குருதிப் புனல் - அத்தியாயம் 15



வீட்டிலிருந்த அனைவரிடமும் அனன்யாவையும், வசந்தியையும் அறிமுகம் செய்து வைத்தான்.

மணி கிருஷ்ணன் அனன்யாவிடம், வா மோளே...இந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க என சொல்ல இருவரும் உள்ளே நுழைந்தனர்.

சுவற்றில் வரிசையாய் புதிதும், பழையதுமாய் போட்டோக்கள் அங்குமிங்கும் மாட்டப்பட்டிருந்தது.

பயண களைப்பில் இருவரும் சிறிது நேரத்திலேயே உறங்கி இருந்தனர்.

மணிக்கொருமுறை ஒலிக்கும் பழைய காலத்து கடிகாரம் ஒன்று .என சப்தமிட கண் விழித்தாள் வசந்தி.
டிங்...டாங்..டிங்...டாங்..

அனன்யாவோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

சரி...சிறிது நேரம் கழித்து அவளை எழுப்பலாம் என நினைத்து கீழே ஹாலுக்கு படியில் இறங்கி வந்து கொண்டிருக்க..அங்கே சாஸ்திரிகள் இருவர் எதோ பொருட்களை எடுக்கவும், வைப்பதுமாய் பரபரப்பாய் காணப்பட்டனர்.

மணி கிருஷ்ணனின் மனைவி பார்கவி அந்த பக்கமாய் போக அவரிடம் வசந்தி 'என்னங்க சாஸ்திரிகள் எல்லாம் வந்திருக்காங்க' என கேக்க என்னவென்று சொல்வது என குழம்பியவரே பின்வாசலில் இருந்து வாழை இலை அறுத்து எடுத்துக்கொண்டு வந்த சூர்யாவை பார்த்தாள் பார்கவி.

அது இன்னிக்கு என்னோட தங்கச்சி திவ்யாவோட வருஷ திதி ஆண்ட்டி. அதான் பூஜைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கு. பெருக்கெடுக்கும் அத்துணை கோப உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு நிதானமாய் பதில் சொன்னான்.

ஒரு வருஷம் ஆகியும் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் வெறும் காகிதமாய் உறங்கிக்கொண்டிருந்தது. காவல் அதிகாரிகளின் மெத்தன போக்கென்று சொல்லிவிட முடியாது. அந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் இருந்த மூவரையும் அடையாளம் கண்டு கைது செய்யும் நிலை வரை சென்று தோற்று போனார்கள்.

யார் அவன்? யார் அவர்கள்?

கேரளாவை பின்புலமாய் கொண்ட ஒரு குடும்பம் தான். அவனுடைய அப்பா ஒரு பெரிய கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். சிறு வயது முதலே பள்ளியின் விடுதியிலும், கல்லூரி விடுதியிலும் தங்கி படித்து வந்தான்.

கல்லூரி சேர்ந்து சில மாதங்களில் ஆளும் கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் போதே அவனுடைய அப்பா காலமடைய அங்கிருந்து ஆரம்பபமானது அவனுடைய குரூர குணங்களின் தாண்டவம்.

சிறு சிறு பிரச்சனைகள் என ஆரம்பித்து, எல்லா தவறான பழக்கங்களையும் பழகினான். சேர்க்கை அவ்வாறே அமைந்தது அவனுக்கு. வீட்டிற்கு ஒரே பிள்ளை என செல்லமாய் வளர்த்ததன் தவறை அவனுடைய தாய் லீலாவிற்கு நன்றாக புரிந்திருந்தும் கண்டித்து வளர்க்க வேண்டிய வயதில் அவனை கண்காணிக்காது விட்டு விட்டதை எண்ணி கண்ணீர் விட்டு காலத்தை கடத்திக்கொண்டிருந்தாள்.

அவனுடைய கூட்டாளிகள் இருவர் கதிர், கிரிராஜன். இவர்கள் இருவரும் தான் இவனுடைய எல்லா காரியங்களிலும் துணையாய்  செயல்படுவது. கட்சியின் மூத்த அமைச்சர் சாமுவேல் அந்தோணி யின் மகனும், அவரின் தங்கை மகனும் ஆவார்கள் இவ்விருவரும்.

