ஆயுதம் செய்வோம்



தூங்கிக் கழித்து போதும்
துவண்டு எழும் நேரமிது
துயில் நீத்து விழித்திடு தோழா.!!

மௌனம் காத்து போதும்
சூளுரைக்கும் தருணமிது
புது ஆயுதம் செய்வோம்

வேடிக்கை பார்த்தது போதும்
வேங்கையென பாயும் காலம்
கனிந்தது வேட்டை செய்வோம்

களமிறங்கும் வேளையிது
'களை'யெடுக்கும் வேலையது
'காளை'யென பாய்ந்திடுவோம்
மாற்றம் காணும் வேளை
நாற்றம் பாராது இறங்கிடுவோம்
உறுதி படைத்து நடை போடுவோம்

மேடை கோஷங்கள் தேவையில்லை
தவறு கண்டு கர்ஜனை செய்வோம்
தலை கனமில்லா தலைவனாக

தெய்வங்கள் எல்லாம் கருவறை
காணட்டும் சமயம் சொல்லி ஆண்டது
எல்லாம் அண்டம் கடத்தி வேறு உலகம்
அனுப்பி வைப்போம்

சமயற்கட்டில் ஆட்சி செய்தது போதும்
புது சட்டம் நெய்வோம் புயலென 
அரண் தகர்த்து வந்துவிடு - (அ)சூரன்

கண்டு அழுததும் போதும் இழந்ததும்
போதும் - கயிற்றுக்கு பலியிட்டு படையல்
படைத்தும் போதும் - போர் களம்

புகுவோம் கவசங்கள் செய்வோம்
தவறொன்று உறுதியென்றால் மரணம்
ஒன்றே தீர்ப்பளிப்ப்போம் - சரிந்த 

தர்மங்களை அழியா ஸ்துபியென
உயர்த்தி வைப்போம் - சிந்திய உதிரத்தை
எல்லாம் சரித்திரம் உரைக்க செய்வோம் தோழி .!!

போலி சுவற்றுக்குள் நியாயம் பேசி
ஒழிந்தது போதும் அநியாயம் தகர்த்து
தூளாக்கும் எறியும் ஆயுதம் ஆவோம்

அரசியல் செய்வோம் நல் ஆளுமை
படைப்போம் காவல் செய்வோம் களம்
பல காண்போம் 'மாற்றம்' வித்திடுவோம்

புரட்சி எழுதுகோல் திரட்டி புதுமைகள்
தீட்டுவோம் சமுதாய பிழையை திருத்தும்
முன் 'நம் பிழையை' நாமே சீர் செய்வோம் 

பெறுவது தவறென்றால் தருபவன் குற்றவாளி
அரியணை ஆள்பவன் அழுக்கென்றால் பிழை
கருவான இடம் நம் விரல் அன்றோ?

வாய் மூடிக் கிடந்தது போதும் ஊமையாகி
கிடக்கும் உண்மைகளை கிழித்தெடுக்கும்
"ஆயுதம் செய்வோம்" நீயும் நானும்.!!

-அஜய் ரிஹான்

கருத்துகள்