முத்தத் தூது




அமுதே.!!

நாணேற்றிய அம்புகளும்
பூட்டி வைத்த தோட்டாக்களும்
என் மார் துளைக்க குறி பார்த்து
நிற்கிறது என் கண்ணே.!!

உனை அள்ளிக் கொஞ்ச மீண்டு
வருவேனா? இல்லை அன்னை
மடியில் மரணத்தை முத்தமிட்டு
இங்கே மடிவேனோ?

திசையெங்கும் செங்குருதி நதியென
பாய்ந்து ஓட செக்கச் சிவந்த  உன்
முகம் ஒரு நொடி தோன்றி மறைய
நிசப்தமாகும் போர்க்களம்

மணியே.!!

மழலையாய் நீ சிந்திய புன்னகை
யெல்லாம் சுழலும் வாளின் சத்தமாய்
காற்றில் ஒலிக்க, பீரங்கிகளின் பேரொலியும்
நீர்த்துளி சப்தமும் ஒன்றென ஆனதோ?

குவித்து வைத்தெரித்த பிணங்களின்
புகையில் கரும் போர்வை போர்த்தி
யுறங்கும் வானத்தில் நானெங்கு தேடுவேன்
உனக்கனுப்ப இறக்கை தூதுவனை?

செல்லமே.!!

உனை சுமந்து உலகின் உயரம் இதுவென்று
நான் காட்ட ஆசை தான்.! விதிவசம் கைதியானேன்
காலம் இசைந்தால் வருகிறேன் - காத்திராது
ரசிக்க கற்றுக்கொள் உலகம் பெரிது.!!

வெட்டுண்ட உடல்கள் வீரம் பேசிக்கொண்டிருக்க
நானும் உன் "இரவுக் கதைகளில் நாயகனாக"
வலம் வருவேன் - தாயவள் சொல்லும் அழகில்
நீயுறங்கும் நாள் வரும் - பிழைத்தால் வருகிறேன்.!!

வீரனே.!!

முகமூடிக்குள் மறைகிற உலகமிது
அன்னம் போல் பிரித்துண்டு வாழ கற்றுக்கொள்
முதுகிலும் மூன்றாம் கண்னொன்று வைத்துக்கொள்
நரிகள் உலவும் காட்டில் நயமாய் வாழ பழகிக்கொள்.!!

ஆழ்மனதின் ஆசைகளுக்கெல்லாம் சிறகு விரித்து
பறக்க கற்றுக் கொடு - நாளையென்ற மாயையை
நம்பி இன்றைய நிஜத்தை தொலைத்து விடாதே.!
உன்னைச் சுற்றி நானிருப்பேன் சுவாசமாக.!!

சிந்திக்கக் கற்றுக்கொள் சூழல் அறிந்து ஆயுதமெடு
கல்லின் தரமறிந்து செதுக்கும் சிறப்பியை போலே
மனிதன் குணமறிந்து தோழமை கொள் - மந்தையில்
ஒன்றாய் மாறாதே சுயம் செய்ய நடைமுறை கொள்.!

மகனே.!!

அன்னையவள் ஆணையெல்லாம் வேதமென
ஏற்று விடு அன்பென்னும் அரசனுக்கு அடிமை
சாசனம் எழுதிக்கொடு - பயமென்ற இருட்டில்
தைரியமாய் வீர வாளெடுத்து சுழற்றி விடு
 
எழுதிய சேதியெல்லாம் உனை வந்தடையுமோ?
அவளுக்கென்று வாசகமில்லை என்னுரையில்
என் உறை வாளின் வேகம் அவளன்றோ? கவி
சொல்ல நேரமில்லை என்னுயிர் காதலிக்கு.!!

ஈன்றவள் இட்ட திலகமின்னும் கரையவில்லை
நான் வரும் வேளை பார்த்து காத்திருந்த அவள்
கண்கள் பூத்திருக்கும் - நேரம் கடந்தால் பெருமிதமாய்
அவள் சொரியும்  துளிகள் சொல்லும் என் வரவை.!!

பொக்கிஷமே.!!

இன்னும் சொல்ல ஆசை தான் புரவி சேனையின்
குளம்படிச் சத்தமும் அங்குமிங்கும் நிலம் பிளக்கும்
குண்டுகளும் பிரமாண்டமாய் பற்றி எரியும் தீயின்
வெப்ப நிலையும், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே

உறைந்த என் கைக் கடிகாரமும் என் கரம் பற்றி
இழுக்க வாள் சுழற்றும் வேளையில் வாழ்த்துரை
சொல்ல நேரமில்லை - தூதனுப்ப ஆசை தான்
முடிவுரையில் ஆசை முத்தமொன்று வைக்கிறேன்

வந்தடைந்த முத்தத்தை கன்னத்தில் வைத்துக்
கொண்டு தாமதிக்காது பதில் முத்தத் தூதொன்று
அனுப்பி வை என் ஆசைக் கனவே..!!

அன்பு முத்தங்களுடன் போர்க்களத்திலிருந்து..!!

- அஜய் ரிஹான் 

கருத்துகள்