மித்திரன்




தோழமையில் கருவறை செய்த இறைவா
இந்த உறவு நான் செய்த தவத்தின் பலனோ
முடியா நீள் கவிதை இவர்களின்றி என் வாழ்கை.!!

முகவரி இல்லா முகங்கள் இவர்கள் அகத்திலே
முகமூடி அணியா கள்வர் இவர்கள் அளவில்லா
அன்பை திருடுவதால்.!!

கொடி வேறாகினும் படைகள் எம் பக்கம் எதிரி
ஆகினும் எமனாகினும் எம்மைத் தீண்ட துவார
பாலகர்(கள்) அனுமதி வேண்டும்.!!

உன்னை பெற்றவளும் என் தாயே பெயரில்லா
உறவிது என்னவென்று சொல்லவோ சோற்றில்
கலந்துள்ள அன்பை என்னுடன் பகிர்வதால்.!!

வெள்ளைத் தாளோ என் வாழ்கை நினைவால்
கவிதைகள் பல வடிப்பீரோ சாகும் வரை நினைத்து
மகிழ - காரணமின்றி புன்னகைத்த தருணங்கள்.!!

தாலாட்டு எங்கு படித்தாய் உன் தோளில் நான்
சாய்ந்ததும் கவலை மறந்துறங்க - செல்லும்
இடமெல்லாம் தாயின் சாயல்.!!

இலக்கணங்கள் இதற்கில்லை அவன் அவளென்று 
இலக்கு ஒன்று தான் பால் வேற்றுமையில் வள்ளுவன்
மூன்றாம் பாலும் தோற்றே போகும்.!!

தோழியவள் தோள் சாய தாய் மடி வாசம் வீசும்
தீரா சோகம் காற்றாய் மாறும் நட்பில் தவறேதும்
இல்லை உள்ளம் விழித்திருக்கும் வரை.!!

உரசலில் ஊடலில்லை தழுவலில் தாபமில்லை
கரங்கள் தீண்டையில் ரேகைகளும் புரிதலும் 
பிரிகையில் வலியும் கொள்ளும் நட்பினால்.!!

காணாக் கண்ணீர் காணும் போது கானகத் தீயென 
உள்ளம் எறியும் தானாய் உந்தன் கண்கள் துணை
நிற்கும் - என்ன பொருத்தமோ கண்களுக்கு.!!

தந்தை கவனம் கொண்டாயோ தவறுகளில் - என்னை
மறந்து அகத்திலிருந்து சிரித்து மகிழ தேவன் மாறு
வேடம் பூண்டு வந்தானோ தோழனாய்.!!

நால்வரில் ஒருவனாய் என் துக்கத்தில் துணை 
நின்றாய் - சொந்தங்கள் பொய்த்து போகலாம் 
மெய்யாய் நீ என்னுடன் இருக்கையில் பயமென்ன.!!

நிஜத்தில் என்னுருவம் நிழலில் பிறழ்ந்து
உன் உருவமானது என்னவோ? இருளிலும் 
தெரிகிறாய் என் கரம் பிடித்துச் செல்லவோ?

காலம் கடந்தும் வாழும் நட்பு 'வரமே' - பிழைகள் 
அதிகம் மொழியில் நாம் என்றான பின் 'நீ',  'நான்
என்பது அந்நியமாக தெரிகிறதே.!!

நினைக்கையில் வந்து நிற்கும் சக்தி காதலுக்கு 
மட்டுமா உண்டு? நினைத்து பார் ஆயிரம் எண்ணச் 
சிறகுகளோடு வந்து நிற்பேன் நினைவில்.!!

"உலவும் உடல்கள் வேறு தான், சூடிய பெயர்கள் வேறு தான், அங்கங்கள் வேறு தான், இல்லா சாதிகள் வேறு தான் ஆனால், உயிர் ஒன்று தான் - நட்பில் இணைந்தவர்க்கு"

எம் தோழர்களுக்கும், தோழியர் அனைவருக்கும் "இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்"!
உங்கள் நினைவுகளுடன்.!!
- அஜய் ரிஹான்.

கருத்துகள்