இந்த அடையாளமே இவர்களின் தவறுகளை மறைக்கும் கவசமாய் இயங்கி வந்தது. சில விஷயங்கள் அமைச்சரின் பார்வைக்கு உட்பட்டும், சிலவற்றை இவர்கள் இருவருமே கையாண்டும் வந்தனர். காவல் நிலையம் வரை எந்தவொரு வழக்கும் சென்றதில்லை, தவறி ஒன்றிரண்டு வந்தாலும் அது 'முதல் தகவல் அறிக்கையாக' பதிவானதில்லை.

காவல் துறையினராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. கட்சியின் பெயரில் செய்யப்படும் அணைத்து வேலைகளிலும் அவன் இருந்ததால் இந்த சூழ்நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது.

அனன்யா விழித்து கீழே வந்தாள். அம்மாவும் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை பார்த்து நடந்தாள்.

என்ன அம்மா கிளம்பலாமா? என்றாள் வசந்தியிடம் கொட்டாவி விட்டவாறே.

போலாம் அம்மு, இங்க திவ்யாவோட திதி பூஜை நடக்குது, நாம மதியானமா போலாம். நாளைக்கு சாயிந்திரம் தானே ப்ரியா நிச்சயதார்த்தம். இவ்ளோ தூரம் வந்துட்டு இதுக்கு கலந்துக்காம தள்ளி நிக்க கூடாது என்றாள் வசந்தி.

அம்மாவின் யதார்த்தமான சிந்தனை அம்முவிற்கு இன்னும் அவள் மீதான அன்பு அதிகமானது.

சரியென இருவரும் பூஜைக்கு தயாராகி வந்து ஹோமம் நடக்குமிடத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

பூஜை நிறைவடைய மதியம் மணி ஒன்றை தாண்டி இருந்தது. அருகில் இருந்த ஆற்றில் காரியங்களை முடித்து வந்த சூர்யாவின் கண்கள் கொஞ்சம் கலங்கியே இருந்தது.

அவனை பார்த்த அனன்யா அதன் காரணம் புரிந்தவளாய், டேய்..பீல் பண்ணாதடா..உன் தங்கச்சி எங்கேயுமே போகல எப்போவுமே உன் கூட தான் இருப்பா. உன்னோட நினைவுல, நீ எங்கயாவது போற அப்போ உன் மேல வீசுற காற்றா இப்படி ஒவ்வொரு உருவமா இருப்பா. கம் ஆன் டா..!

கொஞ்சம் ஆறுதலாய் உணர்ந்தான் சூர்யா.

மதியம் உணவுக்கு பிறகு இருவரும் கிளம்ப தயாரானார்கள். மணி கிருஷ்ணன் வசந்தியிடம், ' நீங்க திவ்யாவோட திதியில கலந்துக்கிட்டது மனசு நிறைவா' இருக்குங்க என கண் கலங்கினார்.

வசந்தி ஏதோ சொல்ல முற்பட 'என்ன அங்கிள் நீங்க, இதுக்கெல்லாம் பீல் பண்ணிட்டு. ப்ரண்ட்ஸ் நாங்க எல்லாத்துக்கும் வந்து நிப்போம். கூல் அங்கிள் என்றாள் அனன்யா.

அங்கிருந்து கிளம்பி ராமின் வீட்டை தேடிப் பிடித்து வந்தடைந்தனர். அவர்களுடைய வீட்டின் பெயர் 'ആനന്ദ കുടിൽ ' (ஆனந்த குடில்)

கேரளாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பெயருண்டு. வீட்டின் பெயரை சொன்னால் தான் அங்கிருக்கும் மக்களுக்கோ, ஆட்டோ ஓட்டுநர்களுக்கோ அடையாளம் தெரியும்.

வழக்கம் போலத் தான், விஷேஷ வீட்டுக்கே உரிய தோரணையோடு ஒலிபெருக்கியில் சமீபத்திய புது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. சுற்றிலும் பச்சை பசேல் என்று அடர்ந்த மரங்கள் நிறைந்து இருந்தது. 

உள்ளே இருந்து ராமும், ஜீவாவும் வந்து இவர்கள் இருவரையும் வரவேற்றனர்.

