மாலைக் காற்று வந்து காதோரம் கொஞ்சுதடி
தீந்தேனாய் ரீங்காரமிட்டு கிளிகள் கூவுதடி
லயித்து மயங்கிக் கிடக்கும் வேளையிலே
எனக்கோ காதலிக்க நேரமில்லையடி.!!
கம்பன் கவிகளில் மூழ்கி விட்டேன்-எழுத்தின்
வளைவுகளில் தீரா மோகம் கொண்டேன் மன்
மதன் மயங்கும் உன்னழகில் தெளியா பித்தம்
அதில் மூழ்க எனக்கோ நேரமில்லையடி.!!
புன்னகைகள் புனிதமடி கலப்படம் துளியுமில்லை
பூவாய் தேனை சிந்துகிறாய் ருசித்திட இதழில்
வறட்சியில்லை-பருவமெய்தி நிற்கிறாய் பாவி
எனக்கோ பரிசோதிக்கத் தான் நேரமில்லையடி.!!
இதழ்கள் இரண்டும் போதை தான் நினைத்தே
கிறங்கிக் கிடந்திட சுவையேறிய மதுவோ கள்ளோ
பழ ரசமோ அள்ளிப் பருகிட மிதக்கும் நிலையோ
காற்றில் பறக்கத் தான் நேரமில்லையடி.!!
உருகும் மேகம் மாறும் வானிலை குழந்தை கைக்
குடை வெப்ப மூச்சுக் காற்று சாலையோர நடைப்
பயணம் முகம் துடைக்கும் கருங்கூந்தல் விரல்
கோர்த்து நடக்கத் தான் நேரமில்லையடி.!!
ரம்பையின் அளவுகள் செதுக்கி வைத்த வளைவுகள்
தங்க முலாம் மூடி மறைக்கும் அழகுகள்-சிலையோ
கந்தர்வ ரதியோ எழுத மறந்த கவிதைப் பிழையோ-உனை
வடித்த உளியை தேடத் தான் நேரமில்லையடி.!!
தோட்டத்தில் செடியொன்று போராட்டம் செய்யுதடி
சுவாசிக்கும் காற்றாய் உன் முத்தம் கேட்குதடி-கட்டி
அணைத்த தலையணையொன்று உன் ஸ்பரிசம் நாடுதடி
தீர்ப்பு சொல்லத் தான் எனக்கோ நேரமில்லையடி .!!
உனை ரசித்த என் அறைக் கண்ணாடி உன் முகம் கேட்டு
வஞ்சனை செய்யுதடி ஒட்டிச் சென்ற நெற்றிப்பொட்டும்
நொடிக்கொருமுறை உன் முகம் காட்டுதடி மீள் வழி
தேடத் தான் ரசிகன் எனக்கோ நேரமில்லையடி.!!
வழியும் உன் கருவிழி மை நிரப்பி ஆசைக் கவிதை
நானெழுத-மொழி இலக்கணம் தொலைத்தேன் கயல்
விழியில்-அசைவுகளில் அடி மறந்தேன் பா வையும்
சேர்த்தே - மீண்டெழத் தான் நேரமில்லையடி.!!
வயதின் நாட்டமோ உணர்வின் நடுக்கமோ குளிரும்
கன்னக் குழியில் தவமிருக்க அடங்கா பேராசைகள்
உன் உருவ தரிசனம் யாசித்திருக்க-என்னழகே உன்னை
உருகி உருகி காதலிக்கவே நேரமில்லையடி.!!
உனை தேடித் திரிந்தே என் நேரங்கள் கழிகிறதே.!!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக