்து வீசியெறியும்
நாணயம் சொல்லுமோ என் நாணத்தின்
விலை இதுவென்று?

விடியும் பொழுதுகள் பகலென்றால்
விடியாமல் மடியும் என் துகில் நீத்த
இரவுகள் - துயில் துறந்த கண்களுக்கு
சாப விமோசனம் அளிப்பது யாரோ?

ஆசைக் காரணம் கூறி பெயர்க்காரணம்
மாற்றியமைத்தாய் - தேவனின் அடிமை
யென்னில் உன் இச்சை புகத்தி என்னை
வேசி என்றாய் - நாடுவது நீயோ நானோ?

அந்தப்புர நாயகிகள் கூடிக் களைய காத்திருக்க
அடிமை எம் மீது படையெடுத்து போர் தொடுக்கும்
உம் தேகப் பசியென்ன மிருகமோ? இயங்கும்
வேளையில் இமை மூடினால் காண்பது நரகமோ?

வளைவுகள் வருடும் கைகள் கொஞ்சம்
வளவிகள் உரைக்கும் தனிமைக் கதைகள்
கேளாதோ? அதிரும் சத்தத்தில் உடைந்தே போகிறது
எந்தன் பெண்மையும், கண்ணாடி வளவிகளும்!


"படைத்தல் பிழையோ பாவை யானும் இளி பிறப்பெண்ணி யமனும் பரிசொன்று தருவான் மரணம் தீண்டுமென அக மகிழ்ந்து இறுதி இரவென்று தினமும் கண்மூடும் வேளையிலே அவனும் நரகம் காட்டி மறைவதேனோ? சொல்வாயோ விதியே!!

- அஜய் ரிஹான்

- தேவதாசி ஒழிப்புச் சட்டம் 1947 -ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

- யாரும் விரும்பி செல்வதில்லை உந்துதல் இல்லாத வரை, இனியொரு விதி செய்வோம்!


கருத்துகள்