குருதிப் புனல் - அத்தியாயம் 16




அதிரப்பள்ளியிலிருந்து சிவப்பு நிற ஸ்கோடா ராபிட் காரில் வேகமாய் சாலக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர் கதிரும், கிரிராஜனும்.

இலஞ்சிப்பாரா அருகே வந்து கொண்டிருக்கும் போது வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த கதிர் இடது புறமாக நிறுத்தி விட்டு எதிரே இருந்த டீ கடைக்கு செல்ல உள்ளே அமர்ந்திருந்த கிரிராஜன் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.

இங்கே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது. அவன் அனன்யாவின் அருகிலேயே வந்து உட்கார்ந்து விட்டான்.

குட்டிக்கு ஸ்தலம் எவ்விட? சுந்தரியாயிட்டு உண்டு, போகான் வரூ என அவள் கையை பிடிக்க முற்பட வெடுக்கென்று எழுந்து ஒட ஆரம்பித்தாள் அனன்யா.

அவனும் அவளை துரத்திக்கொண்டே ஓடி வர, அனன்யா வளர்ந்த பெரிய மரங்களும்,அடர்ந்த செடிகளும் நிறைந்த இடத்திற்குள் நுழைந்திருந்தாள்.

அதற்குள் சூர்யா புவதிங்கள் செக் போஸ்ட் வந்திறங்கி இருந்தான். அனன்யாவுக்கு தொடர்பு கொண்ட போது அவள் எடுக்க வில்லை. அலைபேசியை நிசப்த நிலையில் போட்டிருந்தாள்.

கடைசியாய் அவள் அவனுக்கு வாட்'ஸ் அப்பில் பகிர்ந்திருந்த இடம் (Location) அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த பார்க்கை காட்டியது.

அங்கிருந்து ஒற்றையடி பாதை ஒன்று இருந்தது.

மாலை சாயும்  நேரம் என்பதால் மக்கள் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். கால் ட்ராக்கிங் ஆப்பில் அனன்யாவின் தற்போதைய இடத்தை தேடிக்கொண்டிருந்தான். கடைசியாக அவன் கூப்பிட்ட நேரத்தின் அடிப்படையாய் வைத்து  அவள் இருக்கும் இடத்தை காட்டியது.

அந்த இடத்தை நோக்கி வேகமாய் நடந்தான் சூர்யா.

இந்த இடைவெளியில் இரண்டு கருப்பு ஸ்கார்பியோ வண்டியில் வந்த எதிர் கட்சியை (சாமுவேலின் எதிர் அணியினர்)சேர்ந்த நபர்கள் ஆறு பேர் ஆயுதங்களோடு கதிரையும், கிரிராஜனையும் தாக்க ஸ்கோடா வண்டியை முற்றுகையிட்டனர்.

டீ கடையில் இருந்து ஓடி வந்த கதிர் காரின் கதவை திறக்க முயன்ற போது முகத்தை முகமூடி போட்டு மறைத்திருந்த மர்ம நபர் அவனது வலது கையை வெட்ட அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

காருக்குள் உட்காந்திருந்த கிரிராஜன் சுதாரித்து காரில் இருந்து இறங்கி காட்டிற்குள் மாயமானான். நான்கு பேர் அவனை துரத்திக்கொண்டு பின்னே ஒட, கதிரோ பாதி வழியில் மயங்கி விழுந்து கிடந்தான்.

கதிரை துரத்தி வந்த இருவரில் ஒருவன் மார்பில் ஒரு வெட்டும், இன்னொருவன் இடது காலில் ஒரு வெட்டும் வெட்ட அங்கு கூட்டம் கூடி விட்டது. தொலைவில் காவல் வாகனமும், ஆம்புலன்ஸ் வண்டியும் வரும் சத்தம் கேட்டு அவ்விருவரும் அங்கிருந்து தெறித்து ஓடினர்.

மூச்சிரைக்க ஓடி வந்த  அனன்யா ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து நிற்க, அவள் பின்னாடியே ஓடி வந்துக்கொண்டிருந்த அவனோ சட்டென நின்று பாக்கெட்டில் இருந்த கைபேசியில் கிரிராஜனை அழைக்க, காட்டிற்குள் ஓடியவாறே மறுமுனையில் 'எந்தா பட்டி? நல்ல நேரம் பாத்து கூப்பிட்ட, வைக்கு டா போன' என சொல்லி முடிக்கும் முன்னே கால் தடுக்கி கீழே விழுந்தான். கைபேசி ஒரு பக்கம் விழுந்து சிதறியது.

மரத்தின் பின்னால் நின்றிருந்த அனன்யாவின் முன்னால் வந்து நின்று அவள் எந்த பக்கமும் தப்பிக்க முடியாதபடி இரண்டு பக்கமும் கைகளை வைத்துக்கொண்டான்.

மங்கும் வானம் கொஞ்சம் சிவப்பு நிறமாய் காணப்பட்டது. சலசலக்கும் காற்றும் மௌனமாகிப் போனது. மெய் மறந்து மரத்தின் மீதமர்ந்து பாடிக்கொண்டிருந்த குயில்கள் பாடுவதை சட்டென நிறுத்தியது.

அவன் கைகள் அவள் உடுத்தியிருந்த வெள்ளை நிற ஆடை மீது பட்ட மறுகணம் வானில் மின்னல் பாய்ந்தது போல அவனது கழுத்தின் இடது புறமாய் ஏற்கனவே தயாராய் மூடியை கழற்றி எடுத்து வைத்திருந்த பார்க்கர் பேனாவை சொருகினாள்.

வெள்ளை நிற ஆடை சிவப்பானது ரத்தத்தால் அல்ல அவள் ருத்ரத்தால்.

நிலை குலைந்த அவன் அனன்யா நின்ற இடத்திற்கு மாற சற்றும் யோசிக்காமல்  அவன் குரல்வளை நேரே மீண்டும் அதே பேனா பாய்ந்தது. பேனாவின் மறுமுனை மரத்தின் தண்டில் நின்றது.

பேனாவை அவன் தொண்டையிலிருந்து உருவ, பேனாவில் இருந்து முதல் துளி ரத்தம் சொட்ட சூர்யா வந்து சேர்ந்தான்.

என்ன நடந்தது, ஏது நடந்தது என ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நின்றான்.

அவன் அனன்யாவை பார்த்து திகைக்கவில்லை மரமோடு மரமாய் சாய்ந்திருந்த அவனை பார்த்து தான்.

அவன் தான் வருண். லீலாவின் ஒரே மகன்.

தன் தங்கை திவ்யாவை....!! சரியாக ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில் தான்..!!

திவ்யாவின் திதி முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கும் பொழுதே வருணின் உயிர் அவனை விட்டு பிரிந்திருந்தது.

அவனுக்குள் இத்தனை நாளாய் சொல்ல முடியாமல் அடக்கி வைத்திருந்த ரௌத்திரம் இன்று அனன்யாவின் கைகளில் இருந்த பேனா முனையில் அமைதியடைந்திருந்தது.

கிரிராஜனை துரத்தி வந்த நால்வரில் ஒருவன் வந்த வேகத்தில் அவன் வீசிய ஆள் உயர அரிவாள் அவன் தலையை வெட்டியிருந்தது.

முதல் முதலாய் பார்த்த அனன்யாவிற்கும், இப்போது பார்க்கும் அனன்யாவிற்கும் இடையே இருந்த குணமும், கோவமும் அப்படியே தான் இருந்தது, ஆனால் அவன் அவளை பார்த்த உறவு முறையில் காதல் புதிதாய் மலர்ந்திருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளுடைய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து விட்டு சற்றும் தாமதிக்காது அங்கிருந்து அனன்யாவை கூட்டிக்கொண்டு விரைந்தான்.

அதிர்ஷ்டவசமாக கதிர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

தகவல் அறிந்த அமைச்சர் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அவனுக்கு முதலுதவிகள் ஆம்புலன்ஸிலேயே கொடுக்கப்பட்டிருந்தால் அவன் நேரே அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அமைச்சர் அங்கு வந்து இறங்கும் முன்னரே ஆஸ்பத்திரியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சாமுவேலின் காதுகளுக்கு வருண் பற்றிய செய்தியும் வந்திருந்தது.

