என்னடி இப்போவே நிச்சயம் பண்ணாட்டி என்ன? இன்னும் நாலு மாசம் தானே இருக்கு காலேஜ் முடியுறதுக்கு அப்புறம் ஏன் இவ்ளோ அவசரம்? காலேஜ் முடிச்சுட்டா நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்கல்ல? ராம் வீட்ல எதுவும் சொல்லலையா? என்றாள் அம்மு.
இல்லைடி, ராம் வீட்ல எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு இப்போ நிச்சயம் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இல்லையாம் ஆனா கல்யாணம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் பண்ணணுமுன்னு ஸ்ட்ரிக்ட் சொல்லிட்டாங்கடி.
உனக்கு தான் வருத்தம் போல!! ஒரு வருஷம் வெயிட் பண்ணணுமுன்னு.?
பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து அவளை அடிக்க அவளும் பதிலுக்கு ஒரு தலையணையை எடுத்துக்கொள்ள அந்த அறையே போர்களமானது..!!
அந்நேரம் பார்த்து வசந்தி உள்ளே நுழைய, தட்டில் இருந்த Strawberry பேஸ்ட்ரி-யை பார்த்ததும் சண்டை முடிவுக்கு வந்தது.
என்னங்கடி இன்னும் சின்ன குழந்தைங்க மாதிரி தலையணையை எடுத்து சண்டை போட்டுட்டு இருக்கீங்க? என்ன விஷயம்?
இல்லம்மா..இவ தான் என்ன பாத்து நக்கலா பேசுறா.....!
(இந்த இடைவெளியில் அம்மு ஒரு பேஸ்ட்ரி-யை சாப்பிட்டு முடித்திருந்தாள்)
நீ சொல்லு ப்ரியா..என்ன விஷயம்? அவ அப்போ அப்போ கொஞ்சம் குரங்கா மாறிடுவா நீ கண்டுக்காத.
ராம்-க்கும், எனக்கும் நிச்சயம் பண்றதுக்கு எங்க வீட்ல நாள் பார்த்துட்டாங்கம்மா. ஆனா கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சு தான் பண்ணணுமுன்னு ராம் வீட்ல சொல்லிட்டாங்க. அதை தான் இவ கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்.
நல்ல விஷயம் தானே..நேத்து கோவில்ல உன் அம்மாவ பாத்தேன், நிச்சயம் பத்தி சொன்னா. குரு பலன் இருக்க அப்போவே உறுதி பண்ணிக்கணும் இல்லைன்னா தள்ளி போகுமுன்னு ஜாதகம் பாத்த அப்போ சம்பந்த குருக்கள் சொல்லி இருக்கார். அவ நம்பிக்கையை ஏன் நாம கெடுக்கணும் சொல்லு?
நிச்சயம் இப்போ பண்ணிக்கோ, அப்புறம் ராமும் ஆறு மாசமோ, இல்ல ஒரு வருஷமோ நல்ல ஒரு வேலைக்கு போயிருவான். "உங்க தேவைகளை பாத்துக்குற அளவுக்கு நீங்க தாயாராகுறதுக்கான ஒரு கால இடைவெளிய உங்களுக்கு கொடுத்துக்கோங்க. அந்த இடைவெளி உங்களுக்குள்ள இருக்குற புரிதலை இன்னும் சிறப்பாக்கும்". அதனால உங்க வீட்ல சொன்னதுக்கோ, இல்ல கல்யாணத்த தள்ளி வெச்சுக்கலாமுன்னு சொன்ன ராமுடைய பெற்றோருடைய கருத்தோ எனக்கு தப்பா தெரியல என அழகாய் சொல்லி முடித்தாள் வசந்தி.
அது எப்படிம்மா? உங்களால இப்படி தெளிவா ஒவ்வொரு விஷயத்தையும் பாக்க முடியுது, பேச முடியுது? அம்மு-வும் அப்படியே உங்கள மாதிரியே தான். குறும்பு தனத்தை தவிர மத்த எல்லா குணமும் அப்படியே உங்கள மாதிரி தான். நிதானமா முடிவெடுப்பா, யோசிச்சு பேசுவா, அதுல ஒரு தெளிவான கருத்து இருக்கும்...ஆச்சர்யத்துடன் வசந்தியிடம் சொன்னாள் ப்ரியா.
