இறைவி




மாயோன் படைத்தலில் உத்தமம் தேடி
தின் தோள் இரண்டில் சிறகுகள் பூட்டி
ஒளியின் வேகம் நெஞ்சினிற் நிறைத்து
வானுயர பறந்தேன் மாந்தரெல்லாம்
சிற்றெறும்பென மாறும் வரை.!!

ஜீவனில்லா புன்னகை வீசும் பொய்
முகம் பல உலவ கண்டேன் கள்ளம்
உரைத்து பொழுதொரு நிறம் மாறும்
உயிரினம் மனிதருள் கலந்திடக் கண்டேன்
வேற்றுமை அதிகமில்லை உருவத்தில்

மரித்துப் போன மனிதம் மீது கூவி
அழைத்து வணிகம் செய்யும் தந்திர
நரிகள் நுழைந்த காடென்றானதோ
நாடு அழித்து விட்ட யாவும் நமக்கு
நாமெழுதிய மரண சாசனமன்றோ?

இதுவோ என் தேடல்? துரியோதனன்
குணம் கொண்டேனோ? மாய
எண்ணம் விலக்கி வ்யாபித்த மெய்
தேடல் நோக்கி சிறகடித்தேன்

போதாது வேகம் இன்னும் கூட்டி பருந்துடன்
சமன் செய்து தேடலின் பார்வை திசையெங்கும்
பரந்து விரிய அமுதூட்டும் மங்கையின் மார்பில்
மெய் மறந்துறங்கும் பிஞ்சின் செவ்விதழ் பாதம்
கண்டேன் - அவள் முகத்தில் இறைவி கண்டேன்.! 

சுமை தலையிலிருக்க வேர்வையோடு நடை
போடும் பெண்ணொருத்தி சுட்டெரிக்கும்
வெயிலிலும் மங்காத புன்னகை வீசக் கண்டேன்
பாதம் பதியும் பாதையெல்லாம் தன்னம்பிக்கை
சுவடு ஒளிர கண்டேன் இறைவியை.!!

சற்றே இளைப்பாற மேக குவியலில் ஒய்யாரமாய்
சாய்ந்திருக்க ஓய்வின்றி சுற்றித் திரியும் இல்லத்தில்
அரசாளும் பணிப்பெண் வேடம் பூண்ட அரசிகள் பலர்
கண்டேன் மாறுவேட உலாவோ? எனக் குழம்பி விழியின்
வீரியம் மொத்தம் ஒன்று திரட்டி அவள் ஆள் மனது ஊடுருவி

அடுக்கி வைத்திருந்த 'ஆசை சுவர்' மீதமர்ந்து புரியாத
புதிர் விடை தேடும் மூளை போலே ஞாபக சுரப்பிகள்
வேகமெடுக்க கொஞ்சம் கொஞ்சமாய் அவிழும் முடிச்சுகள்
அவளுக்கென்று ஆசைகள் ஏதுமில்லை பற்றியவன்
கனவுக்கும் பெற்றதின் ஆசைக்கும் இடையே தோன்றி

மறையும் சில நொடி வானவில் போலே ஆசைகள்.!
சக்கரை பெட்டியில் சிரிப்பை மறைத்து வைப்பாள்
அவள் பாடலின் ரசிகனாய் விசிலடிக்கும் சமையலறை
பாத்திரம் கோபமெல்லாம் அஞ்சறை பெட்டியில் கடுகு-ஆக
மாறிவிடும் - சமையலில் அன்பு மட்டும் குறைவதில்லைஎந்நாளும்.!!

கேளாது தன் ஆசை செய்து கொடு என முணுமுணுப்பாய்
கேட்டால் என் ஆசை நீயென்று உனதாசை நீ மறைப்பாய்
ஆகாயம் விரிந்த என் தேடலின் பொருள் நீயென்று உணர்ந்தேன்
"காதலாகி உயிராகி உயிரளித்து உணர்வாகி தாயாகி
ஒன்றென கலந்து வாழ்வாகி
" மறையும் இறைவியே.!!

போதும் போதும் மாதவா படைப்பில் உத்தமம்
தேடி களைத்தே போனேன் அத்துணை படைப்பிலும்
இறைவி பெண்னென கலந்ததை நானுணர்ந்தேன்
என்னை சுற்றி இறைவிகள் பலர் இருக்க இன்னும்
நானிங்கு தேடல் கொள்வேனோ ? விடை தருவாய்

வந்தடைந்தேன் இறைவிகள் உலவும் பூமிக்கு.!!

- அஜய் ரிஹான்

கருத்துகள்