பாரசீகக் கனவுகள்



கசியும் இரவுகள்
கதறும் கனவுகள்
கள்வன் நானோ
களவு நீயோ.?

ஆசைத் தீயோ
அணைத்தால் அடங்குமோ
ஆடை கவசமோ
அசைவுகள் மர்மமோ.?

தனிமைத் தீவோ
திறவுகோல் நீயோ
தாபம் கடலோ
தழுவல் தீர்வோ.?

மூவுலக மொத்த அழகோ
மூடி மறைத்தல் தகுமோ
முகவுரை நீயோ 
முடிவுரை நானோ.?

இதழ்கள் விற்பனைக்கா
மொ(மு)த்தமாய் வாங்கிடவா
இடை வளர்பிறையோ
முழு நிலவாய் பார்த்திடவோ.?

மயக்கும் அழகோ
ஊடல் தவறோ 
மாயை தானோ
கூடல் பிழையோ.?

பால்வெளி தேகம் தானோ
பருகிட தாமதம் ஏனோ
பருவமெய்திய பூவின் தேனோ
பக்கம் வர தயக்கம் ஏனோ.?

விழிகள் இரு வேட்டை வில்லோ
சாய்ந்து மாள்வது எந்தன் உணர்வோ.?
விடையில்லா மர்ம தேசமோ
சாட்சி சொல்ல மஞ்சம் வருமோ.?

பெருமூச்சில் கரையும் விரகமோ
மேக மார்பில் காற்றழுத்த நிலையோ
தேகமெங்கும் காட்டுத் தீயோ
வெள்ளம் பொங்க கரையை தாண்டுமோ.?

தொடங்கும் இடம் உச்சந்தலையோ
முடியுமிடம் வெட்கம் அறியுமோ
விரல் யாவும் வீணை மீட்டுமோ
தீண்டா இடங்கள் சொர்க்கம் காட்டுமோ.?

போர்வைக்குள்ளே போர்க்களம் முறையோ
வீர காயம் முத்தம் கேட்குமோ
கழிந்த பின் நழுவுதல் சரியோ
வெளிச்சம் விடுதலை கேட்பது நியாயமோ.?

வாசலில் விடியல் நிற்குமோ
கூச்சம் கொண்டு இரவுக் கதைகள் கேட்குமோ
நேர முட்கள் வேகமாய் ஓடுமோ
இரவுக் கன்னியை சீக்கிரம் வரச் சொல்வாயோ.?

பொழுதுகள் தேவையில்லை எல்லை
கடந்த அன்பைக் காட்ட..!!

"நீயும் நானும்" ஒன்று தான் "இன்றும் நேற்றும்"
நாளைய கவலை நமக்கெதற்கு.?
இன்றைய ஆசைகள் மீதமிருக்கு
தொடங்கிவிடு இன்றைய கணக்கை.!!


"காதலுக்கும் புணர்ச்சிக்கும் 
இடைவெளியில் முத்தத்தால் நிரப்புங்கள்
காமம் தவறல்ல 
உணர்வென்று புகட்டுங்கள்
புரிதல் சரியானால் புணர்தலும் சிறப்பாகும்"

- அஜய் ரிஹான்

கருத்துகள்