குருதிப் புனல் - அத்தியாயம் 14


ப்ரியா - ராமின் நிச்சயதார்த்தத்திற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.

வசந்தி சூர்யாவிற்கு போன் செய்தாள்.........மறுமுனையில்

சொல்லுங்க ஆண்ட்டி, என்ன விஷயம் நீங்களே கூப்பிட்டிருக்கீங்க?

ஒண்ணுமில்ல சூர்யா, நம்ம ப்ரியாவோட எங்கேஜ்மெண்ட்டுக்கு நீ போற அன்னிக்கே வந்துடலாம்ன்னு பாக்கறேன். அதான் டிக்கெட் பண்ணித்தர சொல்லலாமேன்னு உன்னை கூப்பிட்டேன்.

அதுக்கென்ன ஆண்ட்டி, இதை அனன்யா கிட்ட சொல்லியிருந்தாலே போதுமே, நான் புக் பண்ணிட்டு உங்களுக்கே கால் பண்றேன் ஆண்ட்டி.

சரி நன்றி சூர்யா. கிளம்பர அன்னிக்கு நீ வீட்டுக்கு வந்திரு, நாம இங்கிருந்தே கிளம்பிக்கலாம்.

என்ன ஆண்ட்டி தேங்க்ஸ்-லாம் சொல்லிக்கிட்டு, ஓகே ஆண்ட்டி நான் வீட்டுக்கே வந்திடுறேன்.

மாலை அனன்யாவும், சூர்யாவும் பிரியாவிற்கும் ராமிற்கும் பரிசு வாங்க டி-நகர் கடை வீதிகளில் உலவிக்கொண்டிருக்க, அந்த காட்சியை பார்த்து கொதித்து போனாள்.

அந்த சிக்னல் அருகே ஒரு முப்பதிலிருந்து முப்பத்தியைந்து வயது தக்க பெண்ணொருத்தி பச்சிளம் குழந்தையோடு நின்று கொண்டிருந்த கார்களில் இருந்தவர்களிடம் கையேந்தி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அந்த வெயிலின் தாக்கத்திலும், பசியிலும் அந்த குழந்தை வீறிட்டு அழுதது.

சட்டென அனன்யா சாலையை கடந்து அந்த பெண்ணிடம், 'ஏம்மா குழந்தை அழுகுதுல, கொஞ்சம் பசியாத்த கூடாதா? உன்னோட சேத்து அதையும் ஏம்மா கஷ்டப்படுத்துற?

அதற்கு அந்த பெண்மணி 'என் குழந்தை அழுதா தான் இன்னிக்கு எனக்கும் சாப்பாடு, இப்போ அழுகுதேன்னு பால் குடுத்துதா தூங்கிடுவா, அப்புறம் ராத்திரி பட்டினியா கெடக்கனும். இவ்வளவு பேசுறியே நீயா வாங்கி சோறு தருவ? போம்மா வேலைய பாத்துகின்னு.

ஏம்மா உன் குழந்தையோட நல்லதுக்கு தான சொன்னேன், பொம்பள புள்ளைன்னு வேற சொல்லுற, இந்த வேகாத வெயில்ல போட்டு கஷ்டப்படுத்துற, பச்சைக்கொழந்த உடம்புக்கு ஏதாச்சு ஆச்சுன்னா என்னம்மா பண்ணுவ?

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் சுற்றி ஒரு கூட்டமே கூடி விட்டது.

அட போம்மா, பசியை விட கொடுமையான ஒரு விஷயம் வேற ஒன்னும் வந்திராது இந்த உடம்புக்கு. போய் வேலைய பாரும்மா.

அனன்யாவை அமைதிப்படுத்தி சாலையின் ஓரமாக கூடி வந்தான் சூர்யா.

உனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது, அது அவங்க புள்ள என்னமோ பண்றங்க. நமக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை? காசு கொடுக்கிறதுன்னா கொடுக்கலாம் இல்லைன்னா அமைதியா போய்டலாமே. இந்த அக்கறை எல்லாம் தேவையா?

அப்படி இல்லை சூர்யா, நமக்கு எதுக்குன்னு நாம ஒதுங்கி போறதுனால தான் நமக்கு தெரியாம சின்ன சின்ன தவறுகள் இந்த சமூகத்துல நடக்குது.  நான் யாரையும் மாத்தணுமுன்னு நினைக்கல சூர்யா ஆனா கண்ணு முன்னாடி நான் பாக்கறது தப்புன்னு தெரிஞ்சா கேக்காம இருக்க முடியல, இருக்கவும் முடியாது.

