பிச்சைக்காரன்




நிந்தனை செய்கிலேன் யானுனை
நித்தமும் நின் திருநாமம் சொல்லி
அடி சேர் பக்தனாய் கோலம் பூண்டு
வழியின்றி விழியேங்கி நிற்கிறேன் - வாசலில்

பாராயோ எனை நீயும் அனந்த சயனம்
முடித்தெழுந்து ஜடா முடி பூட்டி வாசனை
திரவியக் குளியல் முடித்து ஜொலிக்கும் ஆபரணம்
சூடி தீப ஆராதனைக்கு தயார் நிலையில் நிற்கும் இறைவா

கேளாயோ நான் பாடும் துதி கொஞ்சம்
மனமிரங்கி முழங்கும் மந்திர புஷ்பங்களில்
என் வேண்டுதல் நின் செவிகளை அடைந்திடுமோ
உன்னிடமும் யாசகம் தான் கேக்கிறேன் - தாராயோ

வாழ வழியொன்று - வரம் கேட்டு நிற்பவனெல்லாம்
உன்னருகில் நாணய ஒலியில் உயிர் வாழும்
ஜீவனெல்லாம் என்னருகில் கந்தலாகி போனது
வாழ்வும் என் உடை போல் - வாராயோ 

என் நாளின் நீளம் காண மாறுவேடம் தேவை
யில்லை "உன் உருவில் பலர் உலவும் உலகமிது"
மதிப்பிற்குரிய திரு'வோடு ஏந்தியே சூரியனின்
காலை விடியும் எம் முகத்திலே பொற் கூரை வாசன் 

நீ தெருவோர வாசி நான் - குசேலனாய் இருந்திருந்தால்
வருவாயோ? பூலோகம் எனக்கு மட்டும் அன்னியமாய்
தெரிகிறதே படைத்தல் பிழையோ இல்லை எம் பிறவி
பிழையோ விடை நீயே அறிவாய் ஆதியே பேதம் பார்க்கும்

குணம் மட்டும் சாதிகளின்றி வேரூன்றி வைத்தாய்
உரிமை இல்லா உறவு சொல்லி பசியின் ராகத்தில் வாய்
திறந்து தாயே.. என நின்றேன் இருப்பவன் இருப்பதை தந்து
போகிறான் - சிலர் இல்லையென்று சொல்லாது வாயில்

வந்ததை தந்து செல்கிறான் வார்த்தைகளாய்
மானத்தை எனக்கு மட்டும் வயிற்றில் வைத்தாயோ?
வாசலில் காலணிகள் காவல் செய்து கிடப்பதோ என்
வேலை வீசியெறியும் ஒற்றை காசில் கரைந்தே போகிறது

ஒரு நொடி முளைக்கும்  ரௌத்திரம் - பச்சிளம்
குழந்தைக்கும் சாப விமோச்சனம் இல்லையோ?
எம்மோடு வாழும் பெண்களின் மானம் காக்க
வருவானோ மாதவன் மௌனம் கலைத்து

திசைகள் நான்கும் பரந்திருக்க பரதேசி
எனக்கு மட்டும் நாதியில்லை - ஆசைகளுண்டு
அடைக்கலமில்லை - வீடுகளுண்டு திண்ணைகள்
இல்லை - இல்லை என்ற சொல்லுக்கு மட்டும் பஞ்சமில்லை

போதிய இடமிருந்தும் எம்மீது சாலை போடும்
போதை வாசிகள் - சிதையுண்ட சதைகளை
பெயர்த்தெடுக்க  கூடுதல் கரமொன்று தாராயோ
இல்லை அதை தாங்கும் மனமொன்று மலை போல்

நிழல் உறைவிடம் அழிக்கும் உயிரினம்
யாவும் என்னைப்போல் ஒரு நாள் மாறும்
காற்றை யாசகம் கேட்டு வீதியில் நிற்பாய்
அடுக்கி வைத்த நோட்டுக்களும் கை விரிக்கும்

வானில் பறக்க ஆசையில்லை பசியின்றி
வாழத் தான் - யாவரும் ஒரு வகை பிச்சைக்காரன்
தான் வெளியில் சிலரும் உள்ளே சிலரும்
வேண்டியதை வேண்டுதல் செய்து கேட்பதனால்
 
சில்லறை தட்டுப்பாடு வராது காத்தருள்வாய்
கடக்கும் பட்டுத் துணிகளில் நாட்டமில்லை
கேள்வி தான் எனக்குள் அவன் தரப் போவது  
பழமா? தேங்காய் மூடியா?

எனக்கும் கொஞ்சம் வரங்கள் தாயேன்
யாசகமில்லா மரணமொன்று - சுயம்
காக்க தொழிலொன்று தருவாயோ?
மீண்டுமொரு பிறவி இருப்பின் அனுப்பி 

 வை எம்மை இல்லை என்றே சொல்லே
இல்லாமல் உழைத்து வாழ்வதற்கு - இரந்து
வாழும் நிலையிலும் இழப்பது தன்மானம் என்றால்
மறு நொடி உயிர் போகும் வல்லமை தாராயோ? 

" இருப்பதை கொடுப்போம் இல்லாதவர்க்கே/இயலாதவர்க்கே "
- அஜய் ரிஹான்

கருத்துகள்