அனன்யாவிடம் ஜீவா 'எங்க சூர்யாவை காணோம்' சார் வரலையா? என்றான் கண் சிமிட்டியவாறே.

அவன் 5 .30 க்கு வரேன்னு சொன்னான். உனக்கு அடி குடுத்து ரொம்ப நாள் ஆச்சு அதான் வாய் கொஞ்சம் நீண்டுருச்சு என்றாள் கைகளை முறுக்கியவாறே.

சொந்த பந்தங்கள் நிறைய பேர் வந்திருந்தனர். ப்ரியா நாளைக்கு உடுத்தும் ஆடைகளை பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். 

என்ன மேடம், ஆல் செட்? என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்த அனன்யாவை ஓடி வந்து தழுவிக்கொண்டாள். 

வாங்க அம்மா, காலையிலேயே வரேன்னு சொன்னீங்க? 

காலையிலேயே வந்துட்டோம், சூர்யாவோட தங்கச்சியோட திதியாமா இன்னிக்கு, வந்துட்டு கலந்துக்காம எப்படி வர்றது? அதான் கொஞ்சம் லேட்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அருகில் இருந்த இடத்தை சுற்றிப்பார்த்துக் பார்த்து கொண்டிருந்தாள் அனன்யா.
அலைபேசி சிணுங்கியது, மறுமுனையில் சூர்யா தான்.

என்னடா எங்க வந்திட்டு இருக்க? எவ்ளோ நேரம் ஆகும் இன்னும்?

இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்துருவேன். அவங்க வீட்டு பெயர் என்ன சொன்ன? சாலக்குடில இருந்து எவ்ளோ தூரம்?

பக்கம் தான்டா, ஆட்டோ ட்ரைவர்ஸ் கிட்ட வீட்டு பெயரை சொல்லுடா, அவங்க கூட்டிட்டு வருவாங்க. நான் வேணுனா புவதிங்கள் செக்போஸ்ட்  (பஸ் நிறுத்தம்) கிட்ட வெயிட் பண்றேன்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நான் வந்துடுறேன். நீ ரிஸ்க் எடுக்காத.

நான் இங்க இருந்து நிமிஷத்துல செக் போஸ்ட் பக்கத்துல இருக்க பார்க்ல வெய்ட் பண்றேன். நீ வா. எனக்கும் இங்க போர் அடிக்குது. அப்படியே சாங்ஸ் கேட்டுட்டு ஒரு வாக் பண்ணி வரேன்.

சரி, அப்போ பாத்து வா. சொன்னா கேக்க மாட்ட.

 சரியாக 20 நிமிஷம் கழித்து அந்த பார்க்கிற்குள் இருந்த ஒரு மர நாற்காலியில் உட்காந்திருந்தாள்.

யாரோ தன்னை பின் தொடர்ந்து வருவது போல் உணர்ந்தாள். இருந்தாலும் அது தெரியாது போலவே கட்டிக்கொண்டாள்.

சூர்யாவின் போனுக்கு கூப்பிட போது 'Number is out of coverage area '.

அறிமுகம் இல்லா முகமொன்று எதிரே நிற்பதும், மறைந்து நின்று பார்ப்பதுமாய் நடக்க. சிறிது நேரத்தில்  அனன்யா அமர்ந்திருந்த இடத்தின் அருகேயே அவன் வந்து விட்டான்.

ஆனால் அவளிடமோ துளி பதற்றமும் இல்லை. மித்ரனின் மகளாயிற்றே.!

தன்னுடைய கைப்பையில் தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கிறதா என தேடிப்பார்த்தாள். முதலில் தட்டுப்பட்டது  நெய்ல் போலிஷ் தின்னர்.

எதாவது தவறாக நடப்பது போல தெரிந்தால் அதை கைக்குட்டையில் ஊற்றி அவன் முகத்தில் வைத்து அழுத்தி விடுவது என திட்டமிட்டிருந்தாள் அனன்யா.

அவள் எதிர்பார்த்தது போலவே அவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் அருகில் வந்தமர்ந்தான். அவன் பார்வையும், நோக்கமும் தவறென்பதை அவனை பார்த்ததுமே புரிந்து கொண்டாள்.
தொடரும்..!!

கருத்துகள்