அவங்க பிச்சை எடுக்குறாங்க சரி, அவங்களுக்கு பிறந்ததுனால அவங்க குழந்தையையும் வெச்சு பிச்சை எடுக்கலாமா? நிலைமை சரியில்லைன்னு தெரிஞ்சும் ஏன் அந்த குழந்தையை பெத்தெடுத்துக்கணும்?

சரி விடு, எமோஷனல் ஆகாத.  வா போலாம்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த பெண்மணி சாலையோரம் வந்துக்கொண்டிருக்க, உடனே அனன்யா அருகில் இருந்த கடையில் இருந்து உணவு வாங்கி அவரிடம் நீட்ட கண்ணீரோடு பெற்றுக்கொண்டார்.

அனன்யா அவரிடம் நீங்க இப்படி இருக்குறதுக்கு யார் காரணம் அப்படின்னு எனக்கு தெரியல ஆனா இன்னும் ஒரு 5  வருஷம் கழிச்சு உங்க பொண்ணும் இதே நிலைமையில இருந்தா அதுக்கு முழுக்க காரணம் நீங்களா தான் இருப்பீங்க அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க.

என்ன சொல்வதென்றே தெரியாமல் அந்த பெண்மணி அங்கிருந்து நகர்ந்தார்.

அலைந்து திரிந்து இருவரும் சேர்ந்து கடைசியில் கல்யாண பரிசொன்றை வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தனர்.

வசந்தி சூர்யாவிடம், என்னப்பா ஒரு கிப்ட் வாங்கிட்டு வரேன்ன்னு மத்தியானம் போனீங்க இப்போ மணி எட்டு ஆக போகுது. அப்படி என்ன தான் வாங்குனீங்க ப்ரியா-க்கு?

அது சர்ப்ரைஸ் ஆண்ட்டி, ஆனா லேட் ஆனதுக்கு காரணம் உங்க பொண்ணு தான்.

அப்படி என்ன பண்ணுனா இன்னிக்கு? என்ன அம்மு இன்னிக்கு யார்கிட்ட என்ன வம்பு பண்ண?

அவள் அமைதியாய் நிற்க, சூர்யா அங்கு நடந்ததை சொல்லி முடிக்க, வசந்தி யதார்த்தமாய் 'இது எப்பவும் நடக்குறது தானே'. நீ இப்போ தானே இவ கூட வெளியே போக ஆரம்பிச்சு இருக்க, போக போக உனக்கு பழகிடும்.

வியப்புடன் வசந்தியையும், அனன்யாவையும் பார்த்தான்.

நாட்கள் சில கழித்து..

DEC 15 , காலை முதலே அனன்யா பம்பரமாய் வீட்டில் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தாள். ப்ரியா நிச்சயதார்த்தத்திற்கு போட்டுக்கொள்ள டிரஸ்-களை பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருக்க, மதிய உணவு நேரத்திற்க்கே சூர்யாவும் வந்து சேர்ந்திருந்தான்.

பிரெண்ட் எங்கேஜ்மென்டுக்கே இவ்ளோ அலப்பறையா? அப்போ கல்யாணத்துக்கு....!! ம்ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்.

அவளிடம் வம்பிழுத்துவிட்டு சமயற்கட்டை நோக்கி நடந்தான். வசந்தி சமையல் வேலைகளில் மும்முரமாய் இருக்க, இவனும் ஒத்தாசையாய் காய்கறிகளை நறுக்கியவாறே ஊர் கதைகளை அளவலாவிக் கொண்டே சமையல் செய்து முடித்தனர்.

நான்கு மணிக்கே ரயில் நிலையம் வந்து சேர்ந்திருந்தனர் மூவரும், ரயில் புறப்பட இன்னும் நேரமிருந்தால் நடைபாதையில் இருந்த அமர்விடத்தில்  காத்திருந்தனர். அனன்யாவும், சூர்யாவும் தங்கள் முதல் சந்திப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு பெண்மணி தலையில் பூக்கூடையை சுமந்து கொண்டும், தன் முதுகில் குழந்தையை சேர்த்து அணைத்தவாறு கட்டிக்கொண்டும் பூ விற்றுக் கொண்டிருந்தார். அனன்யா அமர்ந்திருந்த இடம் அருகே வந்தவர் அப்படியே நின்று கொண்டிருக்க, சற்றே நிமிர்ந்து பார்த்த அனன்யாவிற்கும், சூர்யாவுக்கும் அதிர்ச்சி.



சில நாட்களுக்கு முன்னர் அந்த சிக்னல் அருகே பார்த்த அதே பெண்மணி தான்.

அனன்யாவிடம், அம்மா, எப்படி இருக்கீங்க? என்று அன்பாய் கேட்க அதிர்ச்சியிலிருந்து விலகியவளாய் அம்மு 'நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? பாப்பா நல்லாருக்கா?' என  கேட்டது தான் தாமதம் அந்த பெண்மணியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

எத்தனையோ பேர் என்ன கடந்து போய் இருக்காங்கம்மா ஆனா யாரும் இப்படி ஒரு மாற்றத்தை பண்ணதில்லை என்னோட வாழ்க்கைல. எல்லாத்தையுமே மாத்திக்கிட்டேன்ம்மா என்னோட பொண்ணுக்காக. நீங்க அன்னிக்கு சொன்ன அந்த வார்த்தை என்னிக்குமே மறக்க மாட்டேன்.

என் பொண்ணு என்னைப் போல ஆயிடக்கூடாதுன்னு சொன்னீங்க ஆனா இன்னிக்கு மனசு நெறஞ்சு சொல்றேன்ம்மா என்னோட பொண்ண உங்கள மாதிரி தைரியமான பொண்ணா, அறிவுள்ள பொண்ணா கண்டிப்பா வளர்ப்பேன்.

முன்னாடி எல்லாம் மத்தவங்க கிட்ட பிச்சைக்காக கையேந்தி இருக்கேன் ஆனா இப்போ இந்த பூ வியாபாரம் தான். வயிறு நிறையில்லையின்னாலும் ஒரு வேலை செஞ்சு சாப்பிடறோமுங்குற  மனசு திருப்தி போதும்மா.

அந்த பெண்மணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வசந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மித்திரனின் குணம் மொத்தமும் அனன்யாவிடம் இருப்பதை கண்டு பேரானந்தம் கொண்டாள்.

குழந்தையை கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு கிளம்ப தயாரான பொழுது அந்த பெண்மணி இரண்டு முழம் மல்லிகை பூவை கொடுக்க அன்போடு வாங்கிக்கொண்டாள். அதற்குண்டான ரூபாயை அவரிடம் நீட்ட அந்த பெண்மணியோ 'பணமெல்லாம் வேண்டாம்மா' என்ன மறுக்க, அன்பு வேற, வியாபாரம் வேற, இதை வாங்கிக்கோங்க என பணத்தை பூக்கூடையில் வைத்தாள்.

ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு அந்த பெண்மணியின் புன்னகையே பதிலாய் இருந்தது சூர்யாவிற்கு.

அனன்யா அந்த பெண்மணியிடம் பெயரை கேக்க 'லலிதா' எனவும், குழந்தையின் பெயர் 'திவ்யா' என்றும் கூற ஒரு நொடி மௌனமானான் சூர்யா.

ரயில் புறப்படத் தயாரானது. இந்த நிகழ்வு மூவருக்கும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விடியும் முன்னரே ரயில் பாலக்காடு ஜங்ஷன் அடைந்திருந்தது.

சூர்யா, ஆண்ட்டி இன்னும் விடியல, இந்த நேரத்துல தனியா ப்ரியா வீட்டுக்கு போக வேண்டாம். நம்ம வீட்டுக்கு போயிடலாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் அங்க போய்டுங்க.

வசந்தி சற்று யோசிக்க, அம்மா போலாம்மா. ஒரு ஏழு, எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம்.

சரியென்று மூவரும் ஒரு ஆட்டோ பிடித்து மணி கிருஷ்ணன் வீட்டிற்கு புறப்பட்டனர்.

(காலிங் பெல் அடிக்கும் சத்தம்) மணி கிருஷ்ணன் கதவை திறக்க. வா மோனே, எந்தா இத்ர தாமசம்? இவங்க யாரு? உள்ளே வாங்க என வரவேற்றார்.

களை கட்டும் ப்ரியாவின் நிச்சயதார்த்தம்..!!

கருத்துகள்