அடுத்த Strawberry பேஸ்ட்ரி-யையும் எடுக்க முற்பட்ட போது அம்முவை குறும்புத்தனமாய் பார்த்து விட்டு அதை ப்ரியாவிடம் கொடுத்து விட்டு, "நாம செய்யுற ஒவ்வொரு காரியத்திற்காக விளைவுகளும், பலன்களும் நமக்கு தான் வரும் அப்படிங்கிற ஒரு எண்ணம் புரிஞ்சாலே போதும் நாம யோசிச்சு செயல்பட ஆரம்பிச்சுருவோம்" என்றாள் வசந்தி யதார்த்தம் கலந்த உண்மையோடு.
போதும் ரெண்டு பெரும் சேர்ந்து இங்க என்ன சொற்பொழிவா நடத்துறீங்க? மைக் ஒன்னு வைக்கட்டா? சும்மா...யதார்த்தம், பதார்த்தமுன்னு பேசிக்கிட்டு. நிச்சயதார்த்தம் எங்க, எப்போ? அதை சொல்லு மொதல்ல..பிளான் பண்ணனுமுல்ல என்றாள் அம்மு. (வடிவேல் குரலில்)
சாயந்திரம் அம்மா பத்திரிக்கை வைக்க வரேன்னு சொன்னாங்க, நான் தான் நம்ம ப்ரண்ட்ஸ்-க்கு குடுக்க தனியா பிரிண்ட் பண்ண இன்விடேஷன் உனக்கு தான் FIRST குடுக்கணுமுன்னு வந்தேன்டி.
வசந்தியிடமும், அம்முவிடமும் பத்திரிக்கையை குடுக்க. வசந்தி ப்ரியாவிடம் பார்த்து 'ஏம்மா எங்கேஜ்மென்ட் பாலக்காடு-ல வெச்சு இருக்கீங்க? இங்கயே லோக்கல்ல வெச்சு இருக்கலாம்ல? இங்க ஹால் கிடைக்கலையா?
இல்லம்மா, ராமோட பாட்டி தாத்தா, அத்தைங்க எல்லாம் அங்க தான் இருக்காங்க. அதான் அங்க வெச்சு இருக்காங்கம்மா.
எங்கடி என்னோட பெயரை காணோம்? நான் வர மாட்டேன் போ உன் எங்கேஜ்மெண்ட்டுக்கு....முகத்தை சுளித்துக்கொண்டே சொன்னாள் அனன்யா.
ஐயையோ....!! இங்க பாரு தாயே...இது எங்கேஜ்மென்ட் பத்திரிக்கை தான், கல்யாண பத்திரிக்கை அடிக்குற அப்போ உன் பெயரை மறக்காம போட்டுடறேன் போதுமா என்றாள் ப்ரியா கைகளை கூப்பியவாறே.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, அனன்யா-வின் அலைபேசியில் சூர்யாவின் குறுந்தகவல் ஒலித்தது.
சூர்யா: ஹாய், என்ன ரொம்ப பிஸியா ? மெசேஜ் பண்ணவே இல்லை?
அனன்யா: நான் பிஸி இல்ல டா, ப்ரியா வந்திருக்கா வீட்டுக்கு, அவளோட எங்கேஜ்மெண்ட்டுக்கு இன்வைட் பண்ண.
சூர்யா: அப்போ சரி, ரெண்டு பேரும் சேர்ந்தா போதும் எல்லாத்தையும் மறந்துடுவீங்க .
அனன்யா: பெஸ்ட் ப்ரண்டாச்சே, மை SOULMATE டா .
சூர்யா: ஓகே, எப்போ,எங்க எங்கேஜ்மெண்ட் ?
அனன்யா: DEC 18 2017, GREEN VIEW HALL, VADAKKANCHERRY, PALAKAD.
சூர்யா: ஓ...பாலக்காடோ.!!!
அனன்யா: என்னடா, உங்க ஊருன்னு சொன்ன உடனே குஷி ஆயிட்ட?
சூர்யா: அவங்க அவங்க ஊரு அவங்க அவங்களுக்கு பெருசு தான்....!!
