சீதா கல்யாண வைபோகமே


நெஞ்சிற் சுமந்த பூவொன்று அகவைக்கேற்ப
    பருவமெய்திப் புன்னகைத் தேன் சுரந்து
செந்தாமரை தேகம் நிறம் கூட்டி நடையில் 
    நளினம் மிகை கூடி சிங்கார சிகை வருடி
நடை போடும் அன்னமே மணாளன் கை கூடும்

நாள் வந்ததோ? பூட்டி வைத்த ஓராயிரம் கனவுகளுக்கு
    சிறகு முளைத்ததோ திசைக்கொரு சுயம்வரம்
நடத்திடவோ ராமன் உருவோ? மாயவன் திரு'வோ?
    சீதையின் சித்தம் எதுவோ? பாற்கடல் நடுவே
பூமகள் மணமோ? முக்கோடி தேவர் படை சூழ.!

ஆசையாய் தங்க மகள் நீ சூட பூட்டி வைத்த பட்டெல்லாம்
    ஆனந்தமாய் உனைச்  சூடி - நெற்றியில் சுட்டியும்
காதில் ஜிமிக்கியும் ஆட -  நீ கருவான நாள் தொடங்கி கண்ட
    கனவெல்லாம் நிறைவேறும் நாள் வந்ததோ? - வில்லு
டைத்து மண மாலை சூடும் ராமன் எவனோ.?

அவன் வரும் வேளை இதுவென  ஒப்பனை மெருகேற்றி
    மனம் மயக்கும் மல்லிகை குழல் சூடி ண்த்து
பூச்சியெல்லாம் பட்டுடன் நெய்து ஓர் புடவையென உனை
    சுற்றி சிறகு விரிக்க - என்றும் மௌனம் காக்கும்
கொலுசுகள் இன்றோ வீணை வாசிக்கும் அழகு என்னடி.!!

கண்டாயோ..? ஈர்ப்பு விசையை அவன் விழிகளில் - நாண்
    ஏற்றாமல் உன் நாணம் உடைத்தானே என்ன விந்தையோ?
விழி பேசும் மொழிகளில் சப்தம் ஏதடி? மாயலோகம்
    நுழைந்தாயோ? சந்திரன் அவன் உன் வசம் தானடி அச்சம்
இனியெதற்கு.? அச்சாரமாய் நாளொன்று குறித்தபின்னே.!!

இதழ் போல் சிவக்கும் இரு கைவிரல் மருதாணி பூசி
    நாணம் மறைக்க முகம் மூடுகையில் சிவந்த கைகளின்
நிழலில் கன்னம் சிவக்க பூவிதழ் பாதம் நலங்கு பூசிக்
    கொள்ள, கொல்லாதோ நின் அழகு.! மகிழ்ச்சியின் குரல்
வடிவம் உன் புன்னகை திக்கெங்கும் பரவட்டும்.!

சங்கதிகள் சொல்லத் தர தோழிகள் பலர் கூடி
    கிசுகிசுக்கும் ரகசியங்கள் கள்ளப் புன்னகை நீ உதிர்க்க.!
பழம் பெரும் தொடங்கி பூப்பெய்திய உறவுகள் வரை
    படை சூழ வாசலில் வானுயர நிற்கும் முகூர்த்த
காலும் தலைவணங்கி வரவேற்க்காதோ பந்தங்களை.!!

நெய் மணக்கும் பலகாரமும் அறுசுவை உண்டியும்
    நறுமண பன்னீரும் நைய்ய அரைத்த சந்தனமும்
வெற்றிலை மீதமர்ந்த கர்வ பாக்கும் நயமாய்
    நாட்டியமாடும் நாயனமும் அடி வாங்கி கதறும்
தவிலும் கலையூட்டும் கல்யாண வைபோகத்திலே.!!

குறித்த நாளன்று போகாதே நீயும் நான் தருவேன் பெண்
    உமக்கு மனமுவந்து வாராயோ என மாப்பிள்ளை கரம் பற்றி
வேத ஒலியில் அக்னி சாட்சி சொல்ல ராமன் கையில் சீதை
    "கன்னிகா தனமாய்" தாரை வார்த்து கொடுத்திடவே
"திரு மாங்கல்யம்" சூடிக் கொண்டாள் ஜானகி..!!

சீதா கல்யாண வைபோகமே..! ராமா  கல்யாண வைபோகமே..!

- அஜய் ரிஹான்


கருத்துகள்