அங்கு வந்திருந்த தலைமை காவல்துறை அதிகாரி திரு.ஆனந்த் குமாரிடம் அமைச்சர் சாமுவேல்கோபமான தொனியில் 'நல்லா கேட்டுக்கோ, இந்த விஷயம் சம்பந்த பட்ட ஒருத்தன் பெயர் கூட வெளியே வரக்கூடாது. அந்த ரெண்டு பசங்க வீட்டுலயும் தகவல் சொல்லிடு', எந்த ஸ்டேஷன்லயும் எந்த கேஸும் பதிவாக கூடாது. அவங்கள என்ன பண்ணணுமுன்னு எனக்கு தெரியும்  என சொல்லிவிட்டு தலைமை மருத்துவரை பார்க்க சென்றார்.

அருகில் நின்ற ஆண்டனி மோசஸ்சை (பாலக்காடு இன்ஸ்பெக்டர்) பார்த்து ஆனந்த் குமார் ' ஏலே என்ன நெனச்சுட்டு இருக்கானுவ இவனுங்க. கட்சியின் பேர்ல  அடிச்சுகிட்டு வெட்டிக்குவானுங்க,  இவனுங்க மாதிரி ஆளுங்க  கேஸ் போடுன்னா போடுறதுக்கும், போடாதான்னு சொன்னா அமைதியா போறதுக்கும் நாமென்ன அவனுக வூட்டு நாயாலே? இந்த மூணு பயலுக மேலயும் இருக்க மொத்த கேஸையும் எடுங்கலே. எதுனா பிரச்சனை அப்படின்னு வந்தானுங்கன்னா நாம என்கவுண்டர் பண்ணுனதா பைலை கிளோஸ் பண்ணுங்க. இவனுங்கள கொன்னவனுங்க யவன் யவன்னு கண்டு புடிங்க. அவனுங்களுக்கு தனியா பைலை ஓபன் பண்ணுங்க.' பாத்துக்கலாம். என்ன சொல்லி வேகமாய் கிளம்பிச் சென்றார்.

மழை வேறு பெய்து கொண்டிருந்தது, இதற்கிடையே இலஞ்சிப்பார தொடங்கி சாலக்குடி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மோப்ப நாய்களும், சிறப்பு காவல் படை வீரர்களும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

முதலில் கிரிராஜனின் உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது, அரைமணி நேர தேடலுக்கு பிறகு புவதிங்கள் செக் போஸ்டிலிருந்து ஒரு தனி படை காவல் குழுவும் தேடத் தொடங்கி இருந்தது.

அனன்யாவும், சூர்யாவும் நீண்ட நேர அமைதிக்கு பிறகு, சூர்யா அவளிடம் 'அவன் தான் இன்னிக்கு என்னோட தங்கச்சி என்கூட இல்லாம போனதுக்கு காரணம்'. இத்தனை நாளா எனக்கும் அவனை எதாவது செய்யணும் அப்படிங்கிற எண்ணம் இருந்துச்சு, ஆனா என்னோட அப்பா அடிக்கடி சொல்ற 'எதுவும், எப்பவும் சட்டப்படி தான் நடக்கணும்' இந்த நினைப்பு என்ன தடுத்துகிட்டே இருந்துச்சு.

சரி வா, நாம போய் போலீஸ் ஸ்டேஷன்ல இங்க நடந்ததை சொல்லி இன்போர்ம் பண்ணிடலாம் என்றாள் அனன்யா.

ஒரு கணம் அதிர்ந்தான் சூர்யா. என்ன சொல்ற? புரிஞ்சு தான் பேசுறியா? நீ அவனை வேணுமுண்ணு அப்படி பண்ணலையே. தற்காப்பிற்காக தானே செஞ்ச. அவன் அப்படி ஒன்னும் நல்லவனும் இல்ல. இப்போ வேண்டாம். காலையில நாம ரெண்டு பெரும் ஸ்டேஷன் போய் என்ன ஏதுன்னு பாக்கலாம். இப்போ வா வீட்டுக்கு போலாம். தேடிட்டு இருப்பாங்க.

இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டிற்கு வந்திறங்க, வாசலிலேயே காத்திருந்தாள் வசந்தி.

என்னடி டிரஸ்ல ரத்தம் சிந்துன மாதிரி இருக்கு? என்னாச்சு என கேக்க இருவரும் உறைந்து போயிருந்தனர்.

கருத்துகள்