இரு துருவத்தின் இடை
வெளியில் செவி நிறைக்கும்
சப்தங்கள் நிறமில்லா வான
வில்லாய் நான்.!!
நிசப்தம் கலைக்கும் காட்சிகள்
காற்றாய் நுழைந்து உணர்தலின்
பிறப்பாய் கண் முன்னே
ஓடும் செய்திகள்.!
மழலை மொழிகள் கவி
பாடும் பேரழகை என்
செவி ரசிக்க துள்ளிக்
குதித்தது மனம்
மூடிய மனதோடு திறந்த
வெளியில் மென்று உமிழும்
மூடன் முகத்தில் ரேகை
பதிக்க ஆசைதான்
நிழற்குடையின் நிழலில் காதல்
பிரச்சாரம் செய்யும் வேட்பாளன்
செல்லமாய் முணுமுக்கும் வாக்குறுதிகள்
கள்வனின் ரகசியங்கள்
அன்றாட காய்ச்சியின் அழுக்கு
கிழிசல் நோட்டுக்குளே அரசாளும்
மன்னனுக்கு அரியசான செலவும்
உள்ளடக்கம் சுமை
பசியில் குரைக்கும் நாயும்
பகிர்ந்துண்ண மறுக்கும் நாகரீக
விலங்கினம் - நுட்பத்தின் உச்சம்
மனிதத்தின் வீழ்ச்சி
நேரம் தின்னும் கையடக்க
அலைபேசிக்குள்ளே அடைந்து கிடக்க
ரசிக்க ஆயிரமிருந்தும் கைதியென
கிடப்பது விதி
வீசியெறிந்த மக்கா குப்பையெல்லாம்
வருங்கால தலைமுறைக்கு விதைத்து
வைக்கும் வினையன்றோ மழுங்கிப்
போனது அறிவு
போதும் காட்சிகள் சட்டென
கலைய இருள் போர்வைக்குளே
மீண்டும் உலகம் சுழல
நிஜம் திரும்பியது
பிஞ்சொன்று என் கைவிரல்
பிடித்து வாவென்றழைக்க சாலை
யெல்லாம் மௌனராகம் நிறமில்லா
கண்களில் சிறகுகள்
சாலை கடக்கும் நேரம்
வரை வண்ணத்து பூச்சிகள்
நிறமில்லா வானில் முத்தமிட்டு
கொஞ்சியது - அழகானது நொடிகள்.
"கண் தானம் செய்வோம் - நாம் ரசித்ததை பிறரும் ரசிக்க"
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக