இருள்



சாதிகள் உண்டோடி சாதிகள் உண்டோடி
வீண் பழி பேசும்  மூடர் கூட்டம் துணையோடி?

ஊனும் சதையும் புடைக்கும் நரம்பும்
அடைத்த காற்றென்றான பின்
சாதியை ஊட்டுவது ஏனடி?
(சாதிகள் உண்டோடி)

நாயும் நரியும் புலியும் பூனையும்
சாதிகள் பார்த்து கூடல் கொள்ளுமோ?
மனிதன் மட்டும் விதிவிலக்கோடி?
(சாதிகள் உண்டோடி)

நிறம் பார்த்து ஒதுக்கும் குணமும்
குலம் சொல்லி பெருமை சாடும்
புத்தியில் அரக்கன் வளர்வதேனடி?
(சாதிகள் உண்டோடி)

தலைமுறை கடந்தும் தலைக்கவசம் சாதியை
தாங்குவது நியாயமோ? கணம் கூடிப்
போனது சாஸ்திர அற நெறியோ?
(சாதிகள் உண்டோடி)

புராணங்கள் பூட்டி வைத்த போதனையெல்லாம்
பிற மத நிந்தனை சாசனம் கேட்டதோ?
சாதிக்கொரு கடவுள் சாயம் தகுமோ?
(சாதிகள் உண்டோடி)

சமயம் சொல்லியவனும் செஞ்சிலுவை தாங்கியவனும்
ஒளி நாயகனும் நயமாய் உரைத்த
நியாயம் ஒன்றே 'சம தர்மம்' அன்றோடி?
(சாதிகள் உண்டோடி)

தீண்டல் தவறென்று முழங்கும் கர்ஜனை
யெல்லாம்  சூரியன் காணும் நாயின்
ஊளையன்றோ? ஒதுக்குதல் முறையோடி?
(சாதிகள் உண்டோடி)

நாற்காலி கால்கள் சாதியின் துணை
பூண்டு கோலோச்சும் தொற்றுநோய் பரவ
வைத்தியம் செய்பவன் மக்களன்றோ சொல்லடி?
(சாதிகள் உண்டோடி)

நாசியில் ஊறிய ரத்த வெறி
சித்தம் பிளரும் போதை உணர்ச்சியோ?
தெளியா நிலையில் வேட்டை சரியோடி?
(சாதிகள் உண்டோடி)

நெஞ்சிற் தீ மூட்டும் தருணமிது சாதிகள்
ஒழியும் பேரண்ட புகையில் காணாமல்
போகட்டும் "கர்வமும், கர்ஜனையும்"..!!


அஜய் ரிஹான்

கருத்துகள்