அனன்யா: அது சரி..அப்போ நாங்க அங்க வந்தா உங்க வீட்டுலயே தங்கிக்கலாம் அப்படித்தானே?
சூர்யா: அதுக்கென்ன, தாராளமாக..! நான் DEC 15th அன்னிக்கே ஊருக்கு போறேன். நீ வந்துட்டு சொல்லு, பாத்துக்கலாம்.
அனன்யா: அதெல்லாம் வேண்டாம் டா,சும்மா கேட்டேன். நாங்க நீ கிளம்புற அன்னிக்கு வந்தா சொல்றோம். ஒண்ணா போலாம். ட்ரெயின்ல தானே போற ?
சூர்யா: ஆமா,சரி நான் ஆபீஸ் கிளம்பறேன், சீனியர் வர சொல்லி இருக்கார்.
அனன்யா: போப்பா...போ...நடமாடும் சட்ட புத்தகமே..!!
சூர்யா: வாலு...இரு அம்மாகிட்ட சொல்றேன்...BYE
ப்ரியா சூர்யாவையும் நீ போன் பண்ணி இன்வைட் பண்ணிடு.
சரிங்க மேடம், உங்கள் ஆணை படியே செய்து விடுகிறேன்.
அடிங்க..வாங்குனது பத்தலையா? இரு வரேன்.....!! தலையணையை எடுத்துக்கொண்டு ப்ரியாவை நோக்கி பாய்ந்தாள் அம்மு.
நாட்கள் வேகமாய் நகர, ஆழமான நட்பு வேரூன்றி இருந்தது அனன்யா-சூர்யாவுக்கும் இடையே.
அனன்யாவிற்குள் ஒரு எண்ணம் மட்டும் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருந்தது. அதை சூர்யாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் வேறு.
வழக்கமான நாட்கள், கல்லூரி, ப்ராஜெக்ட், வீடு என சுழற்சியாக சென்று கொண்டிருந்தது.
DEC 02 , 2017 வசந்தி பிறந்தநாள், வாழ்த்துவதற்காக சூர்யா, ப்ரியா, ராம் அனைவரும் வீட்டிற்கு வந்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு, காரம் கொடுத்துக்கொண்டிருந்தாள் அம்மு.
சூர்யா பிறந்தநாள் பரிசாக பூங்கொத்து ஒன்றை கொடுத்து விட்டு, வந்திருந்த அனன்யாவின் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தான்.
என்ன சார், நாங்க எல்லாம் கண்ணனுக்கு தெரியுறோமா ? என்றாள் அம்மு சூர்யாவை பார்த்து.
சொல்லுங்க மேடம், நீங்க தான் ரொம்ப பிஸி (கவுண்டமணி குரலில்) சொல்லு, என்ன கிப்ட் குடுத்த அம்மா-க்கு?
நானே பெரிய கிப்ட் தான், பட் கொஞ்சம் ஸ்பெஷலா இருக்கட்டுமுன்னு ஒரு காட்டன் புடவை வாங்கி குடுத்தேன். எல்லோரும் சேர்ந்து அம்முவை திருப்பி கலாய்க்க, அந்த அறையே கலகலப்பானது.
சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக கிளம்ப இன்முகத்தோடு அவர்களை வழியனுப்பிக்கொண்டிருந்தாள் வசந்தி.
மித்ரன் (கணவன்) மறைந்தது முதல் இன்று வரை அம்முவின் நண்பர்கள் தான் ஆறுதலே. உள்ளூர ஒரு பெருமிதமும் அவளுக்கு இருந்தது நல்ல நண்பர்களை அவள் சம்பாதித்து இருக்கிறாளென்று.
கிளம்ப முற்பட்ட சூர்யாவை நிறுத்தி இன்று அதை அவனிடம் கேட்பதென்று முடிவு செய்து தன்னுடைய அறைக்கு கூட்டிச்சென்று அந்த நாளிதழை அவனிடம் நீட்டினாள்.
கேரளா சென்ற பொழுது அவள் எடுத்து வைத்திருந்த அதே நாளிதழ் தான். அவனிடம் அன்று அந்த ஹோட்டலில் கேட்டதையும், அது சம்மந்தப்பட்ட மீதித் தகவலை அதில் படித்து சொல்லச் சொன்னாள் அனன்யா.
