தரம் பற்றி பேசித் திரியும் "மானமிகு மாக்கள்"
தராசில் அறம் நிறுத்தி உம் சமம் காண்பீரோ?
நிறம் போகும் உம் தரத்தில் எதை வைத்து சமன் செய்வீர்?
நானும் வாய் மூடி ஊமையெனக் கிடந்தேன்
நின் ஊழல் நாற்றம் எம் சமையல் அறை வரை
நுழைந்த பின்னே இன்னும் பொறுமை காப்பேனோ?
தர்மம் இதுவென தலை வாசலில் கொடி அசைக்கிறாய்
அ(த்)தர்மத்தின் நிழலில் பசியின் பாசக் கயிற்றில் மாண்ட
தொண்டர்கள் உன் சுவரொட்டி பசையோ?
தாய் மொழியையும் இரண்டாம் தாரமென்பாய்
ஆட்சி மொழியென்றுரைத்து எம் நெஞ்சில் வாழும்
தமிழுக்கு தாலாட்டு பாடி கள்ளிப்பால் ஊற்ற நினைத்தாயோ?
பொதுவென்று சொல்லியே சாமானியனின் முதுகில்
பொதி சுமை ஏற்றினாய் - குடிக்கும் கால் வயிற்று
கஞ்சிக்கும் சுங்க வரி கேட்டு நிற்கிறாய் இது தான் சாதனையோ?
வல்லரசு நாடென்ற கனவெல்லாம் ஏவுகணையில்
ஏற்றி அனுப்பி விட்டு - நீயோ கண்டம் விட்டு கண்டம்
பாய்ந்து வானத்தின் நீளத்தை அளந்து கொண்டிருக்கிறாய்.!!
அண்டை நாடுகள் நலம் பேண விரைந்த உம் ஆர்வம்
தலைநகர் வீதியில் முழக்கமிட்ட உழவர் நலம் கேக்க
நேரமில்லையோ - இது தான் "ஒரே நாடு ஒரே திட்டமா"?
திராவிடம் சொல்லியே மானுடம் அழித்து விட்டார்
திசைக்கொரு கட்சி சாதிக்கொரு கட்சி கொள்கைக்கொரு
கட்சி - கரைகளில் யாவும் மனிதனின் ரத்தம்
ஆளப் பிறந்தவர் எவரும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை
தகுத்தியற்ற தலைவன் எவனும் அவரை வாழ விட்டதும்
இல்லை - பொது வாழ்வில் சுயநலத்தின் ஆட்சியோ?
குற்றம் சொல்லிப் பயனில்லை தவறின் ஆரம்பம் நீ என்றால்.!
கொடிகளின் வண்ணம் பார்த்து விரலில் மை பூசிக் கொள்ளாதே
சாதிகளின் பெயர் சொல்லி சாவடிகளில் உன்னை விற்காதே.!!
மனித முகமூடி பூட்டித் திரியும் நரிகள் ஆள்பது விதியோ?
தவறென தெரிந்தும் தலைவன் இவன் எனச் சொல்லி அரியாசனம்
தனில் முடிசூட்டி அடிமை சாசனம் எழுதித் தருவது முறையோ?
நாளிதழில் தீப்பிடிக்கும் கோபம் மாலை தொலைகாட்சி
கேளிக்கைகளில் அணைத்து விடாதீர் - மாயத் திரையில்
பொம்மலாட்ட பொம்மைகளோ "நாம்"?
நாற்றமெனத் தெரிந்தும் மூக்கை மூடி வாழ்ந்தது போதும்
நாளைய தலைமுறையேனும் நல்லரசு காணட்டும்.!
நல்லது உன்னில், என்னில், நம்மில் இருந்து தொடங்கட்டும்.!!
இனியொரு இனியொரு விதி செய்வோம்
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக