தாயுமானவன்




நிகழா வரமொன்று யாசிக்கிறேன்
இறைவனை
கருவறை யானும் சுமந்திடவே
உன்னைச் சுமக்க
ஒரு துளியில் கருவாகி வெண்
பனியில் உருவாகி
பூவுலகில் உயிர்த்தெழுந்த என்னுயிரே.!

நட்சத்திரங்கள் பல கோடி சேர்த்திழுத்து
நடை பாதை போட்டு
வைப்பேன் முதலடி   நீ எடுத்து வைக்க
முதல் முறை நீ அழுவாய்
ஆனந்த பேரலையில் என் ஒரு துளிக்
கண்ணீர் கரைகிறதே
குரலோசை உயிர் வரை பாய்கிறதே.!!

தாலாட்டு கேட்பாயோ நான் பாட- மனப்
பாடம் செய்திருந்தேன்
தாயவள் பாடலில் உறங்குகிறாய் என்
பாடல் என்ன ஸுப்ரபாதமோ
முதல் வரியில் விழிக்கிறாய் - சாதகங்கள்
போதவில்லை என பிஞ்சு
விழியால் முறைக்கிறாய் நியாயமோ செல்லமே.?

பால் சுரக்காத மார் தடவி வீறிட்டு அழுகிறாய்
பசியில் - ஏனிந்த வஞ்சனை.?
யென்று நிந்தனை செய்கிறேன் படைத்தவனை
தாயென்று நினைத்தாயோ
யென்னை உதிரம் திரட்டி அமுதூட்ட பாவமன்றோ
நான் - உணர்வின் பாலூட்ட
வழியின்றி தவிக்கும் தாயுமானவன் ஆயிற்றே.!!

சுயநலக்காரன் நான் தெரிந்து கொள் என்
கண்ணே - வழக்கம் போல்
இல்லாமல் "அப்பா" என முதல் வார்த்தை
சொல்வாயோ? என் தாயவள்
தமிழ் மொழியில் - தூளி ஒன்று தேவை
யில்லை கதகதக்கும் என்
மார்பில் நீயுறங்கு "தெய்வம்" நான் உணர.!!

தினமுன்னை காண வரும் நிலவை
நிறுத்தி வாசம் செய்யா
கிழவிக் கதை சொல்லி பொய்யுரைத்து
உணவளிப்பாள் - உறங்கும்
வேளையிலே மன்னவர் கதை பல நானு
ரைப்பேன் மகாராணி நீ உறங்க.!!
அதனூடே வீரத்தையும் கொஞ்சம் புகத்தி
வைப்பேன் வாகை பல நீ சூட.!

நடை வண்டி உனக்கெதற்கு..? யானை
சவாரி செய்திடவே பாகன்
வசம் உருமாறும் வசதியுண்டு.!! - கவலை
யென்ன சொப்புச் சொப்பாய்
பானைகள் உண்டு அடுக்களை அலங்கார
பொம்மைகளுண்டு நீ சமைத்து
மகிழவே - கட்டளை யாவும் உன் கண் அசைவில்
நானறிவேன் கண்ணம்மா.!!

செல்லங் கொஞ்ச வார்த்தைகள் போதவில்லை
கண்ணே, மணியே, பொக்கிஷமே,
அமுதே, ஆருயிரே, அக்ஷய பாத்திரமே, மாசில்லா
பொற் களஞ்சியமே, தீரா பெருங்கனவே,
மழலைக் கவியே, கள்ளமில்லா ஒளிச் சிரிப்பே,
உள் வாங்கும் மூச்சுக் காற்றே - நீயின்றி
என் வாழ்வின் பொருள் ஏதடி சொல்லம்மா என்
செல்லக் கண்ணம்மா.!!

சுழலும் என்னுலகம் நீ தானே - பருவங்கள் மாறிப்
போகினும் தளிர் நின்னை தாங்கிய
முதல் நொடி நான் மறவேன்.! - பேராசைக் கனவே
நீ வரும் நாள் எதுவோ.? - உருவான
முதல் நாளே உயிலெழுதி வைத்து விட்டேன்
என்னுயிரை உனை காக்க ஆசைக்கு
எல்லை இல்லையம்மா தகப்பன் நானிருக்கும் வரை.!!

வா வா மகளே.!!

- அஜய் ரிஹான்

கருத்துகள்