என்னது இது ? மலையாள நியூஸ் பேப்பர்..!! எனக்கு அவளோ சரளாமா படிக்க தெரியாது. வேணுன்னா ஒரு ரெண்டு நாள்ல படிச்சு சொல்லிடட்டுமா ?
டேய்...கொல்லப் போறேன் பாரு..! ஒழுங்கா படிச்சு சொல்லுடா. படிச்சு சொல்லாம நீ கிளம்ப முடியாது பாத்துக்கோ. நானும் இதை யார்கிட்ட கேக்கறதுன்னு தெரியாம இருந்தேன், இப்போ தான் நீ சிக்கி இருக்க .
அது சரி, இரு படிச்சு சொல்றேன். கொஞ்சம் கொஞ்சமா சந்திரமுகியா மாறிக்கிட்டே இருக்க..பாத்துக்கோ.
சிறிது நேரம் அதை படித்து விட்டு, அந்த வழக்கு பதிவான காவல் நிலையத்தை பற்றியும், அந்த பெண்ணின் குடும்ப பின்னணி பற்றியும், வழக்கின் நிலை பற்றியும், குற்றவாளியின் அடையாளங்களும், அதில் குற்றவாளியின் பின்புலம் பற்றி ஏதும் குறிப்பிடாதது பற்றியும் அவளிடம் விவரமாக சொல்லிக்கொண்டிருக்க அந்த அறைக்குள் நுழைந்தாள் ப்ரியா.
என்னடி, இன்னிக்கு கேட்டுட்டியா சூர்யாகிட்ட, என்ன பண்ண போற? இப்போ, நாம எல்லாம் இந்த மாதிரி விஷயத்துக்கு வருத்தப்பட தான் முடியும் வேற என்ன பண்றது? நம்மளை நாம காப்பாத்திக்குறத பத்தி யோசிக்குறதே பெரிய விஷயமா இருக்கு இப்பெல்லாம்.
எதாவது பண்ணனும், ஆனா என்ன பண்றதுன்னு தெரியல.
"முடியாதவங்களுக்கு முடிஞ்சவங்க பாதுகாப்பா இருக்குமுன்னு நெனச்சாலே போதும் பாதி பிரச்சனைக்கு முடிவு வந்திரும்". இங்க தன்னோட நலம் மட்டுமே முக்கியம் அப்படின்னு நெனச்சு நகர்ந்து போய்க்கிட்டே இருக்கோம். அதான் இதோட ஆணி வேரே. கேக்கணும் முடிவு பண்ணி துணிவா நின்னா போதும் எல்லாம் மாறும்.
நீ சொல்றது எல்லாம் சரி, ஆனா இதெல்லாம் சட்டமும், காவலும், நீதிமன்றமும் செய்ய வேண்டியது, நாம என்ன செய்றது? சொல்லு என்றாள் ப்ரியா
மாற்றம் நம்மகிட்ட இருந்து ஆரம்பம் ஆகணும், அவன் செய்வான், இவங்க செய்யணும் அப்படின்னு எதிர்பாக்கிறதே சுயநலம் தானே?
ப்ரியாவிற்க்கு புரிந்ததோ இல்லையோ, அனன்யா சொல்வது அத்தனையிலும் உண்மையும், அவளுக்குள் பிரவாகமாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் ரௌத்திரமும், அவள் பேசும் போது கண்களில் தெரியும் உணர்ச்சியும் அவனுக்கு புரிந்தது.
அதெல்லாம் சரி, நீ சட்டத்தை மாத்துவியோ, இல்லை பெரிய போலீஸ் ஆபீசரா ஆக போறியோ எனக்கு தெரியாது. ஒழுங்கா அடுத்த வாரம் எங்கேஜ்மெண்ட்க்கு வந்து சேரு. சார் நீங்களும் தான், என இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
என்ன செய்ய வேண்டுமென்ற முடிவை எடுத்திருந்தனர் இருவரும்..!!
சிந்திப்போம் பாலக்காட்டில்..!!
கருத்துகள்
கருத்